விவசாயக் கனவுகள் - விவசாயம் போட்டிக் கவிதை

விவசாயக் கனவுகள்...
கிராமமெனவுரைக்க காட்சி வயல்வெளிகள்
தோன்றி விழிநிறைக்கும் காலம் மாயையின்று
பண்ணை பணியெனவே நாற்று நடவெனவே
வாழ்ந்த உழவர் குலம் நகர(ம்)மிடம் பெயர்ந்ததோ..?
தானிய(ம்) நெல் விதைக்க நிலமுண்டு நீரில்லை
நீர்வளம் நிறைந்திருக்க விதைதூவ ஆளில்லை
ஒன்றிருக்க ஒன்றில்லை என்கின்ற நிலையாகி
உழவு நலிந்துவிட உணவுப்பொருள் விலையானதோ..??
அயல்நாட்டு பேர்களும் மேம்புற நிலமவர்க்கு
உள்நாட்டு உழவனும் கண்ணீரில் குளிப்பதற்கு
பயிராண்ட நிலமெங்கும், நீராண்ட ஆறெங்கும்
கல் விதைத்து கல் வளர்க்க தொழிற்சாலை ஆள்கின்றதோ..??
பூமி மடிபிளந்து நாளும் மீத்தேன் அறுவடையில்
மண் விடமாகி மலடாகி விவசாயம்தான் மாளுதோ.??
பாசன மற்றநிலம் பாசான படை சூழ்ந்து
சாகு படிசாகும் இழிநிலையில் உழவும் வீழ்ந்ததோ..??
விளைநிலங்கள் மனையாக தடை விதிக்கும்
கடுஞ்சட்டம் நாடதுவும் கண்டிடும் நாளெதுவோ
சொற்ப விளைபொருளும் வெளிநாடு குடியேறும்
வியாபார நிலையதுவும் என்றுதான் மாறுமோ??
பசியாற உணவின்றி பட்டினி கொல்லும் முன்
இருக்கும் நிலம் காத்து மழைக்கு விதையூன்று வோம்
ஊடுபயிராக மரம் வளர்த்து மழை பெருக்கி
நாடுயர விவசாய வளம்யாவும் நாம் கூட்டுவோம்..
என்றோ பெருக்கெடுத்து ஓடிவரும் மழைமங்கை
கடலொடு கரம் கோர்க்க தடைசெய்து அணை போடுவோம்
திசைதிருப்பி ஆறுகுளம் அனைத்திலும் மழை நிறுத்தி
விளைநில பசுமைக்கு விருந்துண்ண மழை யூட்டுவோம்
பசுமை எழில் கொஞ்சும் நாடு நமதென்று
பார் அனைத்தும் பறைசாற்றுவோம் - நாடும்
பஞ்சம் பிணியின்றி வாழ்வு நிலையுயர்த்தி
உழவுதனை தொழுது ஆனந்த கூத்தாடுவோம்...