மழையென்பது யாதென - கிருத்திகா தாஸ்

நினைவுகள் மங்கிய
பின்னிரவொன்றில்
நிசப்தமாய்ப் பெய்த மழை
சிறு சிறு துளிகளுக்கிடையே
துண்டு துண்டாய்ப்
பதித்துக் கொண்டிருந்தது ,
அந்த இருளை...


சாரல் நீர் நனைத்த
என் அறை
சுவரோவியங்களுள் ,
மழைத்துளியோடு
தவறி விழுந்த
சில நட்சத்திரங்களைப்
பதித்து வைத்திருக்கிறேன்...


சில சப்தங்களுக்குள்
சில நேரங்களில்
சில காட்சிகள்...
சில காட்சிகளுக்குள்
சில நேரங்களில்
சில ஓவியங்கள்...


ஜன்னல் கண்ணாடி ஈரத்தில்
நான் வரைந்த பட்டாம்பூச்சி
இரண்டாவது கால்
வரைந்து முடிக்கும் முன்
எங்கோ
பறந்து போய் விட்டது...


என்
இலை வடிவ
மோதிரமொன்று
தொலைந்து போய்
மீண்டும் கிடைத்த
இரவொன்றில் ,
மழை பெய்தது...


இன்று
அந்த மோதிரத்தை
மீண்டும்
தொலைத்து விட்டேன்...


சின்னக் குடை
பிடித்து நடந்ததால்
நனைந்து விட்டேன்..
அதனால்
இன்னும் சிறியதாய்
இன்னொரு குடை
வாங்கப் போகிறேன்...


தேன் துளி
சுமந்து வந்த
மழைத் துளியொன்றை
ஒரு
பூந்தொட்டிக்குள்
பத்திரப் படுத்தியிருக்கிறேன்...
அருகே
இன்னுமிரு பூந்தொட்டிகள்...


என் வீட்டுக்கருகே
சின்னக் குழந்தையொன்று
காகிதக் கப்பல்
செய்து கொண்டிருந்ததைக்
கண்டேன்...
இன்றிரவு இன்னுமொரு
மழை பெய்யக் கூடும்...


இதற்கு முந்தைய மழையில்
என்
முகமொத்த வடிவத்தை
என் உள்ளங்கையில்
தெளித்துப் போன
அந்த ஒரு துளியை
இன்னும்
தேடிக் கொண்டே இருக்கிறேன்...
இதற்கு முந்தைய மழையில்
தேடியதைப் போலவே...



- கிருத்திகா தாஸ்...



((நல்லதொரு கவிதைத் தொகுப்பில் பங்கு கொள்ள அழைத்த தோழர் தாகு அவர்களுக்கு என் நன்றிகள் பல))

எழுதியவர் : கிருத்திகா தாஸ் (25-Apr-15, 5:02 pm)
பார்வை : 278

மேலே