ஒரு காதலியின் கடைசிக் கடிதம்
(இது விதிவிலக்குகளுக்கு மட்டும்.. உண்மையான காதலர்களை காயப்படுத்த அல்ல )
காதலனே
உனது மின்னஞ்சல் கிடைத்தது
கீ போர்டும் மவுசும் பிசுபிசுக்க
காதல் வழிந்த உன் கவிதையும் கிடைத்தது
வித்தியாசமான சிந்தனைக்காரன் நீ
கவிதையோடு அதை எழுதிய காட்சியும்
வீடியோ பதிவாய் இணைத்திருந்தாய்
அது கவிதையும் காட்சியும் காதலும் கலந்த
முப்பரிமாண யுக்தியாக இருக்கலாம்
அதுவல்ல விஷயம் இங்கே
காட்சியின் பின்புலத்தில்
உனது தொலைக்காட்சிப்பெட்டியில்
சிதைத்தெறியப்பட்ட இந்த மண்ணின் மகளுக்காய்
ஒரு மாபெரும் தீபகற்பம்
உணர்ச்சித்தீயால் எரிந்துகொண்டிருந்தபோது
அதிரவில்லை துடிக்கவில்லை நீ
நெருப்பின் நடுவே பிடில் வாசித்த நீரோ போல்
எந்தச் சலனமுமின்றி எனக்காய்
கவிதை எழுதிக்கொண்டிருந்தாய்
பிரபஞ்சத்தின் ஒட்டுமொத்த கொடூரத்தைப்பார்த்தேன்
அப்போது உன் முகத்தில் வழிந்த ரொமான்சில்
கவனம் சிதறிய ஒரு கணத்தில்
காட்சியின் ஒலியை ம்யூட் செய்தாயே
ஒட்டுமொத்த பெண்ணினத்தை
செருப்பால் அடித்த செயலது சாத்தானே
நீ வேறு நிர்பயா வேறில்லை
காயப்பட்டுக்கிடக்கிறேன் காதலியே
காயங்கள் ஆறும்வரை
கவிதையுமில்லை காதலுமில்லை
என்றிருந்தால் பெருமைப்பட்டிருப்பேன் காதலனே
படைப்பின் பிழையில்
சாக்கடையில் புழுத்தவன்
அந்த காமக்கொடூரன்
நீயோ போர்வைக்குள் திரிபவன்
வித்தியாசம் அவ்வளவுதான்
உளவியல் ரீதியில்
நீயும் அவனும் ஒரே இனம்தான்
சமநிலை தவறிய ஒரு தருணத்தில்
நானும் ஒருநாள் உனது நிர்பயாவாக
முடிந்துவிடக்கூடும்
நம் செல்பி முத்தங்களோ
திருமணமானால் முதலிரவுக் காட்சியோகூட
வளைத்தளங்களின் நிர்வாணப்பசிக்கு
பதிவேற்றம் ஆகிவிடக்கூடும்
என் காமக்கவிஞனே
உனது கவிதை
வண்டுக்கு மலர் ஊட்டும் தேனல்ல
மயக்கம் பாய்ச்சி மடிவிழவைக்கும் நரித்தனம்
ஒரு நீண்ட முத்தத்தோடு கையசைத்து
காட்சியை முடித்திருந்தாய்
அதுவே நான் பெற்றுக்கொள்ளும்
ரத்தவாடை வீசும் கடைசி முத்தமாகவும்
காதலின் கடைசி கையசைப்பாகவும் இருக்கட்டும்