வறுமையின் பிரதிநிதி

ஆலய முன்றலில்
வறுமையின் பிரதிநிதியாய் அமர்ந்த
யாசகனின்
வயிற்றுக்கும் மனத்துக்கும்
செய்திப்பரிவர்த்தனை
நிகழ்ந்து கொண்டிருந்தது

எவ்வளவு நேரம்தான்
ஏமாற்றுவாயென்னை
ஒரு மிடறு தண்ணீராவது
தர மாட்டாயா?
அன்னப்பருக்கையேனும்
உள்ளே அனுப்ப மாட்டாயாவென
வயிறு இறைஞ்சியது

அவன் மனமோ
"இன்னும் கொஞ்சம் பொறு.
யாராவதொரு புண்ணியவான்
அன்னதானம் தர வரலாம்.
இல்லையேல்
அவர் விட்டெறியும்
சில்லறைக் காசில்
ரொட்டித்துண்டாவது
வாங்கித் தருவேனென
சமாதானம் கூறியது

ஏவலர் புடை சூழ
பளபளக்கும் வாகனத்தில் வந்த
பட்டுவேட்டிக்காரன்
ஏந்திய கைகளை
ஏறெடுத்தும் பாராமல்
தன் தூய்மை கெட்டிடுமெனத்
தூரவே விலகி
நாகரிகம் தெரியாத பரதேசிகள்
அநாதைப் பிச்சைக்காரர்கள் என
அநாகரீகமாய் திட்டி
ஆணவத்தோடு உள்நுழைந்தான்

ஏழைக்கிரங்கா
இரும்பு மனத்தினன்
கையூட்டாய்ப் பெற்ற
கறுப்புப் பணத்தினை
கண்ணில் ஒற்றியே
உண்டியலில் போட்டான்

பகவான் சன்னதியில்
பவ்யமாக நின்று
பெரிதினும் பெரிதாக
கோடி போதாதென
வேண்டுகோள் பல
விண்ணப்பித்தவாறேயிருந்தார்

கனவானும் அறியவில்லை
பசிக்குதவாப் பணத்தை
பகவானும் விரும்ப மாட்டானென்று

கனவானும் நினைக்கவில்லை
கூடி நின்றவரெல்லாம்
கூடவே வர மாட்டார்
தன் மூச்சும் நின்றபின் என

நினைத்திருந்தால்
அனாதை என்ற சொல்லையவரும்
அறவே வெறுத்திருக்கலாம்

வழக்கம்போல்
இடது பாதம் தூக்கி
உடுக்கை ஏந்தி
பரதேசிக் கோலத்தில்
பரமேஸ்வரன்
புன்னகையுடன்
காட்சியளிக்கின்றார்.

அவர் மனதில்
என்ன எண்ணங்களோ?
இப்படி எத்தனை மனிதர்களை
தினமும் சந்திக்கிறார்.
எதுவாயினும்
தீரப்பு அவர் கையில்.
எல்லாம் அவன் செயல்.

-வளர்மதி சிவா

எழுதியவர் : வளர்மதி சிவா (8-Jun-15, 6:50 pm)
பார்வை : 56

மேலே