காந்திவதம்
இது தமிழில் மிக முக்கியமான சிறுகதை, காந்தியையும் மகாபாரத்தையையும் சேர்த்து எழுதிய புனைவு
காந்திவதம் - இரா.மீ.தீத்தாரப்பன்.
1948 ஜனவரி 30, மாலை சரியாக 5:17 மணியளவிலிருந்து 5:42 இடைபட்ட நிமிடங்களுக்குள் நடந்த அந்த சம்பவம்…. ,
…ஆம் ஒரு தேசமே என் காலடியில் விழுந்து கிடந்தது; ஒரே மரண ஓலம்; அழுகைக்கு தான் எத்தனை ஆயிரம் முகங்கள் இங்கே; வரலாறு தன் போக்கில் விசும்புவதை என்னால் தெளிவாக கேட்க முடிகிறது; இன்னும் சற்று நேரத்தில் நவ துவாரங்களில் எந்த துவாரங்களின் வழியாக வெளியே செல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த அந்த களைப்பூட்டுகிற வேளையில்…. ஹே … ராம்!… ஹே ராம்! இல்லை, இன்னும் இந்த உடலை விட்டு நான் பிரியவில்லை, ஈரமாக இருந்த நிலத்தின் மீது என்னை கிடத்துகிறார்கள், எல்லாம் முடிந்துவிட்டது.,கண்கள் கட்டுகின்றன; கண் மட்டும் சுற்றி சுற்றி வெறித்து பார்க்கின்றன; கண்கள் வழியாக நான் செல்ல விரும்பவில்லை; கண்கள் பல நேரங்களில் பார்க்க வைத்து ஏமாற்றும்; அப்போ காது..காதுகளை நான் எப்பொழுதும் நம்புவது கிடையாது; இப்பொ மூக்கு,வாய் ஆசின துவாரம் மூத்திர வாசல் தொப்புள் இவை யாவும் எனக்கு சரிபட்டுவர வில்லை.
இல்லை, அதோடு இப்பொழுது கோட்சே எற்படுத்திய முன்று துவாரங்களும் சேர்ந்துக்கொண்டன. கோட்சே இப்படி ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவான் என்று முன்பே தெரிந்திருந்தால் வேறு ஒரு மார்கத்தை நான் நிச்சயம் தேர்ந்தெடுத்திருப்பேன். இன்று இந்த உடலை கொல்ல அவன் இவ்வளவு பிரியாச பட்டிருக்க வேண்டி வராது.
உயிர் வேறு.. உடல் வேறு…உயிர்தான் உடல்களை விட்டு பிரிகிறது.
“புனரபி ஜனனம் , புனரபி மரணம் .”
ஹே … ராம்!… ஹே ராம்! இது என்ன புதுவித குழப்பம் நான் எங்கே நிற்கிறேன் என்று எனக்கு உறுதியாக தெரியவில்லையே; இதுவரையில் நான் காந்தியாக ஏராளமான துயரங்களையும் கொந்தளிப்புகளையும் சுமந்து வந்துள்ளேன்; நிகழ் காலம் குழப்பம் நிரம்பியதாகவும், எதிர்காலம் குழப்பம் விளைவிக்கும் பனி மூட்டம் நிரம்பியதாகவும் உள்ளே உடுருவி செல்ல முடியாதகவும் தெரிகிறது; நான் என்ன செய்வது இந்த நிகழ் காலத்தை எதிர்கொண்டு தான் ஆகவேண்டும். நான் மற்றும் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதை நான் அடையாள படுத்தியாக வேண்டும்.என் எதிர்காலத்தின் மீது உறுதியான நம்பிக்கை இல்லாவிட்டால் இந்த நிகழ்காலத்தில் காலத்தின் காற்றோடு கலக்காமல் நான் பைத்தியமாகி திரியவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவேனோ ?
இல்லை இல்லை…
நீங்கள் உங்கள் ஒவ்வொறு வரிடம் லட்சியம் என்ற திரியை பொருத்தி என் பின்னால் வாருங்கள் நான் அந்த வெளிச்சத்தை வைத்து இந்த மூடு பனியை விரட்டுவேனாக.
