ஏண்டா எங்க தலைவன் போஸ்டரக் கிழிச்சே

அவன் வேக வேகமாக வந்தான்..சைக்கிளை விட்டு இறங்கினான்...அந்த போஸ்டரை எடுத்து கவனமாகப் பசை தடவி ஒட்டினான்..போய்க் கொண்டே இருந்தான்.

அந்தப் பெரியவர் மெதுவாக நிதானமாக அதைக் கிழித்தெறிந்துவிட்டு அந்த பேர்ப்பலகை அருகில் படுத்துக் கொண்டார்.அவன் சாயங்காலமாக அதே வழியில் போகும்போது அந்தப் போஸ்டர் கிழிபட்டிருப்பதைப் பார்த்தான்..மறுபடியும் ஒரு போஸ்டரை உருவி மறுபடியும் கவனமாகப் பசை தடவி ஒட்டினான்.அந்தப் பெரியவர் அவன் போனதும் மறுபடியும் மெதுவாக நிதானமாக அதைக் கிழித்தெறிந்துவிட்டு அந்த பேர்ப்பலகை அருகில் படுத்துக் கொண்டார்.

காலையில் அந்தப் பேர்ப்பலகையப் பார்த்த அவனுக்கு வெறி தலைக்கேறியது...""யார்டா அது தலைவன் போஸ்டரக் கிழிக்கிறது?"" எதிர்க் கட்சிக்காரங்க வேலையாத்தான் இருக்கும்.......இருடா இன்னிக்கு ரெண்டுலே ஒண்ணு பார்த்துரலாம்னு மனசுலெ கறுவிக் கொண்டு போய் ஆளுங்களைக் கூட்டிக் கொண்டு வந்து மறுபடியும் போஸ்டரை ஒட்டிவிட்டு மறைவில் காத்திருந்தார்கள்..

அந்தப் பெரியவர் மறுபடியும் மெதுவாக நிதானமாக அதைக் கிழித்தெறிந்துவிட்டு அந்த பேர்ப்பலகை அருகில் படுத்துக் கொண்டார்.

டேய் என்று அலறியவாறு கூட்டம் ஓடிவந்து பெரியவரைப் போட்டு அடித்து நொறுக்கியது...."ஏண்டா எங்க தலைவன் போஸ்டரக் கிழிச்சே? எவண்டா அனுப்புனது உன்னைய ?" என்று காட்டுக் கத்தல் கத்தியது.அடித்துத் துவைத்தது...

பெரியவர் அசையாமல் இருப்பதைப் பார்த்ததும் "விடுங்கடா செத்துடப் போறான்....ஒட்டுடா மறுபடியும்...இனி எவன் வருவான் கிழிக்கன்னு பார்த்துரலாம்" என்றபடி மறுபடி ஒட்டிவிட்டுப் போனார்கள்....

பெரியவர் மீண்டும் மெல்ல எழுந்து அவர்கள் போனவுடன் மறுபடியும் கிழிக்க ஆரம்பித்தார்.....அங்கிருந்த பெட்டிக் கடைக்காரன் கூவினான் "ஏன் பெரிசு உசுரோட இருக்கவேண்டாமா ? எதுக்குய்யா அதைக் கிழித்து வம்பை விலைக்கு வாங்குறே??.......பெரியவர் அதைக் கிழித்து முடித்துவிட்டு அந்தப் பேர்ப்பலகையில் எழுதியிருந்த பெயரை வாஞ்சையுடன் தடவினார்....கார்கில் போரில் உயிரிழந்த தியாகிகளுக்காகக் கட்டப் பட்டது.........என எழுதியிருந்ததை கடைக்காரன் சத்தமாக வாசித்தான்......

அதில் ஆனந்த் என்ற பெயரைத் தடவி.. ம்ம்ம் என் பையன்... என்று முனகினார் பெரியவர் உதட்டில் வழிந்திருந்த ரத்தத்தைத் துடைத்துக் கொண்டே.

எழுதியவர் : (9-Jun-15, 3:20 pm)
பார்வை : 193

மேலே