சரித்திரம் செய் – கே-எஸ்-கலை

ஊரினில் ஆயிரம் ஊறுகள் மேய்ந்திட
ஊமையாய் இருப்பதுவோ? - வெறும்
ஊனமாய் பாயிரம் நூறுகள் செய்திட
ஊருக்கும் விடிந்திடவோ?-

மடமைகள் சூடிய மூடர்கள் கூடிய
மடமென ஆவதுவோ ?- தமிழர்
கடமைகள் மறந்த சந்ததி வளர்த்து
விடமென போவதுவோ ?

சாதிகள் போரிட வீதிகள் சிவந்திட
வீழ்வதும் நம்மினமே - பெரும்
மோதலில் ஒருபுறம் காதலில் மறுபுறம்
மடிவதும் தமிழினமே !

பாரினில் பன்மொழி வீறென மேவிட
செம்மொழி வீழ்வதுவோ? - தினம்
அந்நிய மொழியொடு உன்னகம் தாவிட
பொன்மொழி வீழ்வதுவோ ?

தீதெல்லாம் யாதென திறம்பட கூறிடும்
கடமைகள் மறந்ததுவோ? - வெறும்
போதையில் உளறிடும் பாதையில் சென்றிட
திறமைகள் ஒளிந்ததுவோ?

மூத்தவர் பெருமை பேசியேச் சாதலில்
காண்பது யாதுபயன் ? - சாதனைப்
பூத்திடச் செய்யும் போதனை துறந்துப்
படைத்தலில் ஏதுபயன் ?

பழங்கதைப் பேசியே சுயமதை இழக்கும்
பாவிகள் வாருங்கள் - உங்கள்
புரட்சிகள் முளைக்கும் பாக்களைத் தூவி
சரித்திரம் செய்யுங்கள் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (6-May-15, 9:21 am)
பார்வை : 247

மேலே