யுகங்கள் தாண்டும் சிறகுகள் 25 - கே-எஸ்-கலை

"புத்தம் புதிய கலைகள்-பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே-அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை-அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை;
மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடு வீர் எட்டுத் திக்கும்-கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

என்று பாடிவிட்டுப் போயிருக்கின்றான் ஒரு மகாகவி !

பாரதியின் சொல்பேச்சு கேட்டு எத்தனைப் பேர் நடக்கின்றோம் இங்கே ? அப்படி நடந்தால் என்னதான் கெட்டுப் போய்விடும் இங்கே ?

நிற்க !

ஒரு மொழியின் பன்முகத் தகைமையை அறிய இலக்கியத்தின் பல்வேறுபட்ட முகங்களை அறிமுகம் செய்துக் கொள்ளல் அவசியம்.

இலக்கணங்கள் மதிலமைத்து வைத்திருந்த வெளிகளில், அந்த மதில்களை உடைத்துக் கொண்டுப் பீறிட்டுப் பாய்ந்த புது வெள்ளமே புதுக் கவிதைகள் எனலாம்.

புதுக் கவிதை நீரைப் போன்றது..வடிவமே இல்லாமல் இருக்கும் அதுவே எல்லா வடிவங்களிலும் இருக்கவும் தெரிந்து வைத்திருக்கின்றது !

பலருக்கும் ஒரு ஏக்கம் இருந்துக் கொண்டிருக்கலாம்..பாரதியின் காலத்தில் நாங்கள் வாழ்ந்திருந்தால் எவ்வளவு பெருமையாக இருந்திருக்கும் என்று...

அந்த ஏக்கத்தை சுத்தமாய் துடைத்துக் கொண்டிருக்கிறார் எண்பது வயதினைக் கடந்து எம்மோடு வாழ்ந்துக் கொண்டிருக்கும் வாழும் மகாகவி ஈரோடு தமிழன்பன் அய்யா அவர்கள் !

ஒரு மொழியினை செப்பனிட்டு சீர்தூக்கும் வல்லமை என்பது வெறும் எதுகை மோனைகள் மூலமாகவோ சந்த சல்லாபங்கள் மூலமாகவோ சாத்தியப்படுவது அல்லவே அல்ல ! அது ஒரு மாபெரும் போராட்டம் ! அது ஒரு மாபெரும் புரட்சி ! அது ஒரு மாபெரும் யுத்தம் !

அந்த புரட்சியை அந்த போராட்டத்தை அந்த யுத்தத்தை வன்முறைகளோ கலவரங்களோ கூச்சல் கூத்துகளோ இல்லாது செவ்வனே செய்துக்கொண்டிருக்கிறார் அய்யா தமிழன்பன் அவர்கள் !

மேலே மகாகவி பாரதியின் பிரபல கவிதை வரிகளை மேற்கோள்காட்டி இருக்கிறேன்...அந்த மகாகவி சொன்ன வேலையை கச்சிதமாய் செய்துக் கொண்டு இருக்கிறார் இந்த மகாகவி !

தமிழ் இலக்கியத்திற்கு எட்டாம் வர்ணத்தை கொடுத்திருக்கிறார் தமிழன்பன் அய்யா. இவரது படைப்புகளில் எனக்கு வாசிக்கக் கிடைத்த வடிவங்களையும் பாக்களையும் உங்கள் முன் கொட்டுகிறேன்....அள்ளி எடுத்து முத்தமிட்டுக் கொள்ளுங்கள் !

ஒன்றைச் சொல்லிவிடுகிறேன்.
இது இலக்கியம் கற்பழிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் காலம் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா ? உங்களைக் குறைச் சொல்லுகிறேன் என்று ஆத்திரமடைவீர்களா ?

ஏன் தெரியுமா அப்படிச் சொல்லுகிறேன்?

இந்த ஹைக்கூ என்ற வார்த்தையை எப்படியெல்லாம் சிதைத்து சின்னாப்பின்னம் செய்தது விட்டோம் என்பதை அறிவீர்களா ? எவ்வளவு மகத்தான வடிவத்தை, எவ்வளவு அழகான உருவத்தை அமிலமூற்றி அசிங்கம் பார்த்துக் கொண்டிருகின்றோம் தெரியுமா உங்களுக்கு ?

அய்யா தமிழன்பன் எழுதிய ஒரு ஹைக்கூ இதோ...