போதும் போதும்… வேண்டாம்! இப்பொழுது நான் மாகத்மாவும் இல்லை,மோகன்தாஸும் இல்லை,கரம்சந்தும் இல்லை, பாபுவும் இல்லை, காந்தியும் இல்லை, நானும் இல்லை,ஒரு உயிர், பூத உடலிலிருந்து வெளியே செல்லயிருக்கும் ஒரு உயிர் நான், இன்னும் சற்று நேரத்தில் என் ப்ராப்த கர்மா தீர போகிறது அவ்வளவு தான்
.
உலக உயிர்களே!
காந்தியாக தருவிப்பதற்கு முன் யார் நான்? வெறும் உயிரா, இல்லவே இல்லை வெறும் உயிர் மட்டும் நான் இல்லை; ஆகாம்ய கர்மங்களை சுமந்து திரிபவன்,,அப்படியேன்றால் இச்சைகளை மட்டும் சுமந்து திரிபவனா நான்.. இல்லை; இந்த பிறவியில் உள்ள இச்சைகளை கடத்த விரும்புவது தானே ஆகாம்யம்? ஆனால் சஞ்சித கர்மத்தால் நான் கொல்லபட்டேனோ!, ஆம் இருக்கலாம்!
பாவங்களை சுமக்க வழியுண்டு, பழைய நினைவுகள் என் கண் முன்னே வந்து செல்கின்றன,
உலக உயிர்களே!
என்னை இந்த பிரச்சனையிலிருந்து விடுவியுங்கள்; இந்த பூமி கர்ம பூமியாம்; கர்மத்தை அனுபவிக்கவே மறு பிறவி எடுக்கிறேனாம்;கர்ம வினை இல்லாதவனுக்கு மறுபிறவி இல்லையாம்;
உலக உயிர்களே!
இதைக்கேளுங்கள் முதலில்…., அவர்கள் சொல்கிறார்கள், நான் பரமாத்மாவிலிருந்த பிரிந்து வந்த ஜீவாத்மாவாம்; இனி எதாவது ஒரு காலத்தில் நான் பரமாத்வோடு இணைந்து தான் ஆக வேண்டுமாம், அது ஒரு பிறவியிலோ அல்லது ஒராயிரம் பிறவிகளிலோ அது நிகழலலாமாம்; என்ன தலை சுற்றுகிறதா!?! உலக உயிர்களே… எனக்கும் தான்,
உலக உயிர்களே!
ஆம் சஞ்சித கர்மத்தால் தான் நான் பல முறை கொல்லப்பட்டேனாம்; என்னை கொன்றவன் முன் பிறவியில் ஒரு அப்பாவி அவன் என்னை நர-நாராயணன் என்று அறியாதவன்; அபயாக்ஷ்ர கண்ணன் என்று அவன் அறியவில்லை; அவனுக்கு அறிவில்லை, என்பதற்காக அவன் மீது பலி சுமத்த விரும்பவில்லை;
, இல்லை இல்லை அவனை ஆட்டிவைப்பது அந்த சூன்யகாரி காந்தாரி.
ஆம் அந்த காந்தாரி, காந்தாரி செய்வது தவறோன்றும் இல்லையே; அவளுக்கு பிள்ளை பித்து,
நான் அன்று குருசேத்திரத்தில் கிருஷ்ணனாக……
நிலம் ரத்தத்தால் குளிப்பாட்டபடுகிறது!
