என் அம்மா

அதிகாலையிலேயே
அமைதி தொலைக்கிறாள் ,
விழித்தவுடனே
விஸ்வரூபம் எடுக்கிறாள் ,
வீட்டுக்கடன் முடித்து
நாட்டுக்கடனுக்குள் தொலைக்கிறாள்
தன் பிள்ளைக்கடனுக்கு மட்டும்
கண்ணீரையே பரிசளிக்கிறாள் …

தன்
கணினித்திரையிலும்
என் முகமே தெரியுமென்பாள்
என் முத்தச்சுகத்திற்காய்
நித்தமும் ஏங்குகிறேனென்ருரைப்பாள் ,
மார்பு வலிக்கும் கணமெல்லாம்
தன் மரணமே நிகழுமென்பாள் …

தன்
அலுவலக கோப்புகள் மீது
அதீத கோபம் கொள்வாள்
எனக்கே எனக்கான
அவள் ஸ்பரிசத்தை
எப்படி அவை
களவாடலாமென்றே வினவிடுவாள் …

போகின்ற அவசரத்தில்
பொத்தான் பூட்ட மறந்திடாதே ,
உன்னோடு நானில்லை
உடைகளை சரிசெய்து கொள்ளம்மா …

வீடுதிரும்பும் போதும்
வேறென்ன எண்ணிடுவாள்?
விரைந்து வந்து என்னை
வாரிக்கொள்ளவே எத்தனிப்பாள் …

வருந்தாதே அம்மா
வரட்டும் ஞாயிறு
உன் அன்னைப்பசி தீர
அணைத்துக்கொள்
என்னை !
என் பிள்ளைப்பசி தீர
பிரியவேமாட்டேன்
உன்னை!

எழுதியவர் : chelvamuthtamil (2-Jun-15, 7:25 am)
பார்வை : 217

மேலே