ஆகாயமும் அழகு
பூமியும் அழகு - ஆம்
என் கையில் ரொட்டித்துண்டு!

மேலுள்ள ஹைக்கூ உங்களுக்குள் ஏதாவது சலனங்களை உண்டாக்குகின்றதா ? அது எவ்வாறானது ? அதற்கான விடையை உங்களிடமிருந்து நீங்களே பெற்றுக் கொள்வீர்கள் என்றெண்ணுகிறேன்.

ஹைக்கூ என்பது எப்போதும் இயற்கையானதாக இருக்க வேண்டும். செயற்கையாகச் சுவையூட்டிய அமிர்தமாக இருக்க கூடாது.ஒரு காட்சியை.. ஒரு நிகழ்வை அப்படியே சொல்லிவிட்டுப் போவது தான் ஹைக்கூ...அந்த காட்சியில் லயித்து இன்பம் காணத் தெரிந்தவன் மட்டுமே ஹைக்கூவுக்கான வாசகனாக இருக்கும் தகுதியுடையவனாகின்றான் !

இவ்வாறான ஹைக்கூ படைப்புகளை தமிழுக்கு வழங்கிப் பெருமைச் சேர்த்த தமிழன்பன் அவர்களின் ஹைக்கூ படைப்புகள் ஆங்கில, யப்பானிய ஹைக்கூ பாக்களுக்கு நிகரான படைப்புகளாக இருக்கிறது என்பதற்கு மேலுள்ள ஒரு பாவே சான்றாக இருக்கட்டும் !

அடுத்து அய்யா தமிழுக்கு கொடுத்த வரப்பிரசாதம் சென்ரியு வகை பாக்கள் எனலாம்...

இன்றைய தலைமுறையினரில் ஓரளவு எழுத தெரிந்தவர்கள் ஹைக்கூ என்று சொல்லிக் கொண்டு எழுதுவது இந்த சென்ரியு பாக்களைத் தான் !

ஹைக்கூவிற்கும் சென்றியுவுக்குமான பேதம் ஒன்றுமே இல்லையே என்று சொல்லும் நிலைமை இன்னும் நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் சென்ரியு என்பது ஹைக்கூவில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றது ! வரி ஒற்றுமை மட்டுமே இவையிரண்டிற்கும் பொதுவானதாக அமைகின்றது !

சென்றியுவென்பது மேலோட்டமாக, சமூகம் சார்ந்ததாக, அழகூட்டப்பட்ட,மிகைப்படுத்தப்பட்ட, சித்தரிக்கப்பட்ட,நகைப்புக்குரியதாக எதுவாகவும் இருக்கும். இதில் எதுவாகவும் இருக்காது ஹைக்கூ.

அய்யாவின் சென்ரியு –

குருக்களாகிவிட்ட கடவுள்
மறுபடியும் கடவுளாகவில்லை
தட்டு நிறையக் காணிக்கை !

மிக இலகுவாக இது புரிந்துப் போய்விடுகிறது அல்லவா ? எப்படிப்பட்ட “நக்கல்” இது ? அந்த நக்கலுக்குள் இருக்கும் உண்மையின் கரு எவ்வளவு கசப்பானது ? மந்திரம் ஓதிக் கொண்டு ஊரை அல்ல உலகையே ஏமாற்றும் குருக்களுக்கு இதைவிட ஓங்கி அடிக்கும் சம்மட்டியும் உண்டோ ?

இது தான் சென்ரியுவின் தொழில். இப்படி அங்கதமாக, நகையாக. சிரிப்பூட்டிச் சிந்திக்க வைப்பதாக சுவாரஸ்யமாய் அமைந்திருக்கும் ! அதனை அய்யாவின் பல சென்ரியுக்கள் திறம்படச் செய்து முத்திரை பதிக்கின்றன ! அவற்றுள் சில இதோ...

பணம்
எதையும் செய்யும்.தெரிந்தவர்கள்
பணம் செய்தார்கள்.
==
சண்டைக்கோழி
வென்றாலும் தோற்றாலும்
பிரியாணி.'
==
''ஒலிபெருக்கி
சோதனை முடிந்ததும்
பேச்சாளர் சோதனை!

இப்படி எத்தனையோ கோணங்களில் சமூக அவலங்களை சீர்கேடுகளை நையாண்டியாகவும் முகத்திலடித்தாட் போலவும் படைத்து வைத்திருக்கிறார்.

