மருத நிலத்தில் ஒரு காதல் கதை

இளமையில் மருத நிலத்தில் வாழ்ந்து மீண்டும் ஒருமுறை அந்த சொர்கத்தை திரும்பிப் பார்க்க துடிப்பவர்களுக்கும், மருத நிலத்தைக் காண விரும்புவர்களுக்கும் இக்கதையை பணிவன்புடன் சமர்ப்பணம் செய்கிறேன்.

*******************************************************************************************************************************************************

ஒவ்வொருவருக்கும் காதல் ஒரு வித்தியாசமான அனுபவம். அது ஒரு சிலருக்கு வெற்றியில் முடிந்திருக்கும், ஒரு சிலருக்கு தோல்வியில் முடிந்திருக்கும், இன்னுமொரு சிலருக்கு பெட்டகத்தில் பூட்டிவைத்த அனுப்பப்படாத காதல் கடிதங்களைப் போல் மனதில் நிரந்தர பொக்கிசங்களாக நிறைந்திருக்கும். மொத்தத்தில் இளமை காலத்தில் ஒருதலை காதலை கூட உணராதவர் இவ்வுலகில் ஒருவரேனும் இருக்க இயலாது என்பதே உண்மை. ஒரு உண்மையான காதல் என்பது ஒருவரை கண்டவுடன் மலர இயலாதென்பதையும் அனைவரும் அறிவீர்கள். அதற்கு இரு மனங்கள் ஒன்றையொன்று பழகி, புரிந்துகொள்ள வேண்டும் அல்லவா? இவ்வகையான காதல் ஒருவரை தலை நிமிர்ந்து வாழவும் செய்யும் அதே சமயம் ஒழுக்கம் தவறினால் அதற்க்கு எதிர்மறையாக வாழவும் செய்யும். இப்படிதான் ஒரு மனிதன் வாழ வேண்டுமென்று அவனது வாழ்க்கையை நெறிப்படுத்த இலக்கியங்களும், இதிகாசங்களும் தமிழ் மொழியில் மட்டுமல்ல இவ்வுலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் உலா வருகின்றன. இருந்தும் அவற்றை படித்து உணர்ந்திட இங்கு எவருக்கும் காலமும், சூழ்நிலையும் சரியாக வாய்க்கப்படவில்லை என்றாலும் கூட சிலரது வாழ்க்கையே சரியான உதாரணமாக அமைகிறது என்பதிலும் ஐயமில்லை. நேயர்கள் காணவிருக்கும் இக்கதையும் கூட அதை சார்ந்ததே.

