எழுநூற்று சொச்சம்

பழுப்பு கலந்த வெள்ளை
அச்சிடப்பட்ட ஒரு சின்னம்
சுருட்டிய தழும்புகள்.

வாழைத்தண்டால் ஏற்பட்ட
போகாத ஒரு கறை
எங்களது என்பதன்
அடையாளம்.

உதிரும் எழுத்துக்களால்
பிழையாகிப்போன
கடையின் பெயர்.

அவசராமய் முதல் நாள்
இழுத்துத் தூக்கியதில்
விரலை கடித்துவிட்ட
கைப்பிடிக் கணு.

அதன் சகாக்களிடமிருந்து
பிரிக்கப்பட்ட சினத்தில்
வாங்கிய பழி அதுவாம்.

சிவாஜி கணேசன் பக்கத்தில்
ஒரு ஆணியில் தொங்கவிட்டு
ஓய்வு நேரத்தில் உயர் இடம் தந்ததால்
சமாதானம் ஆனதாம்.

சந்தைக்கு செல்லும் வரை
அதிகம் அழுத்தப்படாத
அப்பாவின் கையிடுக்கில்
அதன் சொகுசுப் பயணம்.

திரும்பும் போது
பட்டியல் சாமான்களை
அசராமல் சுமந்து
நன்றி சொல்லி அமரும்.

சின்ன வயதில் என்னை
அதனுள் வைத்து
ஒரு முறை ஆட்டி
ஆசை காட்டியதில்...

என் அடம்பிடிப்பால்
தினம் ஒருமுறையாவது தூக்கி
விளையாட்டுத் தொட்டிலானது.

இனி அதனை
வேலை வாங்க
அப்பாவுக்கு முடியவில்லை.

தொட்டிலாகி மகனை
சிரிக்க வைத்ததால்
பழசானாலும் தூக்கி வீச
மனமில்லை.

இலவச வரையறையை
பூர்த்தி செய்யாமலும்
அந்த எழுநூற்று சொச்ச ரூபாய்
இரசீது காட்டி வாதாடி
வாங்கி வந்த கட்டைப்பையை

வாரத்திற்கு ஒரு முறையாவது
எடுத்து தூசுத்தட்டி
பரண் மேல் வைக்கிறார்
இன்றுவரை அன்புள்ள அப்பா.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (17-May-15, 9:26 am)
பார்வை : 61

மேலே