நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

செத்துப்போன ஒரு மாட்டைத் தோலுரித்ததற்காக
ஐந்து தலித்துகளை
தோலுரித்துக் கொன்றவர்களே,
மனித வதையைத் தடை செய்யும்
சட்டம் எதுவும்
உங்கள் மனுநீதியில் இல்லையோ?
மனிதனின் உயிரைவிட
பசுவின் உயிர் மேலானதென்று
சொல்லும் உன் வேதம்,
நீ எப்போதும் குறி வைக்கும்
அந்த இனமும் இந்து என்று
சொல்லவில்லையோ?

தன் கன்றுக்காய்
சுரந்த பாலை
நீ தின்று கொழுப்பது
பசுவை மிகவும் வதைக்கிறது.

பசுவையும் கன்றையும் பிரித்துக்கட்டி
மார்பில் குழந்தையுடன்
பால்காரி அமர்வதும்தான்
பசுவை வதைக்கிறது.

உங்கள்
பசு வதைத் தடைச் சட்டத்தில்
பால் கறப்பது தடை செய்யப்படுமா?



(செய்தி: 1.இந்திய நாடு முழுவதும் பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வர உத்தேசம். செய்தி 2. 15.10.2002 அன்று ஹரியானா மாநிலத்தில் ஒரு இறந்த பசுவின் தோலுரித்துக் கொண்டிருந்த 5 தலித் இளைஞர்கள் (வயது 16 முதல் 20) இந்துத்வா வெறியர்களால் தோலுரித்துக் கொல்லப்பட்டனர்)

எழுதியவர் : சேயோன் யாழ்வேந்தன் (8-May-15, 8:09 pm)
பார்வை : 102

மேலே