காந்தாரி…காந்தாரி
அய்யோ காந்தாரி என்னை சபிக்காதே, என்னால் இன்னும் அந்த துவாபர யுக நிகழ்வை மறக்க முடியவில்லையே…காந்தாரி
“ “……!!!!...????/ தத்தம் கணவர்களையும் தமையங்களையும் போருக்கு அனுப்பிவைத்த பெண்கள் ஆங்காங்கே தூணில் சாய்ந்து கொண்டு சொல்ல முடியாத சோகத்தை கண்களில் தேக்கிவிட்டு வெறித்து நோக்கிக் கிடந்தார்கள், சற்று கூர்ந்து கவனித்தால் அவர்களில் கன்னங்களில் வழிந்த வந்த கண்ணீர் உப்பேறி போய் வெள்ளை திட்டையாக அவர் தம் கச்சையில் படிந்திருந்தது. பால் மனம் மாறாத சீரார்கள் நடந்த நிகழ்வுகளை, அவலத்தையும் அறியாது தன் தாய்மார்களின், நீட்டிய கால்களின் நடுவே சுருண்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு சில முதிய தாய்கள் தத்தம் பிள்ளைகளை நினைத்து மெல்லிய குரலில் புலம்பிக் கொண்டிருப்பதை என்னால் காணமுடிகிறது……!!!!...????/””
காந்தாரி… காந்தாரி… உன் சாபம் பலித்தது எனக்கு விடுதலை கொடு; முக்திகொடு…. நான் அன்று உனக்குச் செய்த பாவத்தை இன்று அசை போட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த உடலைவிட்டு பிரியாவிடை கொடு காந்தாரி …
காந்தாரி சிரித்துக்கொண்டிருக்கிறாள்..அவள் தலைவிரிகோலமாய் இருப்பது எனக்கு அச்சமாக உள்ளது. அவள் நெற்றித்திலகம் வியர்வையால் அழிக்கபட்டிருக்கிறது;அந்த கர்ஜனை என்னை மேலே செல்லவிடாமல்…..
அய்யோ ! காந்தாரி… காந்தாரி என்னை மன்னித்துவிடு இன்று நான் பண்ணிரெண்டு துவாரங்களின் வழியாக வெளியே செல்ல ஏத்தனிக்கிறேன் என்னால் முடியவில்லை.
ம்---ம் ஆம், அவள் அந்த சிரிப்பு இப்பொழுது குருசேத்ரத்தின் மரண ஓலத்திற்குள் இட்டு செல்கிறது; எங்கும் குருதி வலிந்தோடும் ஆறுகள்….
நான் பாவி காந்தாரி…என்னை தயவுசெய்து விட்டு விடு….
உன்னை எப்படி விடுவது கிருஷ்ணா…
ஜீவ ராசிகள் தங்கள் புரச்செயல்களால் இறப்பதில்லை; தங்கள் கர்ம வினைகளுக்காக தான் இறக்கிறார்கள் அன்று எதோ பகவத் கீதையில் பிதற்றினாயே…அது உன்னைப்போன்ற உயிர்களுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன…
காந்தாரி அப்பொழுது நான் கிருஷ்ணன், ஒரு கடவுள்,
ஹ….ஹா.ஹா நீயா கடவுள்.
என் அவதார தத்துவம் உனக்கு புரியவில்லையா,காந்தாரி, கர்மவினை இன்றி பகவான் பிறவி எடுப்பது தானே அவதாரம்….எப்பொழுதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்பொழுது நான் கடவுளாக தோண்றுவேன்… காந்தாரி;
“யதா³ யதா³ ஹி த⁴ர்மஸ்ய க்³லாநிர்ப⁴வதி பா⁴ரத|
அப்⁴யுத்தா²நமத⁴ர்மஸ்ய ததா³த்மாநம் ஸ்ருஜாம்யஹம்”
காந்தாரி “கிருஷ்ணா,புலுவுவதற்கும் ஒரு அலவுண்டு, அப்பொழுதும் சரி இப்பொழுதும் சரி உடம்போடு ஒட்டிய ஒரு உயிர் அவ்வளவு தான் நீ;
இல்லை காந்தாரி நான்……
காந்தாரி அவன் கூறுவதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை… யாராவது நம்மை அறிமுகம் படுத்தாத வரையில் நாம் எல்லோருமே ஒரு உடம்பை ஒட்டிய ஒரு உயிர்தான், கிருஷ்ணா; சரி அதைவிடு, நீ கடவுள் என்றே வைத்துக்கொள்வோம், நீ கடவுள் என்று மெய்பிபதற்காக என் நூறு புதல்வர்களை வதம் செய்தாயோ?.
“அது வந்து _ அங்கு அதர்மம நடந்துள்ளது காந்தாரி”
மேலும், ஒன்றை தெரிந்துகொள் கிருஷ்ணா, அதர்மம் என்பது நிரந்தரச் சுரண்டல், தர்மமோ முடிவற்றுத் தொடர்ந்து நடக்கும் பணி,
அங்கு பாண்டவர்களுக்கு அநியாயம் நடந்து உள்ளது காந்தாரி?
