பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி- தல புராணம்

அபியின் அறிவுரை:

கூல்டிரிங்க்ஸ் கேட்ட மகன் சீனு, மகள் பவித்ராவுக்கு இளநீர் வாங்கித் தரும் வேல்முருகன் மூலம் அபி உடல் நலத்துக்கு இளநீர் நல்லது என்று மட்டும் சொல்லவில்லை. வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்றும் நமக்கு அறிவுறுத்துகிறார்.அது மட்டும் அல்ல டிரைவிங் செய்யும் போது பேசக் கூடாது என்றும் கண்டிக்கிறார்.

அபி கதாபாத்திரங்களில் மிளிரும் மனித நேயம்:

சாலையின் ஓரத்தில் தள்ளாடும் கிழவி தரையில் சரிந்ததும் வாகன ஓட்டிகள் நிற்காமல் பறந்த போதிலும் நமது அபியின் கதாநாயகன் தண்ணீர் குடிக்க வைத்து தனது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு இறங்க வேண்டிய இடத்தில விட்டு உதவுகிறார். மனித நேயத்தை, உதவும் மனப்பான்மையை அபியின் நிறைய கதைகளில் காணலாம். இதிலும் அப்படியே!

அபியின் தலபுராணம்:

பொள்ளாச்சியைத் தாண்டி அங்கலக்குறிச்சியில் இருக்கும் அம்மன் கோவிலின் பூசாரி, சிலை பற்றி விசாரிக்கும் வேல்முருகனிடம் "ஒரு ஐநூறு வருஷங்களுக்கு முன்னாலே" என்று தலபுராணம் சொல்லத் துவங்குவது, வாய்வழிக் கதை தமிழ்நாட்டில் பரவலானது தான் என்பதைக் காட்டுகிறது. நிஜமாய் நடைபெற்ற ஒரு சம்பவத்தை தங்களுக்கு வசதியாக சிலர் மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் அக்கதையில் கதிர் அறுப்புக்கு வரும் மகேசுவரி என்ற பெண் அந்தப் பகுதியை ஆண்ட ஒருவனால் தந்தையை இழந்து, தன கற்பைக் காக்க, கொலை செய்து காணாமல் போய் சாமியாகிறாள்.

அபியின் புரட்சிக் கருத்து:

"தன் கையே தனக்குதவி"
"வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்"

என்ற பழமொழிகளுக்கேற்ப பெண்கள் தைரியசாலிகளாக விளங்க வேண்டும் என்பதைத் தான் அபி இங்கே சொல்ல விழைகிறார். சமுதாயத் தவறுகளைச் சுட்டிக் காட்டிப் பயனில்லை. தட்டிக் கேட்டு, வெட்டிச் சாய்க்க வேண்டும் என்ற புரட்சிக் கருத்தை நவீன மங்கையரின் உள்ளங்களில் விதைக்கிறார்.

தல புராணம் குறும்படமாகுமா?

சிலையை போட்டோ எடுக்க லென்சை வேல்முருகன் ஜூம் செய்த போது, ஒரு உருவம் மகேசுவரி அம்மன் சிலையை உற்று நோக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. அப்படியானால் காணாமல் போன மகேசுவரி உயிரோடு தான் இருக்கிறாளா? இன்னும் எத்தனை முதலாளித்துவத்தை, காமவெறியர்களை கொலை செய்தாள்? செய்யப் போகிறாள்? அடுத்தடுத்த கதைகளை எதிர்பார்க்கலாமா? நிச்சயமாக குறும்படமாக கூட இச்சம்பவத்தை எடுக்கலாம். அபி அவர்களுக்கு என் உள்ளம் கனிந்த பாராட்டுக்கள்!

எழுதியவர் : வருண் சுந்தர் (4-Jun-15, 10:52 pm)
சேர்த்தது : varunsundar
பார்வை : 82

மேலே