உதவாத பணம்

மாலையில் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பஸ் தரிப்பிடத்திற்கு போய்க்கொண்டிருந்தேன். வீதியெங்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக வேகத்தோடு நடக்கின்றனர். அவர்கள் அனைவரும் பணம் எனும் பண்டத்திற்கு தங்களை சமர்ப்பணம் செய்தவர்கள். பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை! ஆனால் பணம் இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை! என்பதை உணர்ந்தவர்கள். உழைப்பால் உடல் உலர்ந்தவர்கள்.

சிலருக்கு உழைத்த களைப்பு, சிலருக்கு உழைப்பில் சலிப்பு. சிலர் வேலை முடித்து செல்கின்றனர். சிலர் வேலை தேடி அலைகின்றனர். "எப்படா வீட்டுக்கு போவோம்?" என ஏங்கும் சில பேர், "ஏன்டா வீட்டுக்கு போக வேண்டும?" என நினைக்கும் சில பேர். இவ்வாறு பல தரப்பட்ட மனங்களோடு விரைந்துகொண்டிருந்த மக்களின் இரைச்சலோடு சேர்ந்து காகங்களும் கரைந்துகொண்டிருந்தன. இடிபட்டவர்கள் ஒருவரையொருவர் முகம் பார்த்து மன்னிப்புகூட கூற முடியாமல் கடந்துசெல்லும் அவ்வீதியில் நான் மட்டும் மெதுவாக நடந்து சென்றுகொண்டிருந்தேன். அவசரப்பட்டு பஸ்ஸில் ஏறி கூட்டத்தில் நெறிபட்டு செல்வதைவிட ஆறுதலாக கூட்டமில்லாமல் அமைதியாக செல்லலாம் என்ற நோக்கம் மட்டுமல்ல, இன்று என் புத்தக கடைக்கு போதிய வருமானம் இல்லை என்கின்ற ஏக்கமுந்தான்.

என் கடைக்கு முதலாளியும் நானே தொழிலாளியும் நானே. இக்காலத்தில் மக்கள் புத்தகம் வாசிப்பது குறைந்துபோனது. அதனால் என் கடைக்கு வேறு ஒருவரை வேலைக்கு அமர்த்துவது என்பது எனக்கு கடினமானது. பொடி நடையாக நடந்துகொண்டிருந்த என் கால்களில் ஒரு வெள்ளைப்பை தட்டுப்பட்டது. கையில் எடுத்துக்கொண்டேன். நின்ற இடத்திலிருந்தே தலையை சுத்திப்பார்த்தேன் யாரும் பையை தொலைத்து தேடுபவர்கள்போல் முகத்தை வைத்துக்கொண்டவர்கள் யாருமில்லை என்பதை புரிந்துகொண்டேன். ஏற்கனவே பலரிடம் உதை வாங்கிய அடையாளங்கள் அந்த வெள்ளைப்பையின் உடலில் காணப்பட்டது. அவசரத்தில் சிலர் அதை கண்டுகொள்ளவில்லை. சிலர் அதை கண்டும் எடுக்கவில்லை. உள்ளே துணியால் சுற்றப்பட்ட ஒரு பெரிய பொதி இருந்தது. ஓர் ஓரமாகச்சென்று துணியை அவிழ்த்துப் பார்த்தேன். அத்தனையும் புத்தம் புதிய ஆயிரம் ரூபா நோட்டுக்கட்டுகள். சுமார் இரண்டு அல்லது மூன்று இலட்சம் ரூபா இருக்கும். இதயம் படபடவென துடித்தது. ஆசையினாலா அல்லது அச்சத்தினாலா என்று தெரியவில்லை.

பணமாயிற்றே! சொற்பம் என்றாலும் இன்ப சொர்ப்பணமாயிற்றே! நடையின் வேகத்தை சற்று அதிகரித்தேன். யாரைப்பார்த்தாலும் என்னை பார்ப்பதுபோலவே இருந்தது. வீதிபோக்குவரத்து பொலிசாரும் என்னையே முறைப்பதுபோலவே தோன்றியது. எதையும் கணக்கெடுக்காமல் நேராக வசுவண்டி தரிப்பிடத்திற்கே சென்றேன். என் நல்ல நேரம் ஒரு வண்டி கூட்டமில்லாமல் நின்றுகொண்டிருந்தது. அதில் ஏறி ஓர் ஆசனத்தில் அமர்ந்துகொண்டேன். ஒரு நிம்மதி பெருமூச்சு வெளியேறியது. பணம் என்பது நம்மை போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு, ஒன்று அதிர்ஷ்ட சீட்டிலுப்பில் கிடைக்கவேண்டும். இல்லையென்றால் இப்படி அதிர்ஷ்டவசமாக கீழேயிருந்துதான் கிடைக்கவேண்டும். உழைப்பு உயர்வு தரும் என்பது பாட புத்தகத்திலும், சினிமா கதையிலும் மட்டுமே பார்க்கக்கூடியதாக உள்ளது.

