சென்னை எக்ஸ்பிரஸ்
சென்னை வரை செல்லும் அடுத்த தொடர் வண்டி இன்னும் சற்று நேரத்தில் தடம் 4ல் வந்து சேரும்..
முதன் முறை சென்னைக்கு கிளம்பும் ஒவ்வொருவருக்கும் இந்த அறிவிப்பை கேட்கும் போது தன்னிச்சையாக ஒரு ஆனந்த சிலிர்ப்பு உண்டாகும்.. ரயில் வரும் திசையைப் பார்த்தால், தங்களின் எதிர் காலத்திற்கான விதை குழந்தை போல் தண்டவாளத்தில் தவிழ்ந்து வருவது போல் இருக்கும்.
அதில் பெரும்பாலனோர் நடுத்தர வர்க்கத்தில் பிறந்து நகரத்தில் வேலை பார்க்க, விதியால் சபிக்கப்பட்டவர்களாகத் தான் இருக்கும். "வேலைக்குப் போயி பணம் சம்பாதிக்க வேண்டும்..!!" என்ற ஒரே ஒரு காரணத்திற்காக 22 வருடங்கள் பிறந்து வளர்ந்த ஊரை விட்டுவிட்டு செல்கிறேன் என்று சொன்னால் "வானில் மிதந்து செல்லும் மேகங்கள் கூட ஒரு நிமிடம் நின்று தன் பங்கிற்கு சில கண்ணீர்த் துளிகளைத் சிந்திவிட்டு செல்லும்""..
அப்படி அப்பா, அம்மா, அப்பத்தா மற்றும் சகோதரியையெல்லாம் பிரிந்து கிளம்பும் இளைஞனுக்கு முதலில் ஆறுதல் சொல்லி அரவணைத்துக் கொள்ளும் முதல் ஜீவன்.. தன் கனவுகளையும் நினைவுகளையும் சுமையாக கொண்டு ஏறுபவனுக்கு தன்னம்பிக்கை சொல்லி தாலாட்டு பாடும் வாடகைத் தாய்.. 5 மணி நேர பயணத்தில் 50 வருட வாழ்க்கையை கனவாக கண் முன்னே நிழலாட வைக்கும் மாய கண்ணாடி.
பயணத்தின் போது அது கற்றுத் தரும் அனுபவ அறிவுரைகள் ஏராளமானவை. பாதையில் வளைந்து நெளிந்து செல்லும் போது, போகும் இடத்தில் மற்றவர்களுடன் வளைந்துக் கொடுத்து சென்றால் தான் வாழ்வில் முன்னேற முடியும் என்பதை எடுத்துரைக்கும். அவ்வப்போது அது கொடுக்கும் சங்கூதுவதைப் போன்ற ஒலி, கண்டவரையெல்லாம் கண் மூடித்தனமாக நம்பி விடாதே என்று எச்சரிப்பதாய் இருக்கும். கடந்து செல்லும் நிறுத்தங்களைப் போல வாழ்வில் துயரங்களால் துவண்டு விடாமல் இலக்கை அடையும் வரை தடைகளை தாண்டி செல்ல வேண்டும் என்று தோள்களில் தட்டிக் கொடுக்கும்..
எத்தனையோ முறை வெவ்வேறு இடங்களுக்கு வெவ்வேறு தொடர் வண்டிகளில் சென்றிருந்தாலும் சென்னை செல்லும் தொடர் வண்டியை மட்டும் வெறும் வண்டி என்ற அளவில் பெரும்போக்காக பார்க்க முடியவில்லை. அது பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகயும், வடிகாலாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது...