மாமரத்துக் குயில்

கூடு கட்டத் தெரியாது
கட்டினாலும் குஞ்சுகளை
காப்பாத்த முடியாது...
காக்கையை அண்டிப் பிழைப்பதோ வாழ்க்கை?

இப்படித் திறமை இல்லாமல்
பிறந்து விட்டோமே என்று
மாமரத்துக் கறுப்புக் குயில்
மாமாங்கமாய் மறுதலித்தது...

பிழைக்கத் தெரியாத
பேதையாய் இருக்கிறேனே என்று
பொருமின குயிலைப் பார்த்து
மாமரம் சொன்னதாம்:

கறுப்பாய் பிறந்தாலும்
கையாலாகாமல் இருந்தாலும்
குயிலின் இசை காக்கைக்கு இல்லையே
கவலைப் படாதே என்றதாம்...

குயிலும் பதிலுக்கு:
தேவை இல்லாததைக் கொடுத்து
தேவையானது கிடைக்கவில்லையே..
காக்கையை ஏமாற்றுவது ஒரு பிழைப்பா?
கழுகு கூட அடை காக்குமே?

குடியிருக்க மாமரம் இருக்கு
சிறகடிக்க இறக்கை இருக்கு
முட்டை பார்க்க காகம் இருக்கு
பாட்டுப் பாட குரல் இருக்கு

இருப்பதை நினைத்து சந்தோசம் கொள்
இல்லாததை நினைத்து ஏங்க ஆரம்பித்தால்
கிடைத்ததற்கும் மதிப்பில்லை
என்றதாம் மரம்...

மாமரக் கிளையில் நிம்மதியாய் சாய்ந்தது குயில்...
லேசாக இலை அசைத்து வீசியது மாமரம்...
அங்கு ஒன்றுதலான நட்பு ஊஞ்சலாடியது...
குயிலை தாங்கிப் பிடித்தது மாமரம்...


எழுதியவர் : shruthi (5-May-11, 1:47 pm)
சேர்த்தது : shruthi
பார்வை : 627

மேலே