அன்பு என்று சொன்னாலே அம்மாதான்

அன்பு என்று சொன்னாலே அம்மாதான்...
=====================================
உறவுகள் அனைத்தும்
அம்மா ஆவதில்லை
அனைத்து உறவாகவும் இருந்திட
அம்மாவிற்கு சாத்தியம்...
அன்பெனும் புள்ளியின் துவக்கம்
ஆரம்பமாகிறது அம்மாவிலிருந்து...
நீண்டு வளர்கிறது
அவள் ஆயுள் உள்ள மட்டும்...
தொல்லைகள் இல்லா கருவறையில்
உல்லாசமாக வாழ்ந்தபோது
அம்மாவின் வருடல்களில்
நம்மோடு வளர்வது அன்பும்தான்...!!
வலிகளுக்கும் அளவுண்டாம்
அறிவியல் கண்டுபிடிப்புகளில்
பொறுத்துக் கொள்ளும்
வலிகளின் உச்சமாய்
நாற்பத்தைந்து டெல் யூனிட்
கணித்தவன் அறிவாளி...
அம்மா நம்மை உலகிற்கு
அறிமுகப்படுத்திய அந்த கணத்தில்
பொறுத்துக் கொள்ள முடியாத
ஐம்பத்தேழு டெல் யூனிட் அலகீடுகளில்...
எலும்புகள் இருபதும் ஒரே நேரத்தில்
உடைந்து நொறுங்கும் அளவு வலிகளில்
அலறி துடித்து அழுது...
நா வறண்டு நாடி தளர்ந்து
மரண வாசல் சென்று
நம்மோடு ஜனித்தவள்...
மயக்கம் தெளிவுறா நிலையிலும்
பாசத்தை பன்னீராய் தெளித்தவள்..
வலிகளை மறந்த கண்ணீரினால்...
அன்பினை அளவின்றி ஏந்தியபடி
வலிகளை மீறிய அவளின் புன்னகை
கணக்கிட இயலுமா அந்த அன்பினை...??
வலிகளோடும் பாசம் விதைப்பவள்
அம்மாவை அன்றி வேறு யாராக
இருக்க இயலும்?
அன்பினை குழைத்தெடுத்து செய்த உருவம்
அம்மாவை அன்றி
வேறு யாராக இருக்க இயலும்...??
அன்பிற்கு மாற்று வார்த்தையே
அம்மாதானே...!!
(குறிப்பு: :கவி ஓவியா" பத்திரிக்கை 17-05-2015 அன்று நடத்திய கவியரங்கில் வாசிக்கப் பட்ட கவிதை. தலைப்பினை அளித்து எழுத பணித்த பத்திரிக்கை ஆசிரியர் சகோதரர் திரு இளையபாரதி அவர்களுக்கு எனது நன்றிகள்)