கனவே கலைந்து போ பாகம்- 21 துப்பறியும் திகில் தொடர்பலவீன மனதுள்ளோர் படிக்க வேண்டாம்
................................................................................................................................................................................................
முன் கதைச் சுருக்கம்
பிரசாத்தின் மேல் கொலை முயற்சி நடந்ததை அறிகின்றனர் காவல் துறை அதிகாரிகள்..
................................................................................................................................................................................................
டாக்டர் மேகலாவுக்கு ஃபோன் போட்டார் டிஎஸ்பி முரளி. “கேஸ் ஃபைல் எல்லாம் பாத்துட்டீங்களா? ”
எதிர்முனை ஏதோ சொல்லி, வைத்தது.
“சார். சூட்கேஸ் பாலா கிட்ட போய்ச் சேரலையாம்” - ஏசி ஆனந்த்திடம் அறிவித்தார் இன்ஸ்பெக்டர் மூர்த்தி.
எதிர்பார்த்தது தானே? ம் கொட்டினார். “பாலா ஏன் கேட்கலையாம்? ”
“ அந்த டிராமா நடக்கலியாம். இன்னிக்கு வரைக்கும் போட முடியலியாம்! அதனால அப்படியே விட்டுட்டாராம்! ”
“ பிரசாத் மேன்சனை சோதனை போட்டீங்களா? சந்தேகப்படுற மாதிரி யாரும்? முக்கியமா பொம்பள வேஷம் போடுற அந்த பாலா?”
“ யாருமில்ல சார்... ”
”முக்கியமா பொம்பள வேஷம் போடுற அந்த பாலா?” திருப்பிக் கேட்டார்.
” பாலா குள்ளம் சார்; நந்தினி நல்ல உயரம்; தான்யா கூட உயரம்தானாம்- நந்தினியோட மாமா சொல்லியிருக்கார்.... ! அப்புறம் இந்தப் புத்தகம் கிடைச்சுது. ”
ஒரு புத்தகத்தை நீட்டினார். ”மரணத்துக்கு அப்பால் ” என்றது தலைப்பு!
“ யாரோட புத்தகம் இது? ”
“ சார், ஒரு சட்டையை யாரோடதுன்னு கேட்டாலும் மூணு பேர் உரிமை கொண்டாடுறாங்க. இந்த புத்தகத்து ஓனர்கள் பாலா, வேல்முருகன், பிரசாத்! ”
புத்தகத்தை நிதானமாகப் புரட்டினார். சிவப்பு மையால் அடிக்கோடிட்டு சில வரிகள்!
“கெட்ட ஆவியை அழிக்க அது ஆக்கிரமித்த உடம்பின் தலையைச் சிதைக்க வேண்டும்! ”
“ தலையைச் சிதைக்க வேண்டும்!..................... ”
“ தலையைச் சிதைக்க வேண்டும்!....................... ”
பாறாங்கல்லால் தலை பிளந்த நிலையில் நந்தினி ! ! ! ! !
டாக்டர் மேகலாவின் பிரத்யேக அறை!
டாக்டர் மேகலா, அதிகாரிகள் ஆனந்த் மற்றும் முரளி....வேறு யாருமில்லை!
ஆழ்நிலை உறக்கத்தில் பிரசாத்!
ஹிப்னாடிஸ மயக்கத்தில் தனது ஆனந்தமான குடும்பத்தை நினைவு கூர்ந்தான் பிரசாத்.
போதைப் பொருள்! போதைப் பொருள் கடத்தல்காரர்கள் மேல் நெருப்பாக வெறுப்பைக் கக்கினான்.
அவனாகவே நந்தினியைப் பற்றி சொன்னான்.
“ தேவதைங்க அவங்க ! விண்ணோடு விளையாடும் பெண்ணந்த பெண்ணல்லவோன்னு ஒரு பாட்டு வரும்! அப்படிப்பட்டவங்க! கடின உழைப்பாளி ! மற்றவங்களுக்கு என்ன வேணும்னு புரிஞ்சிகிட்டு செய்யறவங்க. எனக்குத் தூண்டுகோலே அவங்கதான் ! ”
ஆழ்நிலை உறக்கத்திலும் புன்னகைத்தான்.
