கடவுள் என்னும் கொசுத்தொல்லை
கடவுள் என்னும் கொசுத்தொல்லை
=============================================ருத்ரா
தூங்க முடிவதில்லை.
ஒலிபெருக்கிகளில்
மின்சாரத்தொண்டைகளின்
ஒலிமழை.
அது என்ன
கடவுள் என்பது கொசுத்தொல்லையா?
காதுகளில் ரீங்காரம்.
மொழி புரியாத வேதம்போல்.
சட்டென்று தட்டினால்
கையும் தொடையும்
அடித்துக்கொண்டது தான் மிச்சம்.
அதற்குள்
இமை முகட்டில்
மூக்கு நுனியில்
இன்னொரு ஜெபகீதங்களின்
ரீங்காரம்.
பயப்படு
பயந்து கொண்டேயிரு.
அப்போது தான்
பஜனைப் பாடல் வழியே
நான் உனக்குள்
சுரங்கம் வெட்டுவேன்.
இது யார் பேசுவது?
இருப்பினும்
ஆகாசத்திலிருந்து
யார் அதை எறிந்தது?
டி.வி சீரியல்களிலும் கூட
அர்ச்சனைத்தட்டுகளும்
அர்ச்சகர்களுமே
கதாநாயகர்கள்.
கடவுளே
வானத்திலிருந்து எறிந்த கேள்வி இது!
கடவுள் என்பது எது?
தலையில்
விண்கல் விழுமோ என்று
ஓராயிரம் கவலையாய் அது.
அடுத்த தடவை
சுநாமியின் நாக்கு
எத்தனை லட்சம் உயிர்களை
சுருட்டுமோ
என்று அடி வயிற்றுக் கலக்கமாய் அது.
பூகம்பக்கோட்டில்
நம் வீடும் வந்துவிட்டது.
அதனால் குளியலறை
கரப்பான் பூச்சியை
நசுக்கும்போதும்
காலின் கீழ் பூமி
ரிக்டர் ஸ்கேல் ஏழரையில்
ஒரு குலுங்கலா?
என்ற தெய்வ அச்சம் அது.
சூரியன் கூட
வெப்பத்தை காறி உமிழ்ந்ததில்
இந்த தடவை
ஆயிரம் பேர் பலி!
தெய்வ குற்றத்தால்
வானத்துக்கே தீப்பிடித்து விட்டதோ
என்ற ஐயம் அது.
எறியப்பட்டது என்ன
அதைப் பார்க்கவும் தைரியம் இல்லை.
அதைத் தொடவும் தைரியம் இல்லை.
குலை நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
"கடவுள் என்பது எது"
இது கேள்வியா? விடையா?
இரண்டுமே அச்சம் தான்.
கடவுளுக்கு
மனிதனிடம் அச்சம்.
மனிதனின் அறிவினால்
மனிதனுக்கு
கடவுளிடம் அச்சம்.
இன்னும் அவனிடம் மிஞ்சியிருக்கும்
அறியாமையினால்.
================================================