பார்வைக்கு எட்டிய தூரம் வரையில் வயலும் அதை சார்ந்த இடமும் பசுமையாக தெரியும் ஒரு அழகிய கிராமம் அது. ஆங்காங்கே தென்னை மரங்களும், பனை மரங்களும், வேங்கை மரங்களும், நாட்டுக் கருவேல மரங்களும் விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்திருந்தன. தெருக்களில் உள்ள வீடுகள் பெரும்பாலும் தென்னைமர மட்டைகளை கொண்டும், பனைமர மட்டைகளை கொண்டும் கூரை அமைக்கப்பட்டிருந்தது. காலை பொழுதில் புல் மீது படர்ந்திருந்த பனித்துளியை கதிரவன் மெல்ல மெல்ல ஆட்கொண்டான். வெள்ளம் சலசலவென்று கரைபுரண்டோடும் ஆற்றின் இரு கரைகளிலும் பூக்கள் பூத்துக் குலுங்கின. சாலை ஓரத்தில் உள்ள ஒரு அரச மரத்தில் பறவைகள் கானம் பாடிக்கொண்டு கும்மாளம் அடித்தன. பசுமை படர்ந்திருக்கும் வயல் நடுவே கம்பீரமான தோற்றத்துடன் வீற்றிருக்கும் சிவன் கோயிலில் மணி ஒலிக்கும் சப்தம் டிங்…டாங்…டிங்... டிங்…டாங்…டிங்... என்று பறவைகள் பாடும் கானத்திற்கு பின்னிசையாக பிணைந்து குளிர்ந்த இளம் தென்றலோடு கணீரென்று எதிரொலித்தது. அவற்றை தலையாட்டி ரசித்து ஆரவாரம் செய்வதுபோல் நெற்கதிர்களும், மரங்களின் இலைகளும், முள் வேலியின் மீது படந்திருக்கும் செடி கொடிகளும் ஒன்றையொன்று உரசிக்கொண்டு கலகலவென ஒலியை எழுப்பின. எந்தவித இடையூறும் அல்லாமல் புல்வெளியில் நிம்மதியாக கால்நடைகள் மேய்ந்துக்கொண்டிருந்தன. உழவர்கள் தெம்மாங்கு பாடிக்கொண்டு மாட்டு வண்டியில் செல்லும் சப்தம் “டிக்டாக்... டிக்டாக்” என்று கேட்டது. அடடா... இந்த எழில் கொஞ்சும் மருத நிலத்தை காண ஆயிரமாயிரம் கண்கள் கூட போதாதே என்று எண்ணிக்கொண்டிருக்கும் சமயம் சிறுவர்களும், சிறுமியர்களும் பேசும் சப்தம் எங்கிருந்தோ கேட்டது. ஆ... அதோ... தமிழிசை தன் தோழிகளோடு பேசிக்கொண்டே வயல்நடுவே உள்ள பாதையோடு பாடசாலைக்கு சென்றுகொண்டிருக்கிறாள். அவர்களை பின்தொடர்ந்து முகிலனும் அவனுடைய தோழர்களும் ஆடிப் பாடிக்கொண்டு கோமாளித்தனமான செயல்களை செய்தவண்ணம் அவர்களும் பாடசாலைக்கு சென்றுகொண்டிருகிறார்கள்.

அதற்குள் அவர்கள் பேசிக்கொண்டே ஆற்றின் கரைக்கு அருகாமையில் வந்துவிட்டனர். அப்பொழுது முகிலனுடைய தோழன் பார்த்திபன் “டேய்... அவளுகளோட ரெட்ட சடைய பாருடா குரங்கு வாலு போலருக்கு" என்றான். அதற்கு மறுமொழியாக "இது போல கேலி செஞ்சா பல்ல ஒடச்சிடுவேன்" என்றாள் தமிழிசையின் தோழி பூங்குழலி. "உனக்கே ரெண்டு பல்லு இல்ல டி… போடி" என்றான் முகிலனின் தோழன் ஒருவன். “ஏய்... வாடி... போடி... சொன்ன தமிழ் ஐயாகிட்ட மாட்டிவிட்டுடுவேன்” என்றாள் தமிழிசையின் தோழி ஒருவள். "டேய்... குரங்குகிட்டலாம் என்னடா பேச்சி வேண்டி கெடக்கு… போங்கடா" என்றான் முகிலனின் மற்றொரு தோழன். “பொம்பளைங்ககிட்ட வம்பு வளக்குறதுக்கு உங்களுக்குலாம் வெக்கமா இல்ல?” என்றாள் தமிழிசையின் மற்றொரு தோழி. இவ்வாறு இந்த கேளிக்கையான சண்டை போய்க்கொண்டிருக்கும் பொழுது முகிலனுடைய தோழன் சீனிவாசன் சிறு கல்லை எடுத்து தமிழிசை தோழி மலர்கொடியின் மீது வீசியெறிந்தான் எதிர்பாராத விதமாக அந்த கல் தமிழிசையின் மேல் பட்டது. தமிழிசைக்கும், முகிலனுக்கும் முன்னொரு நாளில் ஏற்ப்பட்ட குரோதத்தின் காரணமாக முகிலன்தான் தன்மீது கல் வீசினானென்று யூகித்து ஆத்திரத்தில் அவனை அடித்து ஆற்றில் தள்ளி விட்டுவிட்டாள். பிறகுதான் தெரிந்தது தன்மீது கல் எறிந்தது முகிலன் அல்ல என்று; ஆத்திரத்தில் தான் செய்த தவறை எண்ணி தமிழிசை கத்தினாள், கதறினாள். முகிலனுடைய தோழர்களும், தமிழிசையினுடைய தோழிகளும் கூச்சல் இட்டார்கள் ஆனால் அதற்குள் முகிலனை வெள்ளம் வெகு தூரம் வரையில் அடித்து சென்றுவிட்டது. ஆற்றில் நீந்திப் பழக்கப்பட்ட அந்த சிறுவன் கரையில் இருந்த கோரை புல்லை பிடித்து கொண்டு சிறிது நேரத்தில் கரையேறினான். பழிக்கு பழி வாங்க வேண்டுமென்ற எண்ணத்துடன் தமிழிசையை நோக்கி தீராத ஆத்திரத்துடன் ஓடி வந்த அவனுக்கு அழுதுகொண்டிருந்த தமிழிசையை கண்டவுடன் ஆத்திரம் தணிந்து மனதில் ஒரு பரிதாபம் உண்டாகியது. கரையேறி வந்த முகிலனை கண்டவுடன் படபடப்பின் வாயிலாக வந்த கண்ணீர் பிறகு மெல்ல மெல்ல ஆனந்த கண்ணீராக அரும்பி புன்னகை பூத்தது தமிழிசைக்கு. தனக்காகத்தான் தமிழிசை கண்ணீர் வடித்தாளென்று முகிலன் மட்டுமல்ல இருதரப்பில் உள்ளவர்களும் அப்பொழுது உணர்ந்தனர். அன்று வரை இரு தரப்புக்குமிடையே நடந்துவந்த யுத்தம் முடிவுக்கு வந்து நட்புறவு தளிர்த்தது. ஒவ்வொரு நாளும் அவர்கள் அனைவரும் தோழமை என்னும் தோணியிலே பயணம் செய்தனர். ஒருவருக்கொருவர் விட்டுகொடுக்காமல் தங்களது நட்பின் ஆழத்தை வெளிப்படுத்தினர். தங்களுடைய மகிழ்ச்சிகளையும், சோகங்களையும், ஆத்திரங்களையும், அழுகைகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர்.