முக்கியமாக சொல்ல வேண்டியது..தமிழுக்கு சென்ரியு என்ற வடிவக் குறும்பாக்களை அறிமுகம் செய்தவரே தமிழன்பன் அய்யா தான் ! எவ்வளவு பெருமைக்குரியது ? அய்யாவின் “ஒரு வண்டி சென்ரியு” என்ற பதிப்பு போற்றுதற்குரியது !

ஹைக்கூ, சென்ரியு மட்டுமல்ல அதிலிருந்தும் நீளுகிறது அய்யாவின் அறிமுக வரங்கள்....

லிமரிக்(Limerick) ஆங்கிலத்தில் தோன்றிய, ஐந்து வரிகள் கொண்ட சிறிய கவிதை. லிமரிக்கின் ஐந்து வரிகளில் முதலாவது, இரண்டாவது, ஐந்தாவது ஆகிய வரிகளில் ஒத்த ஓசை உடைய இயைபுத் தொடையுடன் அமையும்; மூன்றாவது நான்காவது வரிகளில் தம்முள் ஒத்த ஓசை உடைய இயைபுத் தொடைகளும் வரும்.

லிமரிக் வடிவத்தை மிக நேர்த்தியாக மொழிபெயர்ப்பு செய்தும், இயற்றியும் தமிழை அழகு பார்ப்பவர் அய்யா.அவரது ஒரு மொழிபெயர்ப்பை இங்கே தருகிறேன்.

“சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்கள்” என்ற அய்யாவின் லிமரைக்கூ தொகுப்பின் முன்னுரையில் லிமரிக் பற்றி மிக அழகாக விளக்கியுள்ளார். (அட...இதென்ன லிமரைக்கூ....என்கிறீர்களா...கொஞ்சம் பொறுங்கள்)

அங்கே உள்ள ஒரு மொழிபெயர்ப்பு...

there was a young lady riga
who went for a ride on a tiger
they returned from the ride
with the lady inside
and a smile on the face of the tiger
===
முழுமைநிலாப் போலிருந்த இளைய மாது
முறுவலுடன் சவாரி செய்தாள் புலியின் மீது
பயணம் முடிந்த நொடியில்
பாவை புலிவயிற் றடியில்
முறுவலந்தப் புலிமுகத்தில்! என்ன தோது ?
===
படைப்பை உள்வாங்கி ரசியுங்கள்...அதோடு ஒரு விடயத்தைக் கவனியுங்கள்.

மொழியறிவு மட்டுமிருந்தால் இலக்கிய மொழிப்பெயர்ப்புகள் முழுமை அடைந்துவிட மாட்டாது. மொழியறிவுடன் கூடிய கவியறிவும் நிரம்பப்பெற்ற ஒருவரால் மட்டுமே உருப்படியான இலக்கியங்களைத் தமிழுக்கு (ஒரு மொழிக்கு) அறிமுகம் செய்ய முடியும் என்பதற்கு தமிழன்பன் அய்யா எவ்வளவு பெரிய எடுத்துக்காட்டு ?

அந்த முன்னுரையில் இருக்கும் நேரடி தமிழ் லிமரிக் ஒன்று இப்படி கொள்ளை அழகுடன் மிளிர்கிறது...
===
என்னஇது? என்னஇது? காதில்விழும் சத்தம்
இன்றலர்ந்த முல்லைமொட்டில் தென்றலிடும் முத்தம்
தலைவனின்றி தனித்திருப்பாள்
தகித்திருப்பாள் குளிர்நெருப்பால்
ஏந்தலுக்குத் தெரியாதோ காதல்தரும் பித்தம் ?
===
என்ன அழகு...எடுத்துக் கொண்ட வடிவத்தைச் சிதைக்காமல் வதைக்காமல் சொற்களுக்காக போராடாமல் ஒரு புரட்சி செய்யப்பட்டிருக்கிறது ? புதைந்துக் கொள்ளுங்கள் அங்கேயே !

மேலே பேசிக்கொண்டிருக்கும் போது லிமரைக்கூ என்றால் என்னவென்று கேட்டீர்களல்லவா ?

ஆம் லிமரைக்கூ என்பதும் தமிழுக்கு அய்யா தமிழன்பன் அவர்களால் அறிமுகம் செய்யப்பட்ட மற்றுமொரு குறும்பா வகையே.

