குடி கெட்டிருக்கும்

உயரமான அந்த அலுவலகக் கட்டிடத்தின் உள்ளே எப்போதும் பரபரப்போடு இங்குமங்கும் கையில் பைல்களை எடுத்துக் கொண்டு ஓடி ஓடி வேலை செய்யும் ரமேஷ்..கடந்த இரண்டு நாட்களாக வேலைக்கு வராதது குறித்து அவன் ஆபீசில் பல வதந்திகள்..

அவனோடு நெருங்கிப் பழகும் லாவண்யாவும் இரண்டு நாட்களாக லீவில் இருந்தது வதந்தித் தீக்கு ஊற்றிய எண்ணெய் ஆனது.. குடும்பஸ்தன் தான் என்றாலும், ரமேஷின் அரட்டைப் பேச்சும், நகைச்சுவை உணர்வும் யாரையும் எளிதில் வசீகரித்து விடும்..வெளிப்படையாக அவனோடு நட்பு கொண்ட நண்பர்களில் சிலர், உள்ளூர சற்று பொறாமையும் கொண்டிருந்தார்கள் என்பதுதான் உண்மை.." இவனுக்கு என்ன மச்சமோ..அதிகாரியானாலும் சரி, நண்பர்கள் ஆனாலும் சரி, வாடிக்கையாளர்கள் ஆனாலும் சரி, அலுவலகத்தின் அனைத்து வயது பெண்களானாலும் சரி,...எல்லோரையும் எப்படி இவன் சுலபமாக சரித்து விடுகிறான்.." என்ற ஆதங்கம் மறைந்திருக்கும் சில நண்பர்களின் கலாய்க்கும் வார்த்தைகளில்..
"என்னப்பா..ரமேஷ்..உள்ளே போன வேகத்துல திரும்பிட்ட..நீ லேட்டா வந்ததுக்கு ஒன்னும் சொல்லியிருக்க மாட்டானே .. மேனேஜர் கெழம்..பேச்சிலேயே கவுத்திருப்பியே.." என்றும், "ரமேஷ்..எப்படிப்பா..எவளானாலும் ஒங்கிட்ட அப்படி சிரிச்சு சிரிச்சு பேச வெச்சிடற..என்ன மாயமோ..ஹூம்.." என்று பெருமூச்சு விடும் பெருசுகளையும் சேர்த்து அவனுக்கு மறைமுக எதிர்ப்பாளர்கள் கூட்டம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வந்தது, அவனுக்கும் தெரியும்..

எல்லோரது பேச்சையும் ஒரு சிறு புன்னகையோடு எதிர்கொண்டு, " அண்ணே,..எதுவும் பெரிய சாதனை இல்லண்ணே.. நாம இருக்கிற இடம் எப்போதும் சந்தோஷமாவே இருக்கணும்னு நெனச்சு எல்லாத்தையும் சந்திச்சா.. பொய்யாக் கூட யார் மேலயும் கோபமோ வருத்தமோ வரதில்லே....விஷயம் அவ்வளவுதான்..எங்க அப்பா எனக்கு சொல்லித் தந்த பெரிய ரகசியம்னே இது..சொத்தும் அதான்.." என்று சாதாரணமாக சொல்லி விட்டு இடத்தை விட்டு நகர்வான் ரமேஷ்.

ஆனால் இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைப்பது போல ஏதாவது செய்து "இவன் அப்படி ஒன்னும் பெரிய மகான் இல்ல..மிக சாதாரணமான மனுஷன்தான் " என்று எல்லோருக்கும் காட்ட வேண்டும் என்று அந்த அலுவலகத்தில் இரண்டு மனங்கள் நினைத்தது ரமேஷுக்கு தெரிய வாய்ப்பில்லை..

அவனது நெருங்கிய நண்பர்கள் என்று அவன் நினைக்கும் சீனியர்கள் வரதனும், நடராஜனும் தான் அந்த புண்ணியவான்கள். அன்று வரதனுக்கு பிறந்த நாள் .. மாலை அலுவலகம் முடியும் நேரம்.. " என்னப்பா ரமேஷ்..எட்டு மணிக்கு ஹோட்டல் கிராண்டுக்கு வந்திடு..சின்னதா ஒரு பார்டி ..நம்ம நடராஜனும் வந்திடுவான் ..என்ன" என்றவரை மறுக்க முடியாமல் "சரி சார் .." என்றான் ரமேஷ்.

அன்று தொடங்கி, மெதுவாக பீர் என்று ஆரம்பித்து மாதம் ஒரு முறை என்பது வாரம் ஒரு முறை ஆகியது ஆறு மாதங்களில்...அவனுக்கு இல்லாத குடிப் பழக்கம்!

வீட்டில் மனைவியை ஒரு மாதிரி சமாளித்துவிடு சாதுர்யம் இருந்ததால், பழக்கம் அழகாக வளர்ந்தது..

அன்று இரவு..விடிந்தால் ஜனவரி 1..புத்தாண்டு..

பாரில் குடித்து விட்டு, காரை எடுத்துக் கொண்டு வெளியே வந்த ரமேஷின் முகம் மறைந்ததும் .."சியர்ஸ்..தொலஞ்சான் ரமேஷ்" என்று நான்காவது ரவுண்டை ஆரம்பித்தனர் வரதனும் நடராஜனும்!

