கடைசிக் கட்டில்

ஆற்றின் வடுக்களை கடக்கும்போதெல்லாம்
புண்ணாகி வலிக்கிறது நெஞ்சம்
நடுநிசி சுடுகாட்டை கடப்பதுபோல்
தானாக வருகிறது அச்சம்.......

புரண்டு வந்த வெள்ளம் எங்கே - அதில்
திரண்டு வந்த மீன்கள் எங்கே
வறண்டு போன நதியிலும் -மணல்
சுரண்டுதிங்கே ஒரு கூட்டம்

ஆற்றங்கரை ...
மனித நாகரீகத்தின் தொட்டிலாம்
கடைசி உறக்கத்தின் கட்டிலாம் ....
எப்படி என்கிறீர்களா?
ஈமச்சடங்குகள் செய்வதால் மட்டும் அல்ல ....

காட்டோடு மனிதனாய் இருந்த மிருகம்
கரையோடு ஒதுங்கிய நாள் முதலாய்
மிருகமாய் மாற்றம் கொண்டான் மனிதன்

ஆற்றங்கரையில் விவசாயம் செய்து ....
கிராமங்கள் செய்து....
படகுகள் செய்து...
பாலங்கள் செய்து...
ஆற்றைக் கடந்து ....
ஆலைகள் செய்து...
கழிவுகள் நிறைத்து ....
இதற்குமேல்தான் நடைமுறை லட்சனம் தெரியுமே....

பிழைப்புக்காக ஆற