தங்கப்பதுமை

அரிதாரம் பூசி
ஆபரணங்களால்
மேனி போர்த்திய
ஆரணங்கு
நானவளை
உற்றுப்பார்த்ததாக
குற்றப்பத்திரிகை
வாசித்தாள்.
கோப நாணேற்றி
வேகமாய் வீசினாள்
கேள்விக்கணைகளை !

அதிர்ந்தேன்
திடீர்த் தாக்குதலால்
விழித்தேன்
விழிக்கதவுகள் திறந்து
விசையுடன் இழுத்தேன்.
பழிச்சொல் இதுவென
வார்த்தைகளை நானும் .

இரசித்தேன்
நிஜமெதுவெனில்
அவளிடையினில்
"ஒட்டி"யாணத்தில்
பட்டுத் தெறித்த
கதிரவனின்
பொன்னொளிக் கதிர்களை
நன்கு ரசித்தேன்.

நினைத்தேன்
நுதலில் தனித்து
சுருட்டி விடப்பட்ட
சிகை அலங்காரத்துக்கு
செலவிடப்பட்டது
எத்தனை நிமிடங்களோ
என நினைத்தேன். .

நுகர்ந்தேன்
மல்லிகை வாசனை
கழுத்தருகே
சில மொட்டுக்கள்
இதழ் விரித்து
கடை விரித்திருந்தன .

சிகை மூடி மலர் சூடி
சுந்தரியிவள்
இன்னும் கொஞ்சம்
அலங்கரிக்கக்கூடாதா
வாயு நிரப்பிய
பூக்காரி வயிறினை
பாதி உணவேனும்
பங்கிட்டிருக்குமென
எனத் தவித்தேன் .

சிந்தித்தேன்
பருவப் பெண்ணின்
பட்டுத் துகிலுக்கு
நீங்காத் துயிலுற்ற
பட்டுப் பூச்சிகள் எத்தனையோ
கொலைக்குற்ற உடந்தையில்
இவளுக்கும் பங்கென
மனத்துக்குள் நிந்தித்தேன்.

அவதானித்தேன்
அபாயத்தின் நிறம்
சிவப்பென்பர்
அதனால்தானோ
அதரத்தின் அழகுக்கும்
செஞ்சாயமூட்டி
ஆபத்தான இடமென
சமிக்ஞை தருகிறாரோ
சேஷ்டை நாயகரை
சொல் வாளெடுத்து
சிதறடிப்பாளோ?

புரிந்து கொண்டேன்
எதையும் தாங்கும் இதயம்
இருக்குமா என்பது சந்தேகம்
தங்கம் தாங்கும்
தேகமென்பதில்
ஐயப்பாடு சற்றுமில்லை
தங்கப் பதுமையென
நாமம் வந்த கதை
இதுதானோ?
நான் ஏதோ நினைக்க
நங்கையோ
நகர்காவலரை அழைக்க
நகர்கிறேன்
நடைபாதை நோக்கி !!!

-வளர்மதி சிவா

எழுதியவர் : வளர்மதி சிவா (8-Jun-15, 7:01 pm)
பார்வை : 109

மேலே