அணில் கடித்த மாம்பழம்

அணில் கடித்த மாம்பழத்தை
எச்சில் பட்டதால் சிலருக்கு பிடிக்காது
அதைப் பற்றி யோசித்தால்...
அது தான் இன்னும் ருசிக்குமாமே ...

மனிதர்கள் சாப்பிட்டால் அப்படியே சாப்பிடுவோம்
அணில் மட்டும் கரம்பி நிறுத்த முடிகிறதே!
அளவோடு சாப்பிடச் சொல்கிறதா?
ஒன்றிருக்க இன்னொன்றுக்கு தாவி ஓடும் அணில்...

அணிலைக் கேட்டால் சொன்னாலும் சொல்லும்
வண்டு புகுந்த மாம்பழம் தேடுகிறேன் என்று...
வண்டு சொல்லும் உள்ளே புகுந்து
வெளி வர முடியாததும் நன்மைக்கே என்று...

மாம்பழத்தைக் கேட்டால் சொல்லும்
உங்களுக்காக பழுக்க வில்லை என்று...
மரத்தைக் கேட்டால் சொல்லும்
கொட்டையை நட்டு வையுங்கள் என்று ...

எல்லாமே துடிக்கிறது ஏதோ சொல்ல
உயிர்களின் உரையாடலில் இறைமை...
வண்டும் மரமும் அணிலும் மனிதனும்
இன்று இருக்கும் நாளை இராது...

இத்தனை ஆட்டமும் ஆர்ப்பாட்டமும்
நடுவில் இருக்கும் போது தான்...
என்றுமே ஒரு சலனமில்லை
மண்ணிற்கும் விண்ணிற்கும்...

தேடுதலும் ருசியும் பக்குவமில்லாமல் தான்...
பசியைக் கொடுத்து ருசிக்குப் பின்னால் ஓட வைத்து
மீண்டும் ருசிக்க ஏங்க வைக்கும் விதத்தில்
மனமே ஒரு அணிலாய் மாம்பழம் தேடுகிறது...












எழுதியவர் : shruthi (5-May-11, 1:11 pm)
சேர்த்தது : shruthi
பார்வை : 392

மேலே