அவசரமென்ன அல்லி மலரே…

முத்துப்பல் காட்டி
ஏழுலகும் வியக்கும் வண்ணம்
மெல்ல அசைந்து நின்றாய்
என்னை நீ கொள்ளை கொண்டாய் !
கண்சிமிட்டி எனை அழைக்க
மண்தனில் நான் குதூகலிக்க
வந்தது மழைக்காலம்
நமக்கது சிறைக்காலம்
சென்றதுவே கார்காலம்
வந்ததுவே இராக்காலம்
மீண்டும் கண் சிமிட்டி
வந்தணைக்க நீ அழைக்க
உன் பேதமைப் பெண்குணம் கண்டு
சிந்தித்தவனாய்ச் சில நாழி கழித்து
உன் அறியாமை தனை நான்
சிரிப்பாய் உதிர்த்திட்டேன்…
சிரிப்பென்ன சிருங்கார மன்னா ?
சிந்தையைத் திறந்து சொல் என்றாய் !
நகைப்புடனே நான் சொன்னேன்
நங்கையே ! நானிருப்பது மண்ணகம்
பங்கயப் பாவாய் நீ இருப்பது விண்ணகம்
கங்கை ஆறெனப் பெருக்கெடுக்கும்
என் கற்பனைக் குதிரை
பறந்துன்னை அடைந்து விடும்
எங்ஙனம் நானுன்னைத்
தழுவ வந்தடைவ தென்றேன்..!
நீ இல்லா எக்கணமும்
ஞாலத்திலே எனக்குத் துன்பம்
நான் வருவேன் உனைத் தேடி !
எனச் சொன்ன நீ…………..
மறுகணமே எனை நோக்கி
சிட்டாய் பறந்து வந்தாய்.
ஐயகோ ….!
என்ன அவசரப்பட்டு விட்டாய்
என்னுயிரே எனை விட்டுப் பிரிந்து விட்டாய்..
வானிலிருந்து விழுந்திட்டால்
எரிந்திடுவாய் எனத் தெரியாதா ..?
தாய் தனைப் பிரிந்த உன் நெஞ்சைத் தூற்றவா
எனக்கென வாழ்ந்த உன்னைப் போற்றவா
போற்றினாலும் தூற்றினாலும்
நீ இருந்த வெற்றிடத்தை
உற்று நோக்கித்
தத்தளித்து தவிக்கிறேன்
என் நட்சத்திரக் காதலியே……