இதயம் பேசுகிறது

அன்றொரு நாள்
அந்த சின்ன வயதில்
அருமை அன்னையின்
இதய துடிப்பை
கேட்டு அதியசித்தேன்
அறியா பிள்ளையாய்
என்னை பார்த்து புன்னைகைத்து
என் நெஞ்சில் கைவைத்து
அவள் பார்க்க சொல்லியதை
நம்பாமல் நான் வைக்க
நிஜமாகவே கேட்ட சத்தத்திற்கு
நான் ஆர்ப்பரித்து துள்ளினேன்
மழலை செல்லமாய்
பின்னொரு நாளில்
பிறைநிலா ஒளியில்
மாலை பொழுதில்
மன்னவன் மார்பில்
சாய்ந்தபோது அதுபோலவே
சத்தம்கேட்டு எனக்குள்
சிரித்து கொண்டேன்
வெட்கிய மாதுவாய்
இதுவரை நெஞ்சில்
கைவைத்து கேட்டுரசித்த
இதயத்துடிப்பின் இசை
இன்று வயிற்றில்
கேட்கிறதே மீண்டும்
பிரமித்து நிற்கிறேன்
மழலையை போல
இன்று நான்
மழலையை தாங்கும்
ஒரு தாயாக
ஆனால் குதூகலத்தில்
மீண்டும் ஒரு மழலையாய்
என் இதயம்