அழகன் கலிவெண்பா

காப்பு :

ழகரம் எடுத்துக் கவிதை வனைந்தேன்
குகன்தாய் பராசக்தி காப்பு !

நூல் :

தொழுதேன் ! தொழுதேன் ! அழகா ! கழலை
முழுதாய் விழுந்தே எழுந்தேன் ! புழுதிப்
பழத்தைக் கிழவிக் கழைத்துக் கொடுத்தாய்
மழலைத் தமிழை மழையாய்த் ! தழைக்கும்
உலகுக் களித்தாய் அழகு மயிலா !
பிழைக்கு ளுழன்றே அழுகும் எனக்குக்
குழந்தைக் குருவே விழியா லருள்வாய்
மெழுகாய் ஒழுகித் தொழுமென் வழக்கம்
முழுதாய் அடியேன் மரணித் திடுமந்
நிமிடம் வரையில் நெகிழேன் பரமா !
எழலை விழைவேன் ! எழிலே ! பதத்தில்
விழலை விழைவேன் ! தமிழின் மொழியை
பிழையா நிலையாய் அடியேன் வனைய
விழைவேன் முருகா ! எழில்வேற் குமரா !
பொழிலே ! அழகின் புனலே ! புகழை
அழியும் பெயரை விழையேன் குகனே !
பொழிவாய் ! பொழிவாய் ! அமிழ்தத் தமிழை !
ஒழிப்பாய் எனக்குள் ளிருக்கும் பிழையை !
உனையே நினைத்து வழியா விழியும்
உனையே துதித்து எழுதா மொழியும்
பொழியா முகில்போல் ! பயனில் வழிபோல்
அழிவே எனக்கு ! வடிவே லவனே !
எழுதும் எழுத்தின் எழிலும் உனதே
எழுதும் மொழியின் பொருளும் உனதே !
பவளப் பறழே ! பழமே ! தவமே !
தவறை யொழிக்கும் திருமால் மருகா !
குழையா அமிழ்தே ! குழையை அணிவாய் !
அழையா தெனக்கு மருள்வாய் வருவாய் !
வழியே ! வழியின் துணையே ! சிறியேன்
குழியில் வழுக்கி விழுந்தால் எழவே
தடியாய் வருவாய் தணிகை யரசே
மடியா தொழியா திருக்கும் மிடிமை
களைவாய் கமழும் எழில்மார் பழகா !
விளைவாய் மனதுள் விசையாய் ! விகடா !
தலையில் எழுதும் பழமா மயனை
நிலையாய்ச் சிறையில் நிறுத்தி னவனே !
உனையே துணையாய் மனதுள் நிறுத்தி
வனைந்தேன் சிறுவன் வளமாய்க் கவிதை
மிகவும் சிரமம் எனினும் முடித்தேன்
ழகரந் தனிலே கவி !

பின் குறிப்பு : முருகன் ! மிகவும் அழகன் அல்லவா ....அவன் தந்த தமிழில் அழகான ழகரத்தைக் கொண்டு வடித்தேன் ஒரு கலிவெண்பா ! இது 40 அடிகளைக் கொண்ட இன்னிசைக் கலிவெண்பா. இதில் இருக்கும் மொத்த ழகரங்களின் எண்ணிக்கை 80...

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (24-May-15, 7:02 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 153

மேலே