மன்னித்தலின் பூ
மன்னித்தலின்
பூ வொன்றினை
முகர்ந்ததுண்டா
நீங்கள் ?
உங்கள் கருணையென்னும்
அலகால்
பிறரின் தவறுகளைக்
கொத்தியெடுத்துவிட்டு
பெருந்தன்மையின்
விதைகளைத் தூவி
மன்னிப்பின் மலர்களை
மலரவிடுங்கள்
ஏனெனில் -
உங்களுக்குள்
மன்னித்தலின் மலர்
மலர மலரத்தான்
சொர்கத்தின் கதவுகள்
திறக்கப்படிகின்றன ...
சிலுவைகளின்
ஆணிகளைப் பிடிங்கி
முட்கிரீடங்களை
முனை மழுங்கச் செய்து
சவுக்குகளை
சாமரங்களாக மாற்றும்
வல்லமையுள்ள
மன்னித்தலின் பூவினை
ஒருமுறையேனும்
முகருங்கள் ....
இப்பூவினால் மட்டுமே
புரூட்டஸ்களை
புனிதர்களாய் மாற்றி
சீசர்களின் முதுகில்
கத்தி பாய்ச்சுவதற்க்குப்பதில்
ஆரத்தழுவலைப்
பொன்னாடையாய்
போர்த்திட இயலும் ...
அவிர்பாகம் தரமறுத்த
தட்சனுக்கு
நெற்றிக்கண்ணன்
இம்மலரினை
பரிசளித்திருந்தால்
ருத்ரதாண்டவம்
ஆனந்தத்தாண்டவமாய்
மாறி
யாகம் பூவாய் மலர்ந்திருக்கலாம் ...
மறத்தலும்
மன்னித்தலும்
மட்டுமே
சொர்க்கத்தை நோக்கிச்
செல்லும் -
வாழ்க்கைத்தேரின்
இரண்டு சக்கரங்கலென்று
நம்புங்கள் நண்பர்களே ...
மன்னிப்பின் படையெடுப்பினால்
எதிரிகளின் நேசத்தைக்
கைப்பற்றி -
அவர்கள் நாண
நன்னயம் செய்திடலில்
ஒளிந்துள்ளது
ஆறறிவில் மலரும்
ஆத்மார்த்தத்தின் மணம் .