நியாயம் என்பதை யார் நிச்சயப்பது? தாங்கள் செய்வது தான் நியாயம் என்று அவரவரும் நினைத்தால் இந்த தொடர் பழிவாங்கலுக்கு முடிவு ஏது, கிருஷ்ணா?
கிருஷ்ணன் எதுவும் பேசவில்லை? காந்தாரி சொல்வதை எண்ணிப் பார்த்தான்
பாண்டவர்கள் நியாயத்துக்கிற்காக கெளரவர்களை எதிர்த்துப் போரிடவில்லையா?
இல்லை கிருஷ்ணா “ தர்மம என்பது நியாயம் சம்பந்த பட்டதல்ல.அது கருணை மற்றும் ஞானம் தோடு தொடர்புடையது; மற்றவர்களை தோற்கடிப்பது தர்மம் அல்ல. நம்மை நம்மையே வெற்றி காண்பது தான் தர்மம்.
நீ குருசேத்ரம் என்கிற பெயரில் ஒரு காட்டு தர்பாரை கொண்டுவர முயற்சி செய்தாய் கிருஷ்ணா; உயிர் வாழ்வதற்கு மனிதனுக்கும் சரி,மிருகங்களுக்கும் சரி மரண பயம் தான் காரணம், உயிர் வாழ்வதற்கு வலிமையை பயன்படுத்துவது; பலத்தையும் தந்திரத்தையும் வைத்துக்கொண்டு எல்லை வரம்புகளை விரிவுபடுத்திக்கொள்வது, யார் தலைவன் எது அதற்கு கீழ் அடிபணியவேண்டும் என்பதேல்லாம் மிருகங்களின் இயல்பு, மிருகங்களுக்கு வேறு வழியில்லை அடிபணிந்து தான் ஆகவேண்டும். ஒவ்வோரு அவதாரத்தின் நோக்கம் என்பது கொள்பது தான் நீ கடவுளாக செய்த சாதனையோ?.
அங்கு பாண்டவர்களுக்கு அநீதி நடந்துள்ளது காந்தாரி; நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.
“பரித்ராணாய ஸாதூ⁴நாம் விநாஸா²ய ச து³ஷ்க்ருதாம்|
த⁴ர்மஸம்ஸ்தா²பநார்தா²ய ஸம்ப⁴வாமி யுகே³ யுகே³”
எது அநீதி கிருஷ்ணா “ மனிதன் நீதியை ஏற்கலாம்,ஏய்க்கலாம் அல்லது ஒதுக்கி தள்ளலாம் கிருஷ்ணா, உன் மூளையால்,உன் புத்திசாலிதனத்தால் உலகில் நம்மையும் தாண்டி, மற்றவர்களையும் இணைத்துக்கொண்டு எல்லோரையும் வேண்டியவர்களாகவும், பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்ள முடியும் கிருஷ்ணா, பலவீனமானவர்கள் மீது பலமுள்ளவர்கள் அக்கறை கொள்ளும் ஒரு சமுதாயத்தை நீ உருவாக்கியிருந்தால் நீ கடவுள் கிருஷ்ணன், ஆனால் நீ! என் நா கூசுகிறது
காந்தாரி என்னை மன்னித்துவிடு நான் பாவி…
ஹ… ஹ… நீயா பாவி! நிச்சயம் நீ பாவியில்லை….,மகாபாவி. எங்களைப் பாவங்களை செய்ய தூண்டினாய்; உண்மையில் அறியாமல் தான் செய்த பாவங்களைவிட.. உன்னைப்போன்ற பாவங்கள் செய்பதை தூண்டுபவனுக்கு தான் தண்டனை அதிகம்;
ம்….கலியுகம் என்ன? இதற்குப் பிறகு எத்தனை யுகம் தோண்றினாலும் உன்னை நான் விடமாட்டேன்-
“ இல்லை காந்தாரி அது வந்து….
சற்று மவுனமாக இருந்துவிட்டு, மீண்டும் கிருஷ்ணன் ” உன் மகன்களை கொன்றது நான் இல்லை, உன் தலைவிதி, அவர்களுடைய தலைவிதி”
என்ன சொல்கிறாய் ?