ஹைக்கூ போல, சென்ரியு போல தனது உடலை வைத்துக் கொண்டிருக்கும் இதில் இயைபுத்தொடை நகையாக அலங்காரம் செய்யப்பட்டு களைகட்டும் !

லிமரைக்கூ என்பது மூன்று வரிகள் கொண்ட கவிதையில் முதல்வரியிலும், மூன்றாவது வரியிலும் இயைபுத் தொடையுடன் அமையும் குறும்பா ஆகும்.
ஆங்கில மொழியில் ஹைக்கூ மற்றும் லிமரிக் வடிவங்களையும் இணைத்து ஒரு கலப்பு இனக் குறும்பா கண்டுபிடிக்கப் பட்டது.

முதன்முதலில் இதை உருவாக்கியவர் டெட் பாக்கர் (Ted Pauker) என்னும் கவிஞர். இவர் தம் கலப்பு இனக் குறும்பாவுக்கு லிமரைக்கூ(லிமரிக்+ஹைக்கூ) என்று பெயரிட்டார்.

இவ்வகைக் குறும்பாக்களைத் தமிழில் படைத்து, சென்னிமலைக் கிளியோப்பாத்ராக்கள்’ என்ற பெயரில் அறிமுகம் செய்தார் தமிழன்பன் அய்யா!
அதிலிருந்து சில
==
பறவையோடு சேர்ந்து பற
சிறகுகள் தேவை இல்லை -மனிதன்
என்பதை மட்டும் மற !
==
ஊது வத்திச் சின்னம்
கட்சி வென்று கோட்டை பிடித்தும்
நாற்றம் போகலை இன்னும் !
==
எதற்கப்பா எதுகை மோனை
மின்னலைப் பிடித்து
வைக்கவா சட்டிப் பானை ?
==
குருக்களே தெய்வங்கள் ஆனார்கள்
கோயில் இல்லா ஊர்களிலே தெய்வங்கள்
குடியிருக்கப் போனார்கள்.
==
பாடுவது அருட்பாப் பதிகம்
அன்றாடம் உணவில் ஆடுகோழி
மீன் நண்டு வகைகளே அதிகம்
==
இப்படி இன்னும் நிறைய நிறைய முத்துகள் சிதறிக் கிடக்கின்றன அந்த லிமரைக்கூ தொகுப்பில்.

இன்னுமொரு வடிவத்தையும் மிக அழகாக கையாண்டிருக்கிறார்
கஜல் பிறைகள் நூலின் மூலமாக கஜல் அல்லது கஸல் வடிவ பாக்களை தந்து...தமிழின் இன்னொரு பக்கத்தை மெருகூட்டுகிறார்.

கஜல் என்பது உருதுமொழியில் யாக்கப்படும் ஈரடி சந்தங்கள் கொண்ட, மீளவரும் பல்லவியுடன் அமைந்த கவிதை வடிவாகும்

உதாரணமாக -
===
ஆழங்கள் உரையாடக் கரையோரம் வருமா ?
வருமென்றால் ஆழமென்ற பெயரையவை பெறுமா ?

எனையேநதித் தெருத்தெருவாய் எந்தவினாப் போகும் ?
என்வாழ்க்கை விடைபெறுநாள் விடையொன்று தருமா ?

பாதையில்லா ஊருக்குள் துடிக்குமென்றன் ஆன்மா
பயணங்கள் க்ல்லைறைக்குள் உள்ளதென்ன சுகமா ?

எனைவளர்த்த நாள்களைநான் காலவங்கிக் கணக்கில்
இட்டுவைக்க முடியுமா ? வங்கியும்நி லைக்குமா ?
===
மிக மென்மையாகவும் ஆழமாகவும் மனத்துள் ஊடுருவிப் பயணிக்கும் ஒரு அமானுஷ்ய சக்தி இந்த கஸல் பாக்களுக்கு இருக்கிறது என்பதை கஜல் பிறைகளைக் கண்டவர்கள் சொல்லுவார்கள் என்பது திண்ணம் !

இந்த எல்லாவற்றையும் தூக்கி எறிந்து வீரியம் காட்டி முன் வந்து நிற்கிறது அய்யாவின் புத்தம் புதிய அறிமுகமாகிய பழமொன்றியு !

