மானங் கேட்டவர்க்கே மரியாதை அதிகம்

மானங் கேட்டவர்க்கே மரியாதை அதிகம் - மன
---சாட்சி கொன்றவர்க்கே பொருட்செல்வங் குவியும்
வானத் தளவினதாய் வளர்த்திடுவார் பொய்யை - சொலும்
---வாக்கில் ஒருநாளும் வைத்திலரே மெய்யை
ஏனிப் பிறப்புகளைச் செய்தாயோ தேவி - பிறர்
---ஏய்க்கப் படுகின்றார் பொய்மைகுணம் மேவி
கூனித் தலைகளையும் குனிந்துவாழ் வோமா - அட
---கூட்டி லுரைசிங்கம் வேட்டையிடப் போமா

ஆற்றுப் படுக்கையிலே மண்ணெடுத்தார் அங்கே - பல
---ஆண்கள் பெண்களையும் அழிவினிலே இட்டார்
தேற்றிப் பலவுரைகள் நல்கிடுமுன் னோரை - தொலை
---தூரந் தள்ளுவதில் நிம்மதியைக் கண்டார்
மாற்றி மாற்றிஉரை பேசுகின்ற வீணர் - ஒரு
---மேடை தனில்பேசக் கைதட்டல் செய்வார்
சேற்றில் கால்வைத் துழவுசெய் வோரை - வெறும்
---செத்தை என்றிங்கு ஒதுக்குதலும் செய்வார் !


வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (9-Jun-15, 9:07 pm)
சேர்த்தது : விவேக்பாரதி
பார்வை : 84

மேலே