திடீரென்று அழுதான்.
“ கிரகப்பிரவேசம் அன்னைக்கு ராத்திரி அவங்க வீட்டுல தங்கியிருந்தேன் ! அப்பத்தான் வெண்ணிற உருவமா அவங்களைப் பார்த்தேன். ஒரு கெட்ட ஆவி தன்னோட உடம்புக்குள்ள போயிடுச்சுன்னாங்க. முதல்ல இது எல்லாம் என்னோட பிரமைன்னு நினைச்சேன்! ஆனா என்னோட அனுபவங்கள் வேறு சிலருக்கும் வந்ததும் அது பிரமையில்லன்னு நம்ப ஆரம்பிச்சேன் !
அந்த கெட்ட ஆவி தெருவுல நடந்து போறதையும் அன்னைக்குப் பார்த்தேன்- கருப்பு சுரிதார் போட்டுட்டு.... ! அத உறுதிப்படுத்திக்க காமெரா பதிவுகளைப் பார்த்தேன். பார்த்த மாத்திரம் தெரிஞ்சுகிட்டேன், அதிலே கழுத்துல தாலியோட இருந்தது நந்தினி இல்லே, நந்தினியோட டூப்புன்னு !
டூப்பை உட்கார வச்சிட்டு கெட்ட ஆவி எங்க போகுது?
கடற்கரை பக்கமா தீக்குச்சி, தீப்பெட்டிகளை வச்சி போதை மருந்து கடத்தல் பற்றி செய்திப் பரிமாற்றம் நடந்தது. கெட்ட ஆவிக்கு ஐந்நூறு ரூபாய் சில்லரை தந்தபோது கைப்பைல தீக்குச்சிகளைப் பார்த்தேன். செய்திகள் வர்றது கெட்ட ஆவிக்குன்னு தெரிஞ்சிகிட்டேன்.
கெட்ட ஆவி படு சமர்த்து ! சந்தேகம் வராதபடிக்கு தன் சேலை கலரை வச்சே குழந்தைகளை செலக்ட் பண்ணும். அவங்களை கிரேஸ் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் வயித்துல போதை பாக்கெட்டுகளை வைக்கிறது கெட்ட ஆவிதான். அன்னைக்கு அதோட ஆரஞ்சு கலர் புடவை கிழிஞ்சி போச்சு. கிழிஞ்சித தைச்சிட்டு போச்சு ! ஏன்னா அன்னைக்கு சிக்னலே ஆரஞ்சு கலர்தானே?
ரோஸ் மேரி விஷயத்துல நான் குட்டையை குழப்பிட்டேன்; போலிசுக்கு இன்பார்ம் பண்ணிட்டேன்! குழந்தைய கிரேஸ் ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போகக் கூட நேரமில்லாத கெட்ட ஆவி ப்ரியம் அபார்மெண்டுல வச்சே குழந்தையோட வயித்துல போதை பாக்கெட்டுகளை வச்சது. போதை பாக்கெட்டுகளுக்கு இடையில நான் கொடுத்த நூறு ரூபாய்த் தாளையும் அவசரத்துல வச்சிடுச்சு. சின்ன சதுரமா மடிச்ச ரூபாய் ! அதுல நான் எழுதின மொபைல் நம்பர் கூட இருந்தது! ”
இப்போது முரளி குறுக்கிட்டார்.
“ போலிஸ் பார்வைக்கு எந்த ரூபாய்த் தாளும் வரலியே? நீ எடுத்து மறைச்சு வச்சியா? ”
“ நான் மறைச்சு வைக்கல சார்! நான் பார்த்தேன்! எனக்கு அழுகின வெங்காய வாடை வந்தது! அப்புறம் நான் மயக்கமாயிட்டேன் ! ”
மேகலா குறுக்கிட்டார்.