"மகனின் பாடசாலை கட்டணம், நான்கு மாத வீட்டு வாடகை, வியாபாரக் கடன்கள், மலிகைக்கடை கடன், ஊரில் இருக்கும் அப்பா, அம்மாவிற்கு சிறிது பணம் என்பன கொடுத்து முடித்து கொஞ்ச பணமும் கையில் இருக்கும். அதில் மகனுக்கும் மனைவிக்கும் வங்கியில் ஒவ்வொரு கணக்கை தொடங்கிவிட வேண்டும்" என வாழ்க்கை பயணத்திற்கான திட்டங்கள் பல தீட்டிக்கொண்டே வசுவண்டிப்பயணத்திற்காக காத்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வண்டியிலும் கூட்டம் அதிகமானது. அவர்கள் எல்லோரும் என்னையே பார்ப்பதுபோல் தோன்றியது. நல்ல பாடல்கள் வண்டியின் வானொலியில் ஒலித்தன. சிறிது நேரத்தில் செய்தியும் ஒலிபரப்பானது. வழமையான நாட்டு செய்திகளோடு விசேட செய்தி ஒன்றும் வந்தது. எனக்கு அப்படியே தூக்கி வாரிப்போட்டது. நாட்டின் பல பாகங்களில் புத்தம் புதிய கள்ளநோட்டுக்கள் பரவியுள்ளதாகவும், சில இடங்களில் அவை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இன்னும் பல இடங்களில் அவை கைமாறிக்கொண்டிருப்பதாகவும் மக்கள் அனைவரும் கவனமாக இருக்குமாறும். அது தெரிவித்தது.

கைகள் நடுங்கின. கண்கள் இருண்டன. தலையைச் சுற்றியது. வயிற்றில் புளி சுரந்தது. "இது கள்ள நோட்டாக இருந்து, நான் கொண்டுபோய் இதை எல்லோருக்கும் கொடுத்தபின் எப்படியாவது இது பிடிபட்டுபோனால்....., நான் கள்ளன் என்று சிறையிலும், என் குடும்பம் கள்ளகுடும்பம் என்ற கறையிலும் கிடக்கவேண்டியிருக்கும்." சட்டென மனதில் தீப்பொறியொன்று தெறிக்க வண்டியை விட்டு இறங்கினேன். வியர்வையை துடைத்துத் துடைத்து கைக்குட்டையும் ஈரமாகிப்போனது. அந்தப் பணப்பையை இறுக்கமாக பிடித்துக்கொண்டே அது கிடைத்த இடத்திற்கு விரைந்தேன். வானம் சற்று இருண்டிருந்தது. மக்கள் நடமாட்டம் குறைந்திருந்தது. ஒரு சிலர் மட்டுந்தான் இருந்தார்கள். யாரும் பார்க்காத சந்தர்ப்பத்தில் அதை கீழே போட்டுவிட்டு வேகமாக நடந்தேன். மனப்பாரம் குறைந்ததுபோல் ஓர் உணர்வு. சந்தியை அடைந்ததும் பணப்பையை போட்ட இடத்தை திரும்பிப் பார்த்தேன். யாரோ ஒருவன் பையை திறந்து பார்த்தான். அவனும் சுற்றிப்பார்த்து விட்டு பையை தன்னோடு எடுத்துச்செல்வது தெரிந்தது. மனதுக்குள் சற்று கவலையுடன் சிரித்துக்கொண்டேன். "அது நல்ல பணமாக இருந்தால் உனக்கு அதிர்ஷடம். ஒரு வேளை அது கள்ளப்பணமாக இருந்தால் எனக்கு அதிர்ஷடம்.” என அவனைப்பார்த்து மனதுக்குள் கூறிக்கொண்டேன்.

என் சட்டைப்பைக்குள் கையை நுழைத்து எடுத்தேன். ஐநூற்று அறுபது ரூபாய் இருந்தது. "கோடிக்கணக்கானாலும் அந்நியப்பணம் அவஸ்த்தையை கொடுக்கும். சொற்பத்தொகை என்றாலும் சொந்தப்பணம் சொர்க்கத்தை காட்டும்." என்பதை புரிந்துகொண்டு எந்த பயமும் இல்லாமல் மீண்டும் பொடிநடையாக வசுவண்டி தரிப்பிடத்திற்கு சென்றேன். முதலில் கடன்களை கட்டிவிட என் கையில், உதவாத பணம் இருந்தது. தற்போது "உழைத்து கடன்களையெல்லாம் கட்டிவிடலாம்" என்ற நம்பிக்கையில், தளராத மனம் இருக்கின்றது.

கற்பனைகள் யாவும் எனக்கு சொந்தமானவை
சித்திரவேல் அழகேஸ்வரன்

எழுதியவர் : சித்திரவேல் அழகேஸ்வரன் (21-Apr-15, 9:20 pm)
Tanglish : uthavaatha panam
பார்வை : 550

மேலே