“ வெகு நாட்களுக்கு முன்பு நீ உன் சமையலறைக்கு வெளியே நீ தரையில் சுடு நீரை ஊற்றி, ஒரு பூச்சியின் நூறு முட்டைகளை அழித்தாய், தன்னைப்போலவே நீயும் உன் குழந்தைகளின் மரணத்தைக் காண்பாய் என்று அந்த பூச்சி உன்னை சபித்தது உனக்கு நியாபகம் இல்லையா காந்தாரி…
காந்தாரியின் மனம் துடித்தது “ இல்லை அது நான் அறியாமல் செய்த தவறு”
இல்லை ஒவ்வொறு செயலுக்கும் எத்தனை அப்பாவிதனமாக இருந்தாலும் அதற்கு ஒரு எதிர்செயல் உண்டு என்பது உனக்கு தெரியாதா காந்தாரி….”
காந்தாரியின் இதயவலியைத் தன் தர்க்க ஞானம் போக்கிவிட்டது என்று கிருஷணன் அப்பொழுது நினைத்துக்கொண்டிருந்தான்.
காந்தாரி “ போதும் கிருஷ்ணா உன் காரண காரிய விதி,கர்ம வினை பயன் என்ற கட்டுகதையேல்லாம் நிறுத்து.. அதை அற்ப சநாதனவாதி மனத்தினை தோய்ந்தெடுக்க உதவும், என் வலியை கொஞ்சம் அசை போட்டு பார்; இது ஒரு பெண்ணின் வலி; ஒரு தாயின் வலி; அதுவும் நூறு புதல்வர்களை பெற்ற ஒரு தாயின் மனவலியை உனக்கு உணர்த்தவே நீ காந்தியாகப் பிறந்தாய். அன்று என் நூறு புதல்வர்களை கொன்றாய்…ஏன் என் அத்தனை குழந்தைகளையும் சாகடிக்க வேண்டும் ஒருவரை கூட நீ விட்டுவைக்கவில்லையே கிருஷ்ணா,”
அது போர் தர்மம்… காந்தாரி!
காந்தாரி “ எது போர் தர்மம்”
போர் தர்மம் என்று ஒன்று தனியாக உள்ளதா கிருஷ்ணா?
மக்களின் ஆதார மிருக குனத்தை தூண்டுவது தான் உன் போர் தர்மமா?
இல்லை ஒருவனது சொந்த விருப்பதிற்காக செய்யபடும் கொலை என்பது கடவுளர்களுக்கும், கடவுள் அருளார்களுக்கும் செய்யும் கொலையாக மாற்றுவது தான் உன் போர் தர்மமா.?, செயல் நோக்கம் இருக்கவேண்டியதில்லையாக்கும்?, கொலைக்கு மட்டுமே செயல் நோக்கம் தேவைபடுகிறதா கிருஷ்ணா?
சரி அதை விடு…
துரியோதனையும் துச்சாதானனையும் கொன்றாய் மற்றவர்களையும் கொன்றாய் சரி; என் கடைசி பால் மனம் மாறாத புதல்வன் விரஜசன் என்ன பாவம் செய்தான் கிருஷ்ணா ?
“ உன் குழந்தைகள் இறந்ததற்கு நான் தார்மிக பொருப்பு ஏற்க முடியாது, ஆனால்,உன் வருத்தம் எனக்கு புரிகிறது.
காந்தாரி “ முடியாது, நான் உன்னை விடமாட்டேன், என்னுடைய உயிர் வலி உனக்கு எப்படி தெரியும் ? நீ நூறு குழந்தைகளைக்குத் தாயாக இருந்ததில்லையே,என் புத்திரசோகத்தின் வலி உனக்கு தெரியாது கிருஷ்ணா” என்று அழுதுகொண்டே கர்ஜித்தால்.
அந்த குருசேத்ர நிகழ்வை கொஞ்சம் அசை போட்டுபார் கிருஷ்ணா…என் இறந்த நூறு புதல்வர்களுடன் நான் தனியாக தவித்துக் கொண்டிருந்த அந்த தருணத்தை நினைத்துப்பார் கிருஷ்ணா!