விடுமுறை நாட்களில் அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஊர் எல்லையில் இருக்கும் ஐயனார் கோயிலில் கூட்டாஞ்சோறு செய்து உண்டும், கருவேல மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடியும், வயல்வெளியில் இரைத்தேடி அமர்ந்திருக்கும் கொக்கு, நாரை, நீர்க்கோழி முதலிய பறவைகளை சத்தமிட்டு விரட்டியும் மகிழ்ந்தார்கள். அதில் ஒருசிலர் மிதிவண்டியின் சக்கரத்தை உருட்டிக்கொண்டு ஓடி வந்தார்கள். இன்னுமொரு பிரிவில் ஆண்களும், பெண்களும் இணைந்து ஒளிந்துப் பிடித்தல், ஓடிப் பிடித்தல், கண்ணாமூச்சி, கீச்சு கீச்சு தாம்பாளம், குலை குலையாய் முந்திரிக்காய், உப்பு மூட்டை, பச்சைக் குதிரை, ஆடுபுலி ஆட்டம், பாண்டி, கரகர வண்டி, ஒருகுடம் தண்ணி ஊத்தி, கொக்கான், ஒத்தையா ரெட்டையா போன்ற விளையாட்டுகளிலும், வேறொரு பிரிவு கோயிலுக்கு அருகில் உள்ள குளத்தில் குதித்து கும்மாளம் அடித்தும், தூண்டில் போட்டு மீன் பிடித்தும், காற்றில் பட்டம் பறக்கவிட்டும், பனைமர ஓலையில் செய்த காற்றாடியை சுழலவிட்டும், பனங்காய் வண்டியுருட்டியும் மகிழ்ந்தார்கள். சில ஆண்கள் மட்டும் தனிப் பிரிவாக சென்று கிட்டிப் புள்ளு, பம்பரம், மரம் ஏறுதல், கோலி, கபடி போன்ற விளையாட்டுகளிலும், ஒருசில பெண்கள் மட்டும் தனிப் பிரிவாக பல்லாங்குழி, தாயம், தட்டாங்கல், சொக்கட்டான், சுழல் கயிறு, போளையடி, வளையல் விளையாட்டு, பாம்பும் ஏணியும், மூன்றுகல் ஆட்டம், கும்மி, திரிதிரி, ஊசி நூல் கோர்த்தல், அம்மானை, அல்லி மல்லி தாமரை, பாட்டி பேத்தி, சில்லுக் கோடு, எட்டுக்கோடு போன்ற விளையாட்டுகளிலும் தங்களுடைய மகிழ்ச்சியான தருணத்தை கழித்தனர். பள்ளியிலும் கூட ஒருவருக்கொருவர் தங்களுக்கு தெரிந்த பாடத்தை மற்றவர்களுடன் பரிமாறிக்கொண்டும், அவரவர் வீட்டில் செய்து கொண்டுவந்த தின்பண்டங்களை பகிர்ந்துகொண்டும் தங்களுடைய இளமை காலத்தை அனுபவித்தனர். இவ்வாறு ஏழு ஆண்டுகள் மிக ஆனந்தமாக சென்றது என்றாலும் கூட இந்த சொர்க்கலோக வாழ்க்கை ஒவ்வொரு ஆண்டும் மெல்ல மெல்ல தேய்பிறை போல் தேய்ந்ததையும் அவர்களால் அறியமுடிந்தது. அதற்கு காரணம் பெரியவர்கள்தான் என்று அறியும்பொழுது அவர்களுக்கு மட்டுமல்ல நேயர்களுக்கும் ஆத்திரம் பிறக்கத்தான் செய்யும். அதற்கான காரணம் என்னவென்று இன்னும் சில நொடிகளில் தெரிந்து கொள்வீர்கள்.

