விடியலின் விளக்கம் நீ 0o0 குமரேசன் கிருஷ்ணன் 0o0

இராமனுக்கு
ஓர்
அனுமன் ...

எனக்கு
நீ...!

இரகசியங்கள் காக்க...
இராஜியத்தை ஆள...
இராவணனை வெல்ல...

நீ
தேவையில்லை
எனக்கு ...

உன் பலம்.... நீ
உணர ...
எந்த ஜாம்பவானும்
வரப்போவதில்லை
இனி ?

இது ''கலியுகம் ''
இங்கு...
களவாடப்படுவது
காலங்கள் மட்டுமல்ல ..உன்
''கனவுகளும்தான் ''

விடியலின்
விளக்கம் நீ !!

இருளையே...
ஏன் வாசிக்கிறாய்

வெளிப்படாத...
விதையினால்
நிலத்திற்கு
என்ன பயன் ?

விட்டில் பூச்சியின்
விளையாட்டல்ல
வாழ்க்கை ...

சிந்திக்க மறந்த
மனிதா...

சிலந்திவலையின்
சிறப்பை உணர் ...

சிதறாத சொல்தான்
சிகரங்களைத்
தொடத்துணியும்...

கொட்டக் கொட்டத்தான்
புழுவும் ..
குளவியாகும்...

சொட்டச் சொட்டத்தான்
மழையும்
கடலாகும் ...

செதுக்கச் செதுக்கத்தான்
கல்லும்
சிலையாகும் ...

முடிவு எது
தொடக்கம் எது
முழுவதும்
அறிந்துவிடு ...

சிறு தொடக்கமே ..
பெரிய நிகழ்வின்
ஆணிவேர்

கண்ணிமை திற
கனவுகள் காண்

காலம் அறி
காரியம் செய்

கவலைகள் கட
காற்றாய் இரு

கற்பனை விரி
காகிதம் படி

சோம்பல் களை
சாம்பலில் உயிர்

விண்ணை அள
மண்ணில் விதை

உண்மை அறி
உன்னுள் மலர்

துயரம் மற
உயரம் பற

பூமி பிள
புதியதாய் பிற

மாற்றங்கள் நினை
மறுபிறவி எடு

உன்கனவு அறி
சுயங்களில் வெளிப்படு

சுகமானது
சுயமான
தேடல்கள் ...

நீ
நிழல் அல்ல
நிஜம் ..

விடியலின்
விளக்கங்கள்
நீ...!!!

''இருளை'' மட்டுமே
ஏன் வாசிக்கிறாய் ?
-----------------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (13-May-15, 9:21 am)
பார்வை : 508

மேலே