அன்று நள்ளிரவில் எனக்கு பசி எடுக்க வைத்தாய், என் குழந்தைகளின் சடலத்தை மீதேறி என்னை அந்த மாங்கனியை புசிக்க வைத்தாயே..கிருஷ்ணா.. அன்று நீ பிதற்றினாயே
“எந்த மாயை நம்மை சோகத்தில் ஆழ்த்துகிறதோ அதை அடக்க அதிகம் துயரம் தரும் மாயையின் வேறொறு செயலை செய்ய வைத்தாயே கிருஷ்ணா! எனக்கு பாடம் கற்பிக்க அத்தனை கொடுரமான வழியை நீ தேர்ந்தெடுத்தாயே…கிருஷ்ணா! உன் மாயையால் என்னை சூழ்ந்துக்கொண்டாய்; அதே மாயையால் நீ உன்னையும் என்னையும் மறந்து இந்த உலகத்தில் உடம்போடு ஒட்டிய உயிராய் துடிக்கவேண்டும் கிருஷ்ணா;
“இல்லை, காந்தாரி அந்த கணக்கு அன்றே முடிந்துவிட்டது” .
இது ஒன்றும் கொடுத்தல் வாங்கும் கணக்கு அல்ல, அத்தனை கொடுரமான வழியை கடைப்பிடித்த உன்னை எப்படி சபிப்பது என்று, அன்று இரவு முழுக்க நான் யோசித்துக்கொண்டிருந்தேன். உனக்கு இனி வரும் எந்த யுகத்திலும் என்னால் முக்தி கிடைக்காது. நீ அன்று குருசேத்தரத்தில் ஆயுதம் தரிக்க மாட்டேன் என்றாய்; ஆனால் மற்ற எல்லோரையும் ஆயுதம் தரிவிக்க வைத்தாய்; காந்தியாக நீ அகிம்சை என்ற மாபெரும் ஆயுததை கையில் எடுப்பாய்; அது யாரையும் கொள்ளாது; நன்மையை மட்டும் செய்யும்; ஆனால் நீ இறந்த பின் உன் மக்களுக்குள் ஒரு வித கருத்து பேதத்தை தூண்டும்,மீண்டும் நீ பிறப்பாய்; இது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே தான் இருக்கும்;
நான் என் இளம் நூறு குழந்தைகளின் வெப்ப குருதியைய் எப்பொழுதும் காயவிடமாட்டேன்… கிருஷ்ணா!...
ஏனென்றால், அது காய்தால் அந்த குருதியின் வாசனை என்னை மறக்கடிக்க செய்ய வேறு ஒரு தந்திரத்தை நீ கையாள்வாய்.. இனி வரும் காலங்களில் நீ செல்லும் பூத உடல் பிரியும் மொழுது ரத்தம் வழிந்தோடுவதை இந்த உலகமும் நீயும் பார்த்துக்கொண்டிருக்கும்… ஒவ்வொறு தடவை நீ மரணம் அடையும் பொழுதும், உன் உயிர் என் ஓலத்தை கேட்டுவிட்டு தான் பிரியும். உன் குழந்தைகளும், உன் பேரக் குழந்தைகளும், இனி உங்கள் வம்சங்களும் உனக்குப் பின் கண்முன்னே அடித்துக்கொள்வார்கள்;கிருஷ்ணனாக நீ அன்று ஒரு சாதாரண வேடனின் கையால் ஒரு மிருகம் போல் மரணமடைந்தாய்;இன்று காவிநிறக் பிராமண குழந்தையால் நீ; உன்னைக்கொள்வதை அவன் தன் வரலாற்றுக் கடமையாக அவன் கருதுவான்; அது அவர்கள் வழி வந்தவர்களின் இயல்பு…...