அடடா... யார் இவர்கள்! ஓ... முகிலனா இவன்! முகிலனுடைய தோழர்களா இவர்கள்! கட்டுடலை கொண்ட முரட்டு காளையை போல் இருக்கிறார்களே! ஆ… அதோ... ஒரு யுவதிகள் கூட்டம்! அவர்கள் யார்! ஓ... தமிழிசையும் அவளுடைய தோழிகளும்தான். சௌந்தர்யத்தில் தேவலோக பெண்களுக்கு இணையாக தென்படுகிறார்களே! ஏழு ஆண்டிற்கு முன் பார்த்த அந்த பால் வடியும் முகங்களில் இப்பொழுது தெளிந்த நீரோடையில் மிதக்கும் விண்மீன்களை போல் ஆங்காங்கே பருவ பருக்கள் தென்படுகிறதே! என்று வியக்கும் அளவிற்கு அவர்கள் பருவமடைந்திருந்தனர். பள்ளி படிப்பின் இறுதி ஆண்டு தங்களுடைய தேர்வுகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு பள்ளி வாழ்க்கைக்கு அவர்கள் பிரியாவிடை கொடுத்தார்கள். கோடை விடுமுறைக்கு சிலர் தங்களுடைய உறவினரைக் காண வெளியூருக்கு சென்றனர், ஒரு சிலர் தங்களுடைய கிராமத்திலேயே இருந்தாலும் கூட ஏழு வருடங்களுக்கு முன் இருந்த அந்த மகிழ்ச்சியான தருணம் அவர்களுக்கு அவ்வளவாக வாய்க்கப்படவில்லை. ஆம்... பருவமடைந்த பிறகு ஒரு ஆணும், பெண்ணும் கிராமப்புறங்களில் தோழன், தோழி என்ற முறையில் பார்க்க, பேச, பழக முடியாதல்லவா? அப்படியொரு தருணம் கிடைத்தாலும் கூட அதை பார்ப்பவர்கள் பல கட்டுக்கதைகள் கட்டி சித்தரிப்பார்கள்தானே? இப்பொழுது நம் கதையின் நாயக,நாயகிகளும் கூட அத்தகைய நிலையில்தான் இருக்கின்றனர். ஆதலால் அவர்கள் முன்போல் ஓடி விளையாடவும், காணும் இடத்தில் சிரித்து பேசிக்கொள்ளவும் இயலாது. அதனால் அவர்கள் அனைவரும் இதுவரைக் கண்டிராத ஏதோ ஒரு வெறுமையை உணர்ந்தனர். காரணம் என்னவென்று அவர்களாலும் அறிய முடிந்தது. ஆம்... தன்னுடைய தோழர், தோழிகளை காண முடியவில்லையே என்ற ஏக்கம்தான் அது. அதில் தமிழிசைக்கு முகிலன் மீதும்; முகிலனுக்கு தமிழிசை மீதும் அவ்வகையான ஏக்கம் மிக அதிகமாகவே தென்பட்டது. காலபோக்கில் அவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையை பற்றி ஆழமாக சிந்திக்கத் தொடங்கினர். தமிழிசை இல்லாமல் தன்னால் வாழ இயலுமா! என்று முகிலனும், முகிலன் இல்லாமல் தன்னால் வாழ இயலுமா! என்று தமிழிசையும் எண்ணத் தொடங்கினார்கள். சில நாட்களில் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட கண்மூடித்தனமான நட்பு இருவருக்கும் ஒரு இனம் தெரியாத மாற்றத்தை உண்டாக்கியது. நேயர்களே... இப்பொழுது அவர்கள் இருவரும் நட்பின் எல்லை கோட்டை தாண்டிவிட்டார்கள் என்று உங்களாலும் யூகிக்க முடியும் என்று நம்புகிறேன்.

