முத்தம்
தினம் , தினம்
கேட்டுக் கேட்டு
விடை கிடைத்த பின்னரும்
பரமபதமடைய விடாது
என்னைப்
பாடாய் படுத்துமொரு
முத்தக் கேள்வி -
" உலகிலேயே சிறந்த
முத்தம் எது ?
மழைக்காலத்தில்
நனைமரத்தின்
கீழ் நின்று
காதலன் காதலிக்குத்
தரும்
சூடடங்கா முதல் முத்தமா ?
கனவினில் நரிவிரட்ட
செவ்விதழ் கொவ்வை
இதழ் பிதுக்கிச்
சிரிக்கும்
மழலையின் கனவு
கலையாது
மயிலிறகு தீண்டலாய்
தாயிடும் பாச முத்தமா ?
தாய்நாட்டின்
மானம் காக்க
எல்லையில் உயிர் நீத்து
சொந்த மண் வந்த
இளம் கணவனின்
உயிரற்ற உதடுகளில்
கண்ணீரின் உவர்ப்போடு
கர்ப்பிணி மனைவியிடும்
இறுதி முத்தமா ?
முத்தம் கேட்ட
நாளெல்லாம் தராது
உனக்கு வேறொருவரோடு
மணம் பேசி முடிவான
மறுநாள்
பூங்காவிற்கு வரவைத்து
உன் உயிரனைத்தையும்
ஒன்று கூட்டி
இதழ் வழி
என் புறங்கையினில்
நீயளித்து
என்னை மரத்துப்
போக வைத்த
மரண முத்தமா ?
உயிருக்குள் உயிர்
சுமந்து
தன் வாரிசைப் பெற்றெடுத்த
மறுநிமிடம்
மழலையின் உள்ளங்கை
வருடி -
மனைவியின் நெற்றியில்
கணவன் தரும்
நன்றி நவிலலின்
மாசற்ற நல்முத்தமா ?
மலையடிவார
ராத் தடாகத்தில்
பூத்துச் சிலிர்க்கும்
வெண்முத்து அல்லியின்
இதழ்களில்
நிலவு தரும்
ஒளி முத்தமா ?
காதல் , தியாகம்
பாசம் , நன்றி
இயற்கையென
உதடு வழி
உயிர் சிதைந்து
சிதறிக்கிடக்கும்
இம் முத்தங்களில்
எம் முத்தம்
" சிறந்த முத்தம் " ?