மழையென்பது யாதென

நீண்டு படுத்திருந்த
நெடு நிழல்கள்
நிலத்தை விட்டு
வேண்டா வெறுப்பாக
விலகிக் கொள்ள
நிலையற்று உலையும்
நிறம் மாறும் மேகங்கள்
நீல வான்பரப்பில்
ஒன்று கூடி
உள்வாங்கிக் கொள்கிறது
ஒன்றுமாறியாச் சூரியனை ..
மழை எனும் பெண்ணின்
என்றும் உலராத
உதடு உதிர்த்த
ஈரத் தாலாட்டில்
மெல்ல மெல்ல
நனைந்து தூங்குகிறது
நாளெல்லாம்
காய்ந்து கிடந்த பூமி ..
ஈரம் சொட்டும்
மரங்களை இடைவிடாது
தலைதுவட்டும் காற்று
இனி போதும் என்று
கூறிக்கொள்ள
கை கொட்டிச் சிரித்துக்
கொண்டே இருக்கிறது
வானம் .
வழியும் மழைத் துளியின்
ஈர நினைவுகளில் தன்
இருப்பினைத் தொலைத்து
இலக்கில்லாமல் அலைகிறது
நதியிடம் கடல்.
மரங்களற்ற வெளி கடந்து
மௌனமாக கரைந்து
சட்டென மறைந்து
சென்று விடுகிறது
சாரலின் சங்கீதம்.
இன்னுமோர் நாள்
இது போல்
பூமி தேடி
புதிய ராகத்துடன் வரும்
இந்தச் சாரல் பெண்ணின்
சமத்துவ சங்கீதம்.
அதுவரை....
ஈரம் காயாமலே
பூத்துக் கிடக்கும்
இப் புனித பூமி .
குறிப்பு : இந்தப் படைப்பு எழுத காரணமாக இருந்து அதற்கான தலைப்பும் கருவும் தந்த கனாக் காண்பவன் அவர்களுக்கு நன்றிகள் ...