அதன் பின் வந்த நாட்களில் அவர்கள் இருவரும் தத்தம் மனதில் உள்ள காதலை நட்பென்ற போர்வையால் மறைத்துக்கொண்டு ஒரு உயிரற்ற பொம்மை போல் அக்கிராமத்தில் வாழ்ந்துவந்தனர். ஒருநாள் ஐயனார் கோயில் திருவிழாவில் குரவை கூத்து நடக்கும் சமயம் தனி இடத்தில் அவ்வப்போது அவர்கள் இருவரும் சந்தித்தாலும் கூட உண்மையான நட்போடு அவர்களால் பேச முடியவில்லை. தத்தம் மனதில் உள்ள அந்த மாறுதல் அவர்களை அவ்விதம் வாட்டியது என்றுதான் கூறவேண்டும். காலம் கடந்தன அவர்கள் இருவரும் மேற்படிப்பு படிப்பதற்காக வெவ்வேறு கல்லூரியில் சேர்ந்து தங்களுடைய படிப்பை தொடங்கினர். இதற்கிடையில் தமிழிசையின் தந்தை அவளுக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்துக்கொண்டிருந்தார். அதை அறிந்த தமிழிசைக்கு என்ன செய்வதென்று தெரியாத ஒரு படபடப்பு முகிலனிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்த தூண்டியது. ஒருநாள் தனிமையில் முகிலனை சந்திக்க தன்னுடைய தோழி பூங்குழலி உதவியுடன் ஏற்பாடு செய்தாள்.