தலையெல்லாம் கனமாக இருந்ததால், ரமேஷ் காரை ஓரமாக பார்க் செய்து விட்டு , வெளியில் வந்து ஒரு சிகரெட்டை பற்ற வைத்தான்..மணி இரவு..பதினொன்று..குளிர்..மார்கழி குளிர்..அவனைக் கடந்து சென்று பச ஸ்டாப்பில் நின்ற வெளியூர்ப் பேருந்திலிருந்து இறங்கிய லாவண்யாவை பார்த்ததும் பரவசம் ஆனான் ரமேஷ்..

" லாவ்.. என்ன இந்த நேரத்தில.. "
"ஊருக்கு போயிருந்தேன் ரமேஷ்...பஸ் கிடைக்க லேட்டாயிடுச்சி,..ஹாப்பி நியு இயர்.." என்று கை நீட்ட, கை கொடுத்த ரமேஷின் கை சூடாக கொதித்தது..
" என்ன ரமேஷ்..ஒடம்பு சரியில்லையா.. இப்படி சுடுகிறதே.." என்ற லாவண்யாவை பார்த்து, " ஒண்ணுமில்ல ..கொஞ்சம் காய்ச்சல்..சரியாயிடும்..உன்னை ஹாஸ்டல்ல டிராப் செய்துட்டு கிளம்பறேன்..ம்ம்.இரு .." என்று முன் கதவை திறந்தான் ரமேஷ்.

கார் போய்க் கொண்டிருந்தது..
ஒற்றைக் கையால் ஸ்டியரிங்கைப் பிடித்தபடி ஒட்டிக் கொண்டிருந்த ரமேஷின் இன்னொரு கை சீட்டின் மேல் தாவி, மெல்ல லாவண்யாவின் தோள்களை தொட்டது..
"ரமேஷ்.."..
"லாவ்.."
" கையை எடுங்க.."
"ப்ளீஸ்"
"ரமேஷ்......"
அவள் கத்தியதில் சடாரென பிரேக்கைப் போட்டு காரை நிறுத்திய ரமேஷை முறைத்து பார்த்து "ச்சீ.." என்று சொல்லி விட்டு இறங்கி விடு விடுவென நடந்து சென்று இருளில் மறைந்தாள் லாவண்யா..!

இரவு வெகு நேரம் வரை உறங்காததால், காலையில் தலை பாரத்துடன் லீவு போட்டு விட்டு படுத்து விட்டான் ரமேஷ்..

அன்று முழுவதும் ஒரே பாரம்..மனதிலும் தான்..

"எவ்வளவு உயர்வான ஸ்தானத்தில் என்னை வைத்து , என் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த லாவண்யா ஒரு ஒற்றைச் சொல்லில் தள்ளி விட்டு போய் விட்டாளே" என்ற அவமான உணர்ச்சி நேரமாக ஆக அதிகரித்துக் கொண்டே போனது..

மறு நாளும் லீவு போட, அவன் மனைவி சுஜாதாவிற்கு ஒன்றும் புரியவில்லை..ஏதோ சொல்லி மழுப்புகிறான் என்பது மட்டும் புரிந்தது..ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை ..

மூன்றாம் நாள்..

காலை பஸ் ஸ்டாப்பை நெருங்கும் போது, லாவண்யா புன்னகையோடு நின்று கொண்டிருந்தாள்..வருகிறாயா என்று கேட்பதற்கு கூட துணிவில்லை ..ரமேஷ் உடல் லேசாக அதிர காரை மெதுவாக ஓட்டினான்..
கையைக் காட்டி நிறுத்தச் சொன்ன லாவண்யாவை அதிசயமாய்ப் பார்த்து காரை நிறுத்த..

"போகலாம் ரமேஷ்.. ரெண்டு நாளா உடம்பு சரியில்ல.." என்று எதுவுமே நடக்காதது போல சிரித்தபடி பேசிக் கொண்டு வரும் லாவண்யாவிடம் என்ன சொல்வதென்றே தெரிட்யாமல் இயந்திரமாய் காரை செலுத்தினான் ரமேஷ்..

திடீரென, " லாவ்.. என்ன மன்னிச்சிடு.." என்றான்.

"எதற்கு" என்றாள் பார்வையை வெளியில் ஒட்டியபடி .

"அன்னைக்கி நான்..உன்கிட்ட.. "

"விடுங்க ரமேஷ்..நான் மறந்ததை ஞாபகப் படுத்த வேண்டாம், நீங்கள் எவ்வளவு நல்லவர்னு எனக்கு தெரியும்..என்னை ஒரு சகோதரன் மாதிரி இல்ல நண்பன மாதிரி எடுத்துக்கன்னு சொல்லி ஒரு சகோதரன் ஸ்தானத்தில இருந்து நீங்க எனக்கு செஞ்ச உதவிகளை நான் மறக்க மாட்டேன் எல்லாம் அந்த போதைதான் காரணம்னு அப்பவே தெரிஞ்சிகிட்டேன்.. தட்ஸ் ஆல்"

அவள் கைகளை இரண்டு கைகளாலும் பற்றிய ரமேஷ், "நான் குடிக்கிறத விட்டு ரெண்டு நாளாச்சு ..லாவ்..எப்போதும் அது வேண்டாம்னு விட்டு விட்டேன்.."

"எப்படி"- லாவண்யா..!

" ச்சீ.." என்று ஒரே சொல் சொல்லி விட்டு விட்டேன்" என்றான் ரமேஷ்!

# SUPPORT NANDHINI #
(நன்றி : நண்பர் சரவணாவின் உந்துதலுக்கு )

எழுதியவர் : கருணா (2-Jun-15, 12:22 pm)
பார்வை : 316

மேலே