பாவேந்தர் போல் நாமெழுவோம்
(பாவேந்தர் பாரதிதாசனார் அவர்களின் பிறந்தநாள் 29-4-15 )
பாவேந்தர் போல் நாமெழுவோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
வான்கதிர்தான் சிதறித்தூள் பூமி யாக
வந்தபோதே பிறந்தமொழி தமிழ்தான் என்றும்
தேன்என்றும் பால்என்றும் தெவிட்டி டாத
தெள்ளமுதாம் எனத்தாசன் புகழ்ந்து ரைத்தும்
ஊன்உணர்வில் கலந்தென்னை இயக்கு கின்ற
உயிரென்றும் தமழ்மொழியை உயர்த்திச் சொல்லக்
கூன்மொழியாய் ஆக்கியின்று குனியச் செய்தே
கூறுகின்றோம் செம்மொழிக்குச் சொந்த மென்றே !
தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ நாட்டின்
தலைஅமைச்சாய் வரவேண்டும் என்று ரைத்த
அமிழ்தான கவிஞனிவன் கருத்தை ஏற்றே
அரியணையில் தமிழனைநாம் அமர்த்தி னோமா
நிமிர்ந்திங்கே தமிழர்காள் எண்ணிப் பார்ப்பீர்
நிலைகுலைந்து தமிழ்நாடு போவ தெல்லாம்
தமிழ்நாட்டில் தமிழன்தன் ஆட்சி யின்றித்
தமிழல்லார் அமர்ந்திருக்கும் அவலத் தாலே !
இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே
உருபடுமா இந்நாடு என்று ரைத்தும்
ஊர்ஊராய்ப் பெரியார்தாம் சுற்றி வந்து
கருத்தாலே சமத்துவத்தை ஊட்டி விட்டும்
காணுகின்றோம் இன்னுமிங்கே சாதிக் கொடுமை
அரும்புலவன் பாவேந்தன் சொல்லை ஏற்றே
அகற்றிடுவோம் சாதிகளைப் பொதுமை காண்போம் !
வேடமிட்டே ஆரியர்கள் சூழ்ச்சி செய்து
வேதத்தில் புராணத்தில் உலவ விட்ட
மூடத்தின் மூக்கறுக்கக் கவிதை தன்னில்
மூட்டிவிட்டார் விழிப்புணர்வை பாவேந் தர்தாம்
ஏடகமாம் குயிலேட்டில் பஞ்சாங் கத்தை
ஏற்றிடாமல் பகுத்தறிவை ஏற்றி டென்றார்
வீடகத்தில் இன்னும்நாம் முட்டா ளாக
விதிப்படித்தான் நடக்குமென்றே வீழு கின்றோம் !
வீட்டினிலே தமிழில்லை தெருக்கள் தம்மில்
விளம்பரப் பரகைகளில் தமிழே இல்லை
காட்சிதரும் தொலைக்காட்சி திரைப்ப டங்கள்
காண்கின்ற செய்தித்தாள் கல்வி தன்னில்
தீட்டென்றே தமிழ்மொழியைத் துரத்தி விட்டார்
தீந்தமிழ்தான் அழிந்துவிட்டால் இனமும் மாயும்
மீட்டெடுக்க எழவில்லை என்றால் ஞாலம்
மீதினிலே பெயரின்றிப் போவோம் நாளை !
வீட்டிற்குள் முடக்கிவைத்த பெண்க ளுக்கு
விழிப்புணர்வைத் தருவதுவே கல்வி என்று
பாட்டினிலே பாவேந்தர் எழுச்சி ஊட்டிப்
படிப்பறிவு பெறுவதற்கே வழிவ குத்தார்
நாட்டினிலே பெண்களின்று அமைச்ச ராக
நாடுவிட்டுப் பணியாற்றும் அறிஞ ராக
காட்சிதரா கோள்களுக்கும் செல்வோ ராகக்
காண்கின்ற பெருமையெல்லாம் அவர்பாட் டாலே !
பாரதிபோல் யாப்பினையே சீர்தி ருத்திப்
பாமரர்க்கும் புரியுமாறு கவிதை நெய்தோன்
ஊரதிரக் கருத்தினிலே புரட்சி ஏற்றி
உயர்குடும்பம் உருவாகப் பாப்பு னைந்தோன்
சீரழிந்த தமிழகத்தைத் தமிழு ணர்வை
சீர்செய்யக் கனல்தெறிக்கம் பாபொ ழிந்தோன்
வேரழிக்க வந்தபிற மொழிய ழிக்க
வெகுண்டெழுந்த பாவேந்தர் போல்நா மெழுவோம் !