மூர்த்தியின் நாட்கள்

மூர்த்தி ....
எங்கள் கட்டுதரியில் கன்றாய் இருந்து
காளையாய் மாறும் பருவத்தினன்........

சிலரை கண்டால் முட்டும்-சிலரிடம்
சொரிந்து விடச்சொல்லி கழுத்தைக்காட்டும்
முகத்தை உரசி நாவால் வருடும்....

ஏர் பழக்கும் நாட்களில் இயலாமைக்கு பரிசாய்
முதலாளியின் தடியின் தடயங்களை முதுகில்
தாங்கிக்கொண்டு ஈனசுரத்தில் கத்தும்
மாலை கொஞ்சம் தவிடு காட்டிவிட்டால்
அடிஎல்லாம் மறந்தே போகும்

நேரம் கிடைக்கும்போதெல்லாம் பக்கத்துக்கு
முலைகுச்சியில் கட்டியிருக்கும் சிகப்பியிடம்
ஏதேதோ பேசி காதல் பொழியும்....

மாட்டுக் கொட்டாய் போடுவதற்கு வக்கற்ற
முதலாளிக்கு வாழ்க்கைப்பட்ட கொடுமைக்கு
அடைமழை காலத்தில் குளிரில் ஈசிக்கொண்டு
உயிரைமட்டும் பதுக்கிக் கிடக்கும்...

சோம்பேறியான சில நாட்களில்....
செய்து கிழிக்க ஏதுமில்லை என்று
மல்லாக்கப்படுத்து வெயில் காய்ந்துகொண்டே
தின்றதை மீண்டும் மீண்டும் அசைபோடும்

மேய்ச்சல்காலில் பக்கத்துவீட்டு காளையுடன்
சண்டையிட இன்னும் முளைக்காத கொம்பை
வரப்புகளில் முட்டி முட்டி கூர்மையாக்கும்
அந்த காளை இதை சட்டை செய்யாததால்
போட்டியை வாபஸ் வாங்கிக்கொள்ளும்

எங்கோ பெய்த மழையில் வந்த ஈராக்கற்றுக்கு
வாலை முறுக்கிக்கொண்டு பின்னங்கால்களை
விலுக்விலுக்கென்று உதைத்துக்கொண்டு
கொம்மாளமிட்டு ஓட்டம் பிடிக்கும்.....

யோசித்து பார்த்தால்.....
..........................................
ச்சே....போயும் போயும்
ஒரு மாட்டின் நாட்களையே ஒத்திருக்கிறது...
என் நாட்களும்...............

தேடிபிடித்து சிலரிடம் நட்பும்
சிலரிடம் பகைமையும் கொண்டு,
உயர்அதிகாரியிடம் வசைவாங்கிக்கொண்டு,
சம்பள நாளன்று சகலத்தையும் மறந்துவிட்டு,

இடையிடையே இடைவேளையில் காதல் செய்து,
வாரத்தில் வரும் ஒரு ஞாயிறுக்காய் தவமிருந்து,
கறிசோறு தின்று கண் அயர்ந்துவிட்டு,
திங்கள் காலை அதே வேலைக்குப்போய்,

வாட்சப்பிலும் எ.'.ப் பி யிலும் புரட்சி செய்து ,
எதிர் கருத்துக்கள் வரும்பட்சத்தில்
பதிவு நீக்கம் செய்து விட்டு,
யாரோ வெற்றிபெறும் கிரிக்கெட்டுக்கும்
சினிமாவுக்கும் குதூகலித்து நாசமாய் போவேன்.....

யோசித்து பார்த்தால்.....
..........................................
ச்சே....போயும் போயும்
ஒரு மாட்டின் நாட்களையே ஒத்திருக்கிறது...
என் நாட்களும்...............

எழுதியவர் : மேரி டயானா (14-May-15, 2:29 pm)
Tanglish : moorththiyin nadkal
பார்வை : 90

மேலே