ஆதவன் மேற்கே மறைய ஆயத்தமாகும் சமயம் வானத்தில் ஆங்காங்கே விண்மீன்கள் மின்னத்தொடங்கின. பறவைகள் தங்களது இருப்பிடத்தை நோக்கி கூட்டம் கூட்டமாக பறந்து சென்றன. இருள் மெல்ல, மெல்ல சூழத்தொடங்கியது; அச்சமயம் சிவன் கோயிலில் ஆள்நடமாட்டமில்லை. அங்கே தனிமையும், அமைதியும் படர்ந்திருக்க முகிலன் மட்டும் தமிழிசைக்காக வெகுநேரம் காத்துகொண்டிருந்தான். குளிர்ந்த காற்றோடு கோயில் வளாகத்தின் உள்ளே பயிரிடப்பட்ட செடியிலும், கொடியிலும் மலர்ந்த பூக்களின் நறுமணம் மூக்கை துளைத்துக்கொண்டு அவனை மதிமயக்க; தாலாட்டு பாடுவது போல் ஒரு சங்கீதம் அப்பொழுது பட்டும் படாமல் எங்கிருந்தோ வந்தது. ஓ... கோயில் மதில் சுவருக்கு பின்புற வயலில் அறுவடை செய்யும் பெண்கள் பாடும் தெம்மாங்குதான் அது. அதற்க்கு பின்னிசையாக உழவர்கள் நெல் மணிகளை பிரிக்க நெற்கதிர்களை கயிற்றில் கட்டி கல்லில் அடிக்கும் சப்தம் டிச்...டிச்… என்று கேட்டது. அந்த தேவகானத்தை கேட்டுக்கொண்டே ஏன் அழைத்தாள், எதற்காக அழைத்தாள், என்ன கூற போகிறாள் என்று கற்பனை செய்துகொண்டிருக்கும் பொழுது எவரோ கோயிலுக்குள் வரும் காலடி ஓசை சலக்...சலக்... என்று கேட்பதை முகிலன் அறிந்தான். வருவது தமிழிசை போல் தெரிகிறதே! ஆம்... அவள்தான்... அவளேதான்... முக சௌந்தர்யத்தில் மட்டுமல்ல அக சௌந்தர்யத்திலும் கூட பூரண சந்திரனை ஒத்த அழகுடைய அவளைக் காண இருகண்கள் என்ன! ஆயிரமாயிரம் கண்கள் கூட போதாது என்றுதான் தோன்றும். இப்பொழுது அவள் பருவமடைந்த பெண் அல்லவா! ஆதலால் பாவாடை, தாவணி உடுத்தி, கூந்தலை நெய்து மலர்ச் சூடி, மஞ்சள் பூசிய முகத்தில் செந்தூர திலகமிட்டு, விழி ஓரத்தில் மை தீட்டி, முத்து மாலையிட்டு, வளையல், கொலுசு, தோடு, மூக்குத்தி அணிந்து அழகிற்கே அழகூட்டி அடிமேல் அடிவைத்து அன்னமவள் நடந்து வந்தாள். தனக்காக காத்துக்கொண்டிருந்த முகிலனை கண்டதும் தன்னை அறியாமல் கண்ணீர் வெள்ளம் தாரைத் தாரையாக தமிழிசை கண்களில் பெருக்கெடுத்தது. எதற்காக அழுகிறாளேன்று முகிலனால் மட்டுமல்ல பரமசிவனே வந்திருந்தாலும் கூட அச்சமயம் யூகிக்க முடிந்திருக்காதுதான். எனினும் தன் மனதில் உண்டான அத்தகைய மாறுதல் அவளுடைய மனத்திலும் உண்டாகிவிட்டது என்பதை மிக விரைவாகவே அவனால் அறிந்துகொள்ள முடிந்தது.

தன் மனதில் உண்டான மாற்றத்தை முகிலனால் ஏற்றுக்கொள்ள முடியுமோ... முடியாதோ! என்ற படபடப்பு கலந்த தயக்கத்துடன் மெல்ல, மெல்ல தமிழிசை தன் மனதில் உண்டான காதலையும், தன்னுடைய வீட்டில் நடக்கும் திருமண ஏற்பாட்டையும் பற்றி அவனிடம் விரிவாக எடுத்து கூறினாள். முகிலனுக்கு அந்த ஒரு நொடி பல யுகங்கள் அவளுடன் வாழ்ந்த ஆனந்தத்தை அளித்தது. அவனுடைய உரோமங்கள் சிலிர்த்தன. தன்னை மறந்து அவளுடன் யாரும் இல்லாத உலகத்திற்கு புஷ்பக விமானமேறி பறந்து சென்றான். தமிழிசை… உன்னை என் தாரமாக அடைய பல யுகங்கள் தவம் செய்தேன் போலும்! பல பிறவிகள் உன்னுடன் வாழ்ந்த அனுபவம் எனக்கு இப்பொழுது நினைவுக்கு வருகிறது. நம்மை பிரிக்க எவராலும் இயலாது... எவராலும் இயலாதென்று அவளுடைய பட்டு மேனியை தொட்டு பின்வரும் கவிதையை பாடினான்.

