குறட்டை சத்தத்தின் இடையினில்

சாம்ராஜ்யங்களுக்கும் ..வெள்ளையருக்கும்
முகமன் கூறி ஒற்றுமை ஒழித்து
சொற்ப லாபங்களுக்காய்
சோரம் போன
ரத்தங்களின் மிச்சங்கள்
எப்படி ..
செக்கு மாடுகளாய் பூட்டுகின்றன..
நம்மை தேர்க்காலில் கட்டுகின்றன..?

பூட்டப்படுவதும்.. கட்டப்படுவதும்
புதிதல்ல என்றாலும்,
பூட்டை உடைக்கவும் ..
கட்டை அறுக்கவும்
தினவுற்ற தோள்கள்
என்ன மயக்கத்தில்
இங்கு வாழ்கின்றன..?

ஏட்டிக்கு போட்டியாய்
பேசிடும் கூட்டமெல்லாம்
கூடியொன்றாய் சேர்ந்து
பங்கு போடுவது
எவரது குருதி ..
எவரது சதை ..?

வட்டங்களும் ..
சதுரங்களும்..
அடைக்கப் படும் சிறையிருட்டில்
தோன்றுமோ ஒரு பகல் ..?
அதுவும் ..
எரிக்குமோ பொய்யுலக நிழல்?

நிஜங்கள் இங்கே தூங்கிட..
நிழல்களின் கொண்டாட்டம்..
எங்கே அந்த கல்கி ..
அவனுமா உறங்குகின்றான்..
குறட்டை விட்டு..?

இன்னுமொரு விடுதலை..
உண்மையான விடுதலை..
பெறுவதற்கு முன்னமே..
இன்றைய நேற்றும்..
நாளைய இன்றும்
ஒன்று கூடி
அழிக்குமோ அதை?

எழுதியவர் : கருணா (8-Jun-15, 2:48 pm)
பார்வை : 339

மேலே