பேரமைதி

கொடுக்கின்ற சீர்வரிசையில்
பித்தளை சாமான்
எதுவும் இருக்கக் கூடாது
பதினைந்து பவுனுக்கு
குண்டுமணி குறையக் கூடாது
என்றெல்லாம் நிச்சயதார்த்த பந்தலிலேயே
பட்டியலிட்ட ...கண்டிப்பான மாமியார்
..
உங்கள் வீட்டில் போட்ட நகையில்
ஆறு கிராம் குறைகிறது
என்று நகைகளை
மத்தியஸ்த்த எடைபோட்டு
கண்டுபிடித்த மாமானார்
..
தீபாவளி வரிசையோடு சேர்த்து
செய்து விடுகிறேன்..
சேதாரமாயிருக்கும்
மன்னியுங்கள் என்று சொல்லிவிட்டு
ஐந்து வட்டிக்கு ஆலாய்ப் பறந்து
கடன் வாங்கி கடமை முடித்த .. அண்ணன் ..
..
அம்மா முன்பு
அடிமையாய் புழுவைப் போல்
ஐந்து வருட அம்மண வாழ்வு
வாழ்ந்த அம்மாபிள்ளை கணவன்..
..
மாத விலக்கு நாளிலும்
இடுப்பு வலியிலும்..
சமைக்க சொல்லி ..
காபி போட்டு, கொண்டு வந்து
கையில் கொடுத்துப் போகச்சொல்லும்
நாத்தனார்கள்..
..
எதுவும் புரியாமல்
அழுது கொண்டே இருக்கும்
சிறு குழந்தை,
விதவை தாய்,
கடனாளி அண்ணன்..
..
எல்லோரையும்
புகுந்த வீட்டின் அடி, உதை
எல்லாம் மறந்து
அந்த பொது மருத்துவமனையின்
சவ அறையில்
வாய் பிளந்து படுத்திருந்த..
தோழி இறந்த சோகம் தாளாமல்
தற்கொலை செய்து கொண்டதாக "சொல்லப்பட்ட"-
ஆனால் "கொல்லப்பட்ட"

- தங்கையின் ..
கண்களில் தெரிந்தது
அண்ணனுக்கு..
அவள் வாழ்வில் காணாத
பேரமைதி!..

எழுதியவர் : கருணா (15-May-15, 1:08 pm)
பார்வை : 136

மேலே