பொழிலிடை ஆடிடும் மயில்மேனி கொண்டவளே;
உன்மேனி நான்தீண்ட என்னதவம் செய்தேனோ!
மையிட்டக் கரியஉன் கடைக்கண் பார்வையிலே;
மடிந்துநான் போனாலும் மலர்ந்துவர மாட்டேனோ!!

அப்பொழுது புஷ்பக விமானம் சிறிது குலுங்கியது. திடுக்கிட்டு நாயகன் கண் விழித்தார். எதிரே தமிழிசை நான் கூறியதற்கு மறுமொழி கூறவில்லையே முகிலா என்று அவனை உலுக்கி வினவினாள். அப்பொழுதுதான் தெரிந்தது கவிதை பாடியது சொப்பன உலகிலென்று. பிறகு மீண்டும் பூலோகத்திற்கு வந்த நாயகன்; உன்னுள் வந்த மாறுதல் சில வருடங்களுக்கு முன்பே என்னுள்ளேயும் வந்துவிட்டது தமிழிசை. அதை உன்னிடம் கூறினால் “ஏற்றுக்கொள்ள முடியாமல் விலகிவிடுவாயோ” என்ற எண்ணம் என்னை வாட்டி வதைத்தது. அதனால்தான் என்னுள் இருந்த காதலை உன்னிடம் கூறவில்லை என்றான். இதை கேட்ட தமிழிசை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்று அவனை தழுவிக்கொண்டாள்.

அப்பொழுதே அவர்கள் இருவரும் ஒரு முடிவுக்கு வந்தனர். முகிலனுக்கு ஒரு நிலையான வேலை கிடைத்த பிறகு பெற்றோருடன் தமிழிசை வீட்டிற்கு சென்று முறைப்படி பெண் கேட்டு இரு வீட்டாரது பூரண சம்மதத்துடன் மணந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அது. அதை இறைவனும் ஆமோதிப்பது போன்று அப்பொழுது காற்றில் ஆலயமணி அசைந்து டிங்…டாங்…டிங்... டிங்…டாங்…டிங்... என்று ஒலித்தது. பூக்கள் அவர்கள் மேல் உதிர்ந்து தேன் துளியை சிந்தியது. மரம், செடி கொடிகள் தலையாட்டி ஆரவாரம் செய்வது போலும் தோன்றியது. பிறகு தமிழிசையும் தன் தந்தையிடம் தற்சமயம் தனக்கு திருமணம் வேண்டாம்... வேண்டாமென்று நாட்களை கடத்தினாள். இருவரும் தங்களுடைய கல்லூரி மேற்படிப்பை ஒருவழியாக முடித்தனர். சில மாதங்களுக்கு பிறகு தான் பயின்ற பள்ளியிலேயே முகிலனுக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. இதற்கிடையில் அவர்களுடைய காதல் காவியம் இருவீட்டாரது காதிற்கும் காற்றோடு கலந்து பட்டும் படாமல் எட்டத்தொடங்கியது. அதிர்ச்சியில் இருவீட்டாரும் தத்தம் பிள்ளைகளுக்கு வரன் தேடத் தொடங்கினார்கள். அதை அறிந்த இருவரும்; இதற்கு மேலும் பொறுமை காக்க வேண்டாமென்று பெற்றோரிடம் தங்களுடைய காதல் விவகாரத்தை போட்டு உடைத்தனர். அந்த நொடி முதல் இருவீட்டாருக்குமிடையே கடுமையான யுத்தம் தொடங்கியது அது இராமாயண யுத்தத்தையும், மகாபாரத யுத்தத்தையும் ஒத்திருப்பது போல் தோன்றியது என்று கூறினால் நேயர்கள் அதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