சொல்லும் போதே அழகாகவும் புதுமையாகவும் இருக்கிறதல்லவா இந்த பழமொன்றியு ?

புதியன புகுதலும் பழையன கழிதலும் என்ற கோட்பாட்டின் கீழ் இன்று முதியோர் இல்லங்கள் பெருகிவரும் அவலம் கூட நடந்துக் கொண்டு தான் இருக்கிறது !

அப்படி இருக்கும் இந்தக் காலகட்டத்தில் பழையனவற்றைச் சீவி சிங்காரித்து அழகுபார்க்கும் அலங்கார மையங்களாக அறிமுகமாகிறது இந்த பழமொன்றியு!

எல்லோருக்கும் பரிச்சயமான பழமொழிகளையும் சென்ரியுவின் இயல்பையும் ஒன்றாக்கி உருவாக்கப்படுவதே இந்த பழமொன்றியு என்று கூறலாம்.

ஏறத்தாள சென்ரியு வடிவமாகவே பார்க்கக்கூடிய குறும்பாக்களாக இருப்பினும் பழமொழிகளை மையப்படுத்தி எழுத்தப்படுவதால் இப்பாக்கள் சென்ரியுவில் இருந்து சற்றே வேறுபடுகிறது எனலாம் !
==
நீர் இடித்து நீர்விலகாது
நீருக்காக இடித்துக் கொண்டால்
மாநிலங்கள் விலகும்‘
==
ஊர் என்றால் சேரியும் இருக்கும்
சேரி சீறினால், சேரி சீறினால்
அந்த ஊர் எங்கு இருக்கும்?’
==
என்பன இரு பழமொன்றியுக்கள் !

இவை சென்ரியு பாக்களை விட சமூகத்திலூடுருவி நிலைக்கும் என்பது உறுதி. ஏனெனில் பண்டைய காலந்தொட்டு செவிவழி இலக்கியங்களாக பரவி வந்திருக்கும் இந்த பழமொழிகளின் ஆதிக்கம் சமூகத்தின் ஆழத்தில் ஆணிவேர்களைப் பரப்பி வைத்திருக்கின்றது என்பது உண்மை தானே ? அந்த ஆணிவேர்களில் பக்க வேர்களாக ஒட்டிக் கொண்ட இந்த சென்ரியுக்களும் (பழமொன்றியுக்கள்) நிலைக்கும் என்பதில் சந்தேகங்கள் தேவையில்லையே ?

இந்தக் கட்டுரையை வாசித்திருந்தால்....களைத்துப் போயிருக்கும் உங்களுக்கு அய்யாவின் அபூர்வ திறமைகளும் படைப்பாற்றலும் மெய்சிலிர்க்க வைத்திருக்கும் என்பது நிச்சயம் !

இப்படிப்பட்ட ஆக்கங்கள் மட்டுமல்ல...இவற்றையெல்லாம் விடவும் மரபுக் கவிதைகளிலும் நிபுணத்துவம் வாய்ந்த ஒரு ஒப்பற்ற பெருங்கவிஞர் தமிழன்பன் அவர்கள் !

பல தலைமுறைகளைக் கடந்து தனது எண்பதாவது வயதிலும் தமிழுக்கும் இலக்கியத்திற்கும் சேவையாற்றிச் செழுமைப்படுத்தும் இவரை தொடர்ந்து வரும் தலைமுறையினர் நிச்சயம் போற்றிப் பாடுவார்கள். ஏனெனில் அய்யாவின் இலகியங்கள் காலத்தின் முகமறிந்து செய்யப்பட்ட ஒப்பனைகளாக இருக்கிறது !
இந்த வேக யுகத்திற்கு ஈடுகொடுக்கும் முழுத் தகைமை கொண்டிருக்கின்றன !

நாம் வாழும் காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இவரை ஒரு மிகச் சிறந்த வழிகாட்டியாக,கலங்கரை விளக்காக போற்றிப் பாராட்டிப், பின் தொடரவேண்டியது எமது கட்டாய கடமை என்று நினைக்கிறேன் !
===============
ஆகாயமும் அழகு
பூமியும் அழகு ஆம்
என் கையில் ரொட்டித்துண்டு !

என்ன சொல்கிறது இந்த ஹைக்கூ ?

எழுதியவர் : கே.எஸ்.கலை (7-May-15, 11:34 pm)
பார்வை : 499

சிறந்த கட்டுரைகள்

மேலே