மழையென்பது யாதென -Mano Red

கருமை சூழ்
கார்மேகங்களுடன்
காரை வீட்டுக்கு
குடை பிடிப்பது போல,
படையெடுத்து வந்தது
பெருமழை...!!

இரவின்
இருள் தனிமையில்
சொட்டுச் சொட்டாய் விழுந்த
மழைத் துளியும்
மோகினிப் பேயின்
கால் கொலுசாய்
காதில் சினுங்கியது ...!

குளிரின் தனிமையில்
அணைப்பதற்கு
விளக்கைத் தவிர
யாதுமில்லை என்பதால்,
கையோடு கை தேய்த்த
வெப்பத்துடன்
வெக்கம் தான் மிச்சம் இருந்தது..!

சன்னல் வழி
கம்பிகளின் ஊடாக
எதிர் வீட்டு ஓட்டில் வழியும்
சொட்டு நீரை எண்ணும்
பழக்கம் இருப்பதால்,
சாரல் மழையின்
சொட்டு எண்ணிக்கை
விட்டதில் இருந்து தொடர்ந்தது..!!

காற்று வேகமானதில்
மழையின் முகம்,
திருவிழா கூட்டத்தினுள்
அலைக்கழிக்கப்படும்
மழலையின் முகமாய்
மாறிப் போனதில்
ஆச்சரியம் ஒன்றுமில்லை. !!

மழையின் கொஞ்சல்
கொஞ்சம் கொஞ்சமாக
அடங்கி
தாழ்வார விரிசலில்
வடித்து முடித்த போது,
என் தனிமையும்
முழுதாக வடிந்து
தொலைந்து இருந்தது...!!

எழுதியவர் : மனோ ரெட் (29-Apr-15, 9:17 am)
பார்வை : 453

மேலே