கடல் அலையாய் மழலை
ஆத்திரம் தாளாமல்
அவள் அடித்தாலும்
ஆறாமல் அழக்கூட
அம்மா மடியையே
தேடும் மழலையின்
அன்பை என்னவென்று
சொல்வேன்
கடலையே தேடித்தேடி
திரும்பும் அலைபோல
தாய்மடி சேரும்
தங்கம் நீ
விடிகாலை வெளிச்சத்தில்
தூங்கும் உன் முகத்தில்
நிசப்தமாய் இருக்கும்
கடலின் ஆழங்களின்
அழகு!
கண்விழித்து சோம்பல் முறித்து
என்னை பார்க்கும்போது
கடலலை நடுவே கண்ட
கதிரவனின் ஒளிக்கீற்றின்
அழகு உன்னில்!
உன் ஓயாத
துருதுரு பேச்சில்
ஓய்வென்பதை அறியாத
அலைகளின் ஆர்ப்பாட்டம்
அயர்வற்று அடங்காத
உன் விளையாட்டுக்களில்
கடலில் களைப்பற்று
துள்ளிக்குதிக்கும் மீன்களின்
அழகு
உதடுதிறந்து வரும்
உன் புன்னகையில்
சிப்பிக்குள் ஒளிந்து
கிடக்கும் முத்துக்களின்
அழகு
சாய்ந்து சாய்ந்து வரும்
உன் ஒய்யார நடையில்
அலையில் ஆடியாடிவரும்
படகின் நளின அழகு
அடங்காமல் அடம்பிடித்து
ஆர்பரிக்கும் உன் கோபங்கள்
கடலை கிழித்துவரும்
கப்பலின் சீற்றம்
உன்னோடான எனது
ஒவ்வொரு நிமிடங்களும்
மணலோரத்தில் அமர்ந்து
கடலையை ரசிக்கும்
மவுன அழகு