உணவு

உணவு....!

அந்த அடர்ந்த காட்டின் நதியோரம்..... நதி என்று சொல்வது சரியா என்று தோன்றவில்லை... காட்டாறு என்றே கொள்வோம்... அபரிமிதமாக தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.... கொஞ்சம் மேட்டிலிருந்து இறங்கும் பொழுது மீன்கள் துள்ளிக் குதித்து இறங்கியது.... கொஞ்சம் தூரத்தில் நிலம் சமனடைய நீரோட்டம் சற்று அமைதி அடைந்தது..... துள்ளிய மீன்கள் சுற்றி வலம் வந்து தன் கூட்டத்துடன் சற்று கரையருகே ஆராய்ச்சியில் இருந்தது......

தண்ணீரில் யாரங்கே ஒரு குச்சியை நட்டு வைத்தது...? இந்த நீரோட்டத்திலும் ஆடாது நிற்கும் குச்சி அந்தச் சிறிய மீனுக்கு வியப்பை உண்டாக்க தாய் மீனை அழைத்தது..... தூரத்தில் இருந்து பார்த்த தாய் ஓடிச் சென்று தன் குஞ்சை அழைக்க அந்தக் கண நேரக் கவனமின்மை ..... அந்தக் கூரிய அலகுக்குத் தாய் பலி.... அந்தச் சிறிய மீன் தாயை இழந்து பாடம் கற்றுக் கொண்டது..... இரை கிடைத்த கொக்கு இடத்தைக் காலி செய்தது.... வேடிக்கை பார்த்த சின்னக் கொக்கு இரை தேடும் பாடம் கற்றுக் கொண்டது.....
....
உச்சாணிக் கொம்பில் இருந்து இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராஜாளி தனக்கேற்ற இரை வரக் காத்திருந்தது... கொழுத்த மீன் கண்ணில் பட ஒரு விமானம் இறங்குவதுபோல் சீராகப் பறந்து வந்தது... இறக்கையை அடிக்காமல் சத்தமின்றி மிதந்து வர, நீரின் மேல் சிறிது தூரம் பின் தொடர்ந்து தன் கால் நகங்களால் மீனைக் கவ்வியது.... கொழுத்த மீனைத் தூக்க பலம் கொண்ட மட்டும் தன் இறகை அடித்துப் பறந்து தன் இருப்பிடம் அடைந்தது.... தன் குடும்பத்துடன் அன்றைய உணவுத் தேவையைத் தீர்த்தது....
....
காட்டின் மற்றொரு பகுதி.... அந்தப் பரந்த புல் வெளியில் மான் கூட்டம் அமைதியாய் மேய்ந்து கொண்டிருக்க சட்டென்று உள்ளுணர்வு உந்த ஓட்டம் பிடித்தது... சுற்றும் உள்ள மான்கள் சிதற தன்னை ஒரு சிறுத்தை துரத்துவதை அறிந்து ஓட்டம் பிடித்தது.... இப்படியும் அப்படியும் ஆட்டம் காட்டி வெகு நேர ஒட்டத்திற்குப் பின் சிறுத்தையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மான் துவண்டது.....
....
தூரத்தில் காத்திருந்த ஓநாய்களுக்கும், வானத்தில் வட்டமிடும் கழுகுகளுக்கும் அன்றைய உணவு உறுதியாயிற்று.....
...
அவன் தன் முண்டாசைக் கழற்றி முகத்தில் வழியும் வேர்வையைத் துடைத்துக் கொண்டிருந்தான்.... இந்த முறை நல்ல விளைச்சல் கொஞ்சம் காசு பார்க்கலாம்... சிறிது நேரத்தில் லாரியுடன் வியாபாரி வந்தான்..... வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை, நாலு விரல்களில் தங்க மோதிரம், கழுத்தில் பட்டைச் சங்கிலி, புல்லட் பட படக்க வந்தவர் பேரம் பேசி அடிமட்ட விலைக்கு விளைச்சலை அள்ளிச் சென்றார்.... கையில் கிடைத்த காசை எண்ணிக் கொண்டிருக்கும் போதே கடன் கொடுத்தவர் வந்து நிற்க.... கொடுக்க வேண்டியதைக் கொடுத்து விட்டு துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார் வீட்டை நோக்கி.... இன்றும் கஞ்சியோ கூழோ ஏதோ ஒன்று நிச்சயம்.
....
அந்தப் பெரிய டவுனில் இடைத் தரகர் கோடவுனில்... லாரி லாரியாக வந்திறங்கும் தானிய மூட்டைகளை முதுகில் தூக்கி சிலர் அடுக்கிக் கொண்டிருந்தனர்.... கூடவே இயந்திரங்களும்.... நாள் முடிவில் அண்ணாந்து பார்த்த கூலி பெருமூச்சு விட்டான்... இன்று அவனுக்கு கூலி கிடைக்கும்... அதனால் கொஞ்சம் உணவும்.... தரகர் பெருமிதத்துடன் 'நல்ல விலை வரும் பொழுது நாலு காசு பார்க்க வேண்டும்'
....
அது ஒரு பிரம்மாண்ட பல் பொருள் அங்காடி. அந்த மிடுக்காக உடை அணிந்த மேலாளர் ஒவ்வொரு அடுக்காகச் சென்று காலாவதியான உணவுப் பொருட்களை அகற்றிக் கொண்டிருந்தார். வாரா வாரம் அவர் இந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறார். ஒரு பெரிய பட்டியலைத் தயாரித்து அந்தப் பொருட்களுடன் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.... இவை எந்தக் குப்பைத் தொட்டி சென்றடையுமோ..... ? அவர் மனதுள் இதுபோல் எத்தனை லட்சம் கடைகளில் நடந்து கொண்டிருக்கும் என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.
....
அந்தக் கடைக்காரர் புதிதாக வந்திறங்கிய காய் கறிகளைப் பார்த்து மலைத்தார்.... நேற்று முன்தினம் வந்தனவற்றில் வாடி வதங்கிய விற்காத காய், பழ வகைகள் ஒரு பக்கம் மலைபோல் குவிந்து கிடந்தது....
....
வானத்தில் வட்டமிடும் கழுகின் பார்வையில், அந்தத் தெரு, அடுத்த தெரு என்று உலகம் முழுக்க வீணாகிக் கொண்டிருந்த உணவு கண்ணில் பட்டது.... அதற்கு உலகமே வீணாக்கப்பட்ட உணவு நிறைந்தத குப்பைத் தொட்டி போல் தோன்றியது..... ஆனால் அதற்குப் பசி இல்லை!

ஆனால் மனிதனுக்கு கழுகு ஏன் தன் தலைக்கு மேல் வட்ட மடிக்கிறது என்பது புரியவில்லை....!
-----முரளி

எழுதியவர் : முரளி (2-Jun-15, 11:29 am)
Tanglish : unavu
பார்வை : 672

மேலே