நல விசாரிப்பு
உப்பு வேண்டாம்
சர்க்கரை வேண்டாம்
எண்ணெய் வேண்டாம்
என சமையல் குறிப்புகள்
தர வேண்டாம்
வாகிங் ஜாகிங் சைக்ளிங்
நல்லதென உடற்பயிற்சி
வகுப்புகள் எடுக்க வேண்டாம்
இன்னும் மூத்தவளுக்கு கூட
மணமாகலை என
ஆதங்கம் கொள்ள வேண்டாம்
யாருக்கேதும் கெடுதல்
நினைக்கல சாமி புண்ணியத்துல
எனக்கேதும் வந்ததில்லை என
பெருமூச்சு விட வேண்டாம்
“இப்படித்தான் மேலத்தெரு
கணேசனுக்கு மைல்ட் அட்டாக்னு”
எச்சரிக்கை பீதியை கிளப்ப வேண்டாம்
அப்பல்லோ இல்ல மலர்தான்
இதுக்கு பெஸ்ட்னு பொது அறிவுத்
தகவல்களைத் தெளிக்க வேண்டாம்
கோயிலுக்கு சென்று கற்பூரம்
ஏத்தி அவர்கள் நலத்திற்கென
சிறப்பாய் ஏதும்
வேண்டிக்கொள்ள வேண்டாம்
அவர்களை அப்படியே
விட்டு விடுங்கள் போதும்
அவர்கள் நலமாய் வாழ....!!!