காலம் கனிந்திடும் காத்திட்டால்

மணக்கோலம் காண்போர் பெரும்பான்மை
மகிழ்ச்சியுடன் வாழ்பவரோ சிறுபான்மை !
இல்வாழ்வில் அடிபதிப்போர் பெரும்பாலோர்
இனபத்தில் திளைப்பதோ இவ்வுலகில்சிலர் !

உள்ளங்கள் ஒன்றிடும் திருமண நிகழ்வால்
உறவுகள் உருவாகும் புதியதாய் வாழ்வில் !
பார்க்கும் படலமுடன் முறையாய் தொடங்கி
அரங்கேறும் திருமணமும் வழக்கமாய் அன்று !

நோக்கிடும் விழிகளால் நட்பென தொடங்கி
கானம் பாடிடும் காதலிக்கும் நெஞ்சங்கள்
உள்ளங்கள் ஈர்ப்பதால் உறவுகள் எதிர்த்தும்
ஒன்றிட துடிக்கின்றனர் வென்றிட இன்று !

மாறிடும் காலத்தில் மாயைகளில் ஒன்றா
நகரும் கலாசாரத்தின் நவீன முறையா !
காதல் மணங்களால் கலந்திடும் மனத்தால்
சாதலை சந்திக்கின்றன சாதிமத வெறிகள் !

சம்மதம் பெறுவதில் சலித்திடும் உள்ளங்கள்
சகாராவில் ஓடியதாய் ஓய்ந்தேப் போகின்றன !
உற்றமும் சுற்றமும் உடன்படாத நிலையானால்
உடைந்திடும் நெஞ்த்தால் மாறுகிறது முடிவும் !

இருப்புக் கொள்ளாத இதயங்கள் இருவரும்
இரவோடு இரவாய் இல்லம் துறக்கின்றனர் !
இளமை வேகத்தால் மணமும் முடிக்கின்றனர்
இணைபிரியா நண்பர்களின் உதவியுடன் பலர் !

காதல் வெற்றிக்குப் போராடும் உள்ளங்கள்
காலம் கனிந்திடும் நேரம்வரை காத்திட்டால்
காலத்தை வென்று பெற்றவரின் வாழ்த்துடன்
காலமும் மகிழலாம் களிப்புடன் வாழலாம் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (29-Apr-15, 2:17 pm)
பார்வை : 386

மேலே