தொக்கி நிற்கும் திருவிழா
ஆடிவெள்ளினா அரைநாள்தான்
பள்ளிக்கூடம்!
அம்மன்கோவில் பொங்கல்வைக்க
அம்மாக்கூட கெளம்பிடுவோம்!
ஊரத்தாண்டி ஒருமைலு
ஒத்தயில அம்மன்கோவில்
ஓடையில சுள்ளிப்பொருக்கி
ஓடிவந்து பொங்கவைப்போம்!
ஓடக்கர ஓரத்துல நாவப்பழம்
செவந்து தொங்கும்!
அம்மா குரல் ஒலிக்கும்வரை
நாவப்பழம் பொறுக்கித்திம்போம்!
பொங்கப்ப்பானை வரிசையில
கூடத்துல நின்னுருப்போம்
கருவறைத் தீண்டாம
கன்னத்துல போட்டுக்குவோம்!
பச்சைவயல் கரும்பெல்லாம்
பக்கத்துல இருந்தாலும்
அய்யனாரு மொரட்டுமீசை
நெனப்பு வந்து கண்ணகுத்தும்!
பத்துமணி கூத்துப்பாக்க அவசரமா
தூங்கச்சொல்லும்
பள்ளிக்கூட மேடையாண்ட
ஆட்டக்கொட்டா போட்டிருக்கும்!
எழுப்பா விட்டுட்டாக்க ஆட்டம்
பார்க்க முடியாதுனு
ஏதேதோ கதைகள்பேசி
கண்விழித்து காத்திருப்போம்!
சுருக்குப்பையில் காசத்திருடி
சுக்குக்காபி வாங்கிக்குடிப்போம்
தாலுக்கத்த சொருகிவச்ச மிட்டாய
வாங்கித்திம்போம்!
மிருதங்க மேளச்சத்தம் மெதுவாக
கேட்டச்சுண்ணா
மொத்த சனம் குதுகலிக்கும்
விசுலு சத்தம் அனல்பறக்கும்!
கெட்டிக்காரன் வேசம்வந்தா
விழுந்து விழுந்து சிரிச்சிருவோம்
பொண்ணுவேசம் கட்டுறத
எட்டிஎட்டி பார்த்துடுவோம்!
ராமுழுக்க கண்விழிச்சி
மொத்த கூத்த பார்த்திடுவோம்
அடுத்த வெள்ளி கூத்துக்காகா
வார முழுதும் காத்திருப்போம்!
இப்போதும் ஊருபக்கம்
எப்போதும் போனாலும்
அந்த அரசமர மேடையில
கொஞ்சநேரம் அமர்ந்திருப்போம்!
அந்த கெட்டிக்காரன் வேசம்வந்து
என் நினைவலையில் தங்கிச்செல்லும்!