பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வுப் போட்டி - அவள் அப்படித்தான்

திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கதை :

அவள் அப்படித்தான்

====================================================================================

" அவள் அப்படித்தான் " என்கிற தலைப்பின் கவர்ச்சித்தன்மையால் ஈர்க்கப்பட்டு கதைக்குள் நிழைகிறேன். பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதையில் வரும் " கவிதா " போன்ற சித்தரிப்பை எதிர்பார்த்து கதைக்குள் நுழைந்தால் எடுத்தவுடனே வரவேற்கிறது காமாட்சி ஆத்தாவின் கம்பீரத் தோற்றம். உண்மையில் கதைத்தலைப்பின் எதிர்பார்ப்பின் மீது விழுகிற இந்த ஏமாற்றம்தான் நிமிர்ந்து அமரச் செய்கிறது.

// “ஒரு பொம்பளையா இருந்துகிட்டு,எத்தனை உசுரைக் கொன்னுருப்பா.., இவளுக்கெல்லாம் இந்த கெதி வராம...?”

“ஆண்டவன் ஏதோ பரிதாபப்பட்டு இதோட வுட்டானேன்னு..,பொழச்சா சந்தோசப் பட்டுக்கட்டும்..!” //

கதையின் போக்கை ஒருவாறு ஊகிக்க முடிகிறது இந்த வசனங்களால் ...கூடவே ஒரு நல்ல கதையைப் படிக்கப்போகிறோம் என்கிற கம்பீரத்துடன் கதைக்குள் வாசகன் நடந்துவர அதன் கதவுகளை நன்றாகவே திறந்து வழி ஏற்படுத்திக் கொடுக்கிறார் அபி மேற்கண்ட இந்த வசவுகளின் மூலம்.

நிகழ்வுக் காட்சியில் இருந்து பின்நோக்கி விரியும் கதைப் பாணி பொதுவாக ஓர் அயர்ச்சியை ஏற்படுத்தவல்லது. இவ்வாறான கதையோட்டங்களில் சுவாரசியம் குறைவு. முதல் மரியாதையில் கூட இந்தமாதிரியான ஒரு யுக்தியைப் பயன்படுத்தியிருப்பார் பாரதிராஜா. ஆனால் அவர் பெற்றது பெருவெற்றி. அதேபோலத்தான் அபியும் இங்கே நிகழ்வுக்காட்சியில் இருந்து பின்னோக்கிச் செல்லும் ஒரு கதையினை வடிமைத்து கிட்டத்தட்ட வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். காரணம் இக்கதையின் முடிவில் எனது கன்னங்களில் வழிந்த இருதுளிக் கண்ணீர்., மற்றும் எனது தண்டுவடத்தில் ஏற்பட்ட ஒரு துளி சிலிர்ப்பு.

எந்தவொரு படைப்பும் இந்த மாதிரியான உணர்வுகளை வாசகனுக்கு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்திலேயே படைக்கப்படுகிறது. அந்த வகையில் அபி எந்த நோக்கத்தில் கதையை எழுதினாரோ அந்த நோக்கத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். கதைக்களமாக பொள்ளாச்சியை எடுத்துக் கொண்டது இந்தக் காமாட்சி ஆத்தா அபி அவர்களுக்கு நன்கு தெரிந்த ஓர் ஆளுமையாகத்தான் இருக்க முடியும் என்கிற யூகத்திற்கு அடிகோலுகிறது.

விளிம்புநிலை மனிதர்கள் பற்றிய கதைகள் புதுமைப்பித்தன் காலத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்தாலும் வாசிக்க அலுப்பு ஏற்படுத்தாதவை. எடுத்த எடுப்பிலேயே காமாட்சி ஆத்தா ஆடுவெட்டும் காட்சி தத்ரூபமாக மனத்திரையில் காட்சிவடிவம் பெறுவதும், வெட்டப்படும் ஆட்டின் பதட்ட மனோநிலையைக் கூட அபி ,

// நேற்று இரவுகூட பசுந்தழையும்,கழுநீரும் கொடுத்தவன் இப்போது எதற்கு கால்களைக் கட்டுகிறான் என்று நினைத்து பதறியதோ என்னவோ..? மே..மே..என்று வழக்கத்தைவிட பெருங்குரலெடுத்துக் கத்தியது. //

என்கிற வரிகளால் வாசகனுக்கு உணர்த்துகிறார் நுண்மையாக.

காமாட்சி ஆத்தா மற்றும் கோபால் சார்ந்த சுற்றுப்புறங்களை அபி கதையில் விளக்கவில்லை. ஆனாலும் அந்தச் சூழலை அவர்களின் சம்பாஷனை மூலமே வாசகனுக்கு குறிப்பாலுணர்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கதை நடையில் விகடனில் வரும் " நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பின் " தரம் ! வட்டார வழக்குகளும்b ஆங்காங்கே எடுத்தாளப்பெற்று கதையின் உயிர்ப்புத் தன்மைக்கு உரம் சேர்க்கின்றன.

தனது சொத்துக்களையெல்லாம் காமாட்சி ஆத்தா தன் மகன் சண்முகத்துக்கு எழுதி வைக்காமல் தான் வளர்த்த கோபாலுக்கு எழுதிவைத்து இறந்து போவது வழக்கமான எதிர்ப்பார்த்த கதை முடிவுதான் என்றாலும் பளிச்சென்று கண்ணில் நீர் துளிர்க்கச் செய்கிறது அபியின் கதைநடை.

தளத்தின் மிகச்சிறந்த கதைசொல்லிகளுக்கெல்லாம் தான் முன்னோடி என்பதை அபி மீண்டும் மெய்ப்பித்திருக்கிறார் இக்கதையின் வாயிலாக.

கதையின் குறைப்பாடு என்று பார்த்தால் கதை சீக்கிரம் முடிந்து விட்டதோ எனும்படியான ஒரு தோற்றம் ! . வாசகனுக்கு ஒரு முழுமையான அனுபவத்தைத் தருவதில் அபி இன்னும் சற்று மெனக்கெட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும் தன்னிடம் கறி வாங்க வருபவர்களுக்கு ஈரலை

// “கொழந்தைகளுக்கு ஆத்தா குடுத்துச்சுன்னு,உங்க பொம்பளைகிட்டே சொல்லுங்க..!” //

என்றபடியே இலவசமாகத் தரும் காமாட்சி ஆத்தா, மீந்த கறியை அக்கம்பக்கத்து வீடுகளுக்குக் கொடுத்துவிடும் ஆத்தா, துணிக்கடையில் தனது கைக்கு வந்த அதிகப்படியான நூறு ரூபாயைத் திருப்பிக்கொடுத்த ஆத்தா, தனது மரணப் படுக்கையிலும் ஊர்தூற்றும் அவப்பெயருக்கு ஆளாவதில் சிறிய நெருடலையும் கொஞ்சம் முரண்பாட்டையும் உணரமுடிகிறது.

மற்றபடி கதையை வாசித்து விட்டு, மனதுக்குள் சற்று ஆழ்ந்து போவதில் எங்கள் ஊரில் வாழ்ந்த மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் சில " காமாட்சி ஆத்தாக்கள் " நினைவுக்கு வருகிறார்கள் !

ஒரு கதையின் ஆகச்சிறந்த வெற்றி என்பது இதுதான் ......

========================================================================================

இது எனது படைப்பே என்று உறுதியளிக்கிறேன்.

எழுதியவர் : குருச்சந்திரன் (28-May-15, 3:42 pm)
பார்வை : 134

சிறந்த கட்டுரைகள்

மேலே