“ சார், ரூபாய் நோட்டை நான் கூடப் பார்த்தேன். அதைப் பற்றி நாம அப்புறம் பேசுவோம். முதல்ல இவன் ஸ்டேட்மெண்ட்டை முடிச்சிடுவோம் ! ”
“ மேலே சொல்லு பிரசாத் ! ”
“ அந்த கெட்ட ஆவி ஒரு கொலை செய்ததையும் பார்த்தேன் ! ”
“ என்னது? ”
“ ஆமா, ரெஹனா தொழில் நுட்பப் பூங்காவுக்குப் போனேன். அங்கே நந்தினியோட டூப் காபி சாப்பிட வந்தா. நந்தினி பொதுவா விலை உயர்ந்த ஹை ஹீல்ஸ் செருப்புதான் போடுவாங்க. ஆனா “அந்த நந்தினி ” ரப்பர் செருப்பு போட்டு வந்தா. அதனால அது டூப்புன்னு தெரிஞ்சுகிட்டேன். அப்போ செண்ட் விக்கற பொம்பளை ஒருத்தி வந்தா. காலில விலை உயர்ந்த ஹை ஹீல்ஸ் செருப்பும் கால் நகங்களுக்கு நீலக்கலர் நெயில் பாலிஷூம் போட்டிருந்தா. டூப்போட காபியில விஷத்தைக் கலந்தா. நான் எச்சரிக்க ஓடினேன். என் கண் என்னை ஏமாத்திடுச்சு. யாரைப் பார்த்தாலும் நந்தினியா தெரிஞ்சாங்க. அப்படியும் விடாம ஆபிஸ் போனேன். அங்கே கெட்ட ஆவி நின்னுட்டிருந்தது- காலில ஹை ஹீல்ஸ் செருப்பும் நீலக்கலர் நெயில் பாலிஷூமா! நான் அதிர்ச்சியடைஞ்சேன்! அப்பத்தான் வெண்ணிற உருவமா நந்தினி வந்தாங்க! "என்ன பிரசாத்! விஷம் வச்சவ கிட்டேயே விஷத்தை பத்தி பேச வந்தீங்களா " - ன்னு கேட்டாங்க! நான் ஓடினேன்! எனக்குப் பாதுகாப்பா என் கூட அவங்களும் ஓடி வந்தாங்க! " கெட்ட ஆவி கொலை செய்ததை பார்த்துட்டீங்க ! ஜாக்கிரதை பிரசாத் ! அது உங்களையும் கொல்ல முயற்சிக்கும் " -னாங்க ”
“எதுக்கு டூப்பை கெட்ட ஆவி கொலை பண்ணிச்சு? ”
“ ரெஹனா தொழில் நுட்பப் பூங்காவில டூப்பை உட்கார்த்தி வச்சிட்டு கெட்ட ஆவி போதை கடத்தல் வேலைகளை பண்ணிட்டிருந்தது! ! ராத்திரி ரிசப்ஷனிஸ்டா அங்க அவ இருக்கும் பட்சத்தில் போலிஸ் எப்படி சந்தேகப்படும்? இதை வச்சி டூப் பிளாக் மெயில் பண்ணியிருக்கு! அதனால கெட்ட ஆவி நிரந்தரமா அதோட வாயை அடைச்சிடுச்சி! ”
மேகலா போலிஸ் அதிகாரிகளைப் பார்த்தார். சுஜாதாவுக்கு போதை மருந்து கலக்கி கொடுத்துக் கொன்றது நந்தினி ! அதை நேரில் பார்த்த ஒரே சாட்சி பிரசாத் ! அதனால்தான் நந்தினி பிரசாத்தைக் கொல்ல முயற்சி செய்திருக்கிறாள் ! இதெல்லாம் உண்மைதான் என்கிற பாவனையில் தலையசைத்தனர் முரளியும், ஆனந்த்தும்.
“ அப்புறம் சொல்லுங்க? ”
சற்று நேரம் மௌனமானான் பிரசாத். ஆனந்த்தும் முரளியும் முகத்தில் ரத்தமிழந்தனர்.
தொடரும்