இரு வீட்டாரும் தங்களுடைய பிள்ளைகளிடம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். அதையெல்லாம் அந்த உன்னத காதல் சோடிகள் பொருட்படுத்தவே இல்லை. மணந்தால் முகிலனை மட்டும்தானென்று தமிழிசையும், மணந்தால் தமிழிசையை மட்டும்தானென்று முகிலனும் பிடித்த பிடியாக நின்றனர். நான் உயிரோடு இருக்கும் வரையில் நீ அவளை மணக்க இயலாதென்று முகிலனுடைய தந்தையும் பிடிவாதமாக கூறினார். அதன் பின் வந்த நாட்களில் தமிழிசையை பெண் பார்க்க வந்தவர்கள் அனைவரும் அவள் கொண்ட அவப்பெயராலும், பிடிவாதத்தாலும் அவளை ஏற்க மறுத்தனர். இருவீட்டாரும் பல வழிகளில் அவர்களுடைய மனதை மாற்ற முயற்சி செய்தனர். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. இவ்வாறு 13 ஆண்டுகள் கடந்தன. பெற்ற பிள்ளையை மணக்கோலத்தில் காண போகிறோமோ... இல்லையோ! என்ற எண்ணம் நாளுக்கு நாள் முதுமையை நோக்கி செல்ல செல்ல முகிலனின் தந்தைக்கு புதிதாக வளர்ந்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடைய கௌரவத்திற்காக பிள்ளையினுடைய மகிழ்ச்சியை அழித்துவிட்டோமே என்கின்ற எண்ணமும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக உறுத்தத்தொடங்கியது. ஒரு நாள் தன் மகனை அழைத்து கொண்டு முகிலனின் பெற்றோர்கள் தமிழிசையின் வீட்டிற்கு தயக்கத்தோடு சென்றனர். தமிழிசையின் பெற்றோர்களும் தங்களுடைய மகளின் வாழ்க்கையை எண்ணி முன்னமே அத்தகைய வேதனையை அடைந்திருப்பார்கள் போலும். மழையின் வரவுக்காக காத்துக்கிடந்த பயிர்களை போல் தமிழிசையின் பெற்றோர்கள் அவர்களை வரவேற்றனர்.

அந்த ஆனந்த கடலின் அலையை எதிர்கொள்ள முடியாமல் இரு காதல் சோடிகளும் தத்தளித்தார்கள் என்பதை விட இரு வீட்டாரும் அவ்விதம் தத்தளிக்க நேர்ந்தது என்பதே சாலச்சிறந்தது அல்லவா? அந்த காதல் பறவைகள் எண்ணியது போல் இரு வீட்டாரது பூரண சம்மதத்துடன் ஐப்பசி மாதம் முதல் திங்கள் அவர்களது திருமணம் பெரியவர்கள் முன்னிலையில் நிச்சயிக்கப்பட்டது. அவர்களுடைய உன்னத காதலுக்கும், அவர்கள் கொண்ட நல்ல எண்ணத்திற்கும் அன்று இறைவன் இடிமுழக்கத்தோடு கூடிய அடை மழையாக அருள்பாவித்தார். மருத நிலத்தில் உள்ள உயிர்கள் யாவும் மகிழ்ச்சியில் திளைத்தது செழிக்கத்தொடங்கின.

அன்று முதல் இந்த இரண்டு காதல் பறவைகளும் அந்த மருத நிலத்தில் உள்ள இயற்கை வளத்தோடு பின்னி பிணைந்து மகிழ்ச்சியோடு உலா வருகிறது. நெறிமுறை தவறாமல் சிகரம் தொட்ட அந்த காதல் சோடியின் வழியை பின்தொடர்ந்து பல காதல் சோடிகள் இன்று மருத நாட்டில் சிறகடித்து மேலே பறக்க முயற்சிக்கின்றன.

அந்த காதல் சோடிகளும் வாழ்வில் எல்லா வளங்களையும் பெற்று நெறிமுறை தவறாமல் சேர்ந்திட நாமும் வாழ்த்துவோமாக.

வாழ்க வளமுடன்! வளர்க குணமுடன்!!

குறிப்பு: இக்கதையும், கதாப்பாத்திரங்களும் முற்றிலும் கற்பனையே. எவர் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படவில்லை.

ஆக்கமும், உணர்வும்,
-கார்த்திக் நித்தியானந்தம்.

எழுதியவர் : கார்த்திக் நித்தியானந்தம (22-Apr-15, 3:36 pm)
பார்வை : 1078

மேலே