நாலடிப் பின்னல்
"செஸ்டினா" என்னும் ஆங்கிலப் பாவகையைத் தமிழில் எழுத முற்பட்டேன்....
காப்பு :
------------
சிறியேன் முயன்றேன் கவிகளில் பின்னல்
அறிவின் களிறே துணை !
சிவன்
------------
கங்கைக்காய்ப் பொற்சடையை விரித்தான்
---மாறனவன் முப்புரத்தை எரித்தான்
சங்கைத்தன் காதினிலே தரித்தான்
---விளையாடல் பலசெய்து சிரித்தான் !
கண்ணன்
-----------------
அன்னையையே ஏமாற்றிச் சிரித்தான்
---அண்டத்தை வாயினிலே விரித்தான்
பொன்மேவும் ஆடைகளைத் தரித்தான்
---பொய்யரக்கர் கூட்டத்தை எரித்தான் !
ஏசுபிரான்
----------------
மனதினிலே வஞ்சமதை எரித்தான்
---மலைப்பிரசங் கஞ்செய்து சிரித்தான்
தனதுடையாய்க் கந்தலையே தரித்தான்
---தாராள அன்பினெல்லை விரித்தான் !
நபிகள் நாயகம்
----------------------------
கடவுளவன் பேச்சுகளை விரித்தான்
---காரிருளாம் அறியாமை எரித்தான்
உடலினிலே அரபுடைகள் தரித்தான்
---ஊர்சேர்ந்து எதிர்க்கையிலும் சிரித்தான் !
பொதுவானவன்
----------------------------
நன்மைகளை விரித்தான் ! நலிவுகளை எரித்தான்
இன்பமதை தரித்தான் ! இன்னமுதாய்ச் சிரித்தே !
வித்தக இளங்கவி
விவேக்பாரதி