“ அப்படியேன்றால் நான் காந்தியோடு ஒட்டி வாழ்ந்த வாழ்க்கை என்னாவது ? “
உன் மனம், இனி வரும் ஒவ்வோரு பிறவியிலும் என் போன்ற பெண்களின் அகம் போலவே இயங்கும், அது வலிமையானது, எளிதில் வீழ்ந்துவிடாது, உண்ணாவிரதம் இருப்பதை ஆயுதமாக பயன்படுத்துவாய் என்றாலே அது பெண்கள் தன் மனதினுல் உருவான மறுப்பின் குரல் தானே!… ஒவ்வோரு பிறவியிலும் சமுகத்தில் ஆயுதம் ஏந்தாமல் சமரசநிலையை கொண்டுவர முயற்சிப்பாய்,ஆனால் உன் மக்கள் அதை உதட்டளவில் ஏற்றுக்கொள்வார்கள்; உன் போராட்டம் தன்னலமற்றது, தூய்மையானது; உண்மையான செயல்கள் வழியே மற்றவர்களின் ஏளனத்தை கடந்து செல்ல முடியும் என்பாய்? ஆனால் உன் மக்கள் உனது கொள்கைகளை நீ வாழ்ந்த பூத உடல் அழிந்த பிறகு நீராகரிப்பார்கள்; உண்மையான அறம் என்பது உருவாக்கி வைக்கபட்ட பாதையை பின்பற்றி செல்வதல்ல என்பாய், அறத்தின் பொருட்டு ஒரு சாதாரண மனிதனாக நீ தன்னை தானே சுயப்பரிசோதனை செய்துகொள்வாய் ஆனால் உன்னை தூற்றுவார்கள்.. நீ மிதவாதியோ, தீவிரவாதியோ,புரட்சியாளனோ,எதிர்புரட்சியாளனோ,பழமை பற்றாளனோ அல்ல; ஆனால் அவர்களின் கருத்துகளோடு முரண்படும்பொழுது உனது நிலைப்பாட்டினை மரியாதையுடன் முன் வைத்துவிட்டு உனது பணியைத் தொடர்வாய்…ஆனால் அமைதிக்கு சற்றும் இடமலிக்காத இந்த மனித கூட்டத்தில் ஒரு தனிமனிதனாக அமைதியைக் கோரும் அவல நிலைக்கு நீ தள்ளபடுவாய்… அடுத்தவர் பொருட்டு வாழ்வது எப்போழுதும் வலி மிக்கதே என்பதே நீ குருசேத்ரத்தில் என்னிடம் நீ வாங்கி வந்த சாபம்.
அப்படியேன்றால் எனக்கு சாப விமோசனமே கிடையாதா, காந்தாரி ?
காந்தாரியின் மனதிலிருந்து லேசாக ஈரம் கசிய தொடங்கியது.. சற்று சுதாரித்துக்கொண்டு “,நிச்சயம் உண்டு, உன் வதம், மக்கள் மனதில் ஒரு வித குற்ற உணர்வை ஏற்படுத்தும்… மனிதனாக இருக்க வேண்டுமென்றால் அவர்கள் எதன் பொருட்டும் தங்கள் மிருகத்தன்மையோடோ இரக்கமில்லாமலோ இருக்கக்கூடாது என்பதை முழுமையாக உணரும்பொழுது, மற்றும் என்றைக்கு உன் மக்கள் மனித குலத்தை சேர்ந்தவர்கள் தான் நாங்கள் என்ற அங்கிகாரத்தை அவர்களாகவே பெருகிறார்களோ அன்று…..
இப்பொழுது காந்தியின் உடல் யமுனை நதிக்கரையில் தீ யினால் பொசுக்கபட்டது; தீ நாக்குகள் கொழுந்துவிட்டு எரிந்து ஆகாயத்தை தொட்டன…அந்த கருமேகத்தை காற்று அடித்து சென்றுகொண்டிருந்தது; யமுனை தலைவிரிக்கோலமாய் வெளியே வந்து ஓப்பாரிவைத்து அழுதுவிட்டு, மீண்டும் ஈரத்தோடு அலையக் குலையாமல், ஒரு நீண்ட அமைதியோடு தன் பயனத்தை தொடர்ந்தாள்,பிறகு வானம் தெள்ள தெளிவாக தெரிந்தது. அந்த உயிர் அடுத்து எந்த யோனியில் தன்னை தருவிக்கலாம் என்று காத்துக்கொண்டிருந்தது…. அங்கு காலம் நிகழ்வுகளின் பிறப்பிடமாக காட்சி அளித்துக்கொண்டிருந்தது….
-இரா.மீ.தீத்தாரப்பன்.இராஜபாளையம்,