படைப்பின் ரகசியம்

என் பரிசோதனைக் கூடத்தில்
எட்டு ஆண்டுகளாய்
எத்தனையோ முகங்கள்
அவற்றின் உணர்ச்சிகள்..
அதற்கு அர்த்தம் கேட்டு
பதிந்த உண்மைகள்..
என்று ..
லட்சக்கணக்கான..
பதிவுகளை..
குறியீடுகளாக்கி..
சில்லுகளில் பொதித்து
என் பேனாவின் தலையில்
படம் பிடிக்கும்
ரகசியக் கருவி
வைத்து..
மனிதர்களை ரகசியமாய்
படம்பிடித்து
அவர்தம் உள்ளுணர்வை
பின்னர் அறியும் முயற்சியாக..!..
..
நான் கண்டு பிடித்த கருவியின்
சோதனையை
நேற்று தொடங்கினேன்..

முதலில்..

என் கவிதை ஒன்றை
நண்பரிடம் காண்பித்தேன்..
சிரித்தபடி அவர் சொன்னது
"அருமை" .. "அட்டகாசம்"!
அவரது மனஓட்டம் படித்தது..
"இதுக்கு கவிதைன்னு
நீயே பேர் வச்சிக்கினியா...
சாவு கிராக்கி" !

அடுத்ததாய், அலுவலகத்தில்
அதிகாரியிடம் நான் செய்த
அன்றைய சிறப்பான வேலையை
சொன்னேன்..
"சூப்பர்" என்றார்..
மனவோட்டம் சொன்னது,
" தீவட்டி.. ஒன்ன விட
சின்னப் பயலுங்க, பொண்ணுங்கல்லாம்
என்னமா வெல்லாடுராங்க..
ஒனக்கு சம்பளம் வேற,"' !

வீட்டிற்கு வந்து
"தலை வலிக்குது..
காபி இருக்கா"..என்றதும்,
மனைவி சொன்னது,
" ரெண்டு நிமிஷம்"
மனவோட்டம் கண்டது,
"அய்யா..வெட்டி முறிச்சிட்டு
வந்து அதிகாரம் செய்றத பாரு..
ஹூம் ..எல்லாம் தலையெழுத்து"

சப்தமில்லாமல்
பேனாவை ..
உடைத்துப் போட்டேன்..
படைப்பின் ரகசியம் புரிந்ததால்!

எழுதியவர் : கருணா (8-Jun-15, 10:51 am)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : Padaippin ragasiyam
பார்வை : 329

மேலே