மழையென்பது யாதென5-கனா காண்பவன்

மூக்கடைப்பு ஏற்பட்ட
ஒரு நாள் இரவில்
டமடமால் என்று
சத்தங்கள் கேட்க
வாசலுக்கு ஓடிவந்து
கைகளை நீட்டிப்பார்த்து
அழுதிருக்கிறேன்.

அம்மா சொன்ன பின்
அறிந்துக்கொண்டேன்
பக்கத்து வீட்டில்
கொத்த வேலைக்கு
இரும்புத் தகடுகளை
இறக்கினார்கள் என்று...

குறைந்தபட்சம் உறுதிப்படுத்த
மண்வாசம் வரும்வரை
நான் காத்திருக்க வேண்டும்.

பிரதான சத்தங்கள்
கேட்கும் வரையோ
சாரலோ தூறலோ
சுவரில் தெறித்த சிதறலோ
என் மேல் விழும் வரை
கண்ணாடிக் கூண்டும்
வாசலும் சன்னலும்
எனக்கு ஒன்றே தான்.

பசுமையென்றும்
ஆங்கே ஒரு கிளையில்
சிறகு உதறும் பறவையென்றும்
நடனமாடும் துளிகள் என்றும்
வட்ட வட்டமாய் அலைகளென்றும்
குடைவிலக்கும் குழந்தையென்றும்
பாடல்களில் கிரகித்தவையெல்லாம்
பயனின்றி போகுமெனக்கு...

சோவென்று பெய்ய
ஓடிவந்த என்னால்
தலையை மேலே தூக்கவும்
மூச்சுமுட்டினால் குனியவும்
சில முறை குதிக்கவும்
மட்டுமே முடியும்.

ஒதுங்கிய காதல் சோடி
முத்தமிடுகயிலும்
பத்தடி தூரத்தில்
குழந்தைகள் ஓடும்போதும்
குழிகள் நிரம்பி வழியும்போதும்
கூடடைந்த புறாக்கள் துளை வழி
அலகு நீட்டும் பொழுதும்
பெண்ணொருத்தி சொட்ட சொட்ட
பனிக்கூழ் ருசிக்கயிலும்

என்னால் நூறு சதவீதம்
நனைய முடியும்
என்னால் மழையை
மழையாகவே இரசிக்க முடியும்.

கண்களாளும் நீங்கள்
இரசிக்கும் மழையை
காதுகளால் என்னால்
பார்க்க முடியும்.

நிறைய
கேட்டிருக்கிறேன்
பிரெய்லியில்
படமெடுக்க
விருப்பமில்லை.

மழையென்பது
எனக்கு
மழையாகவே
இருக்கட்டும்...!
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (26-Apr-15, 4:44 am)
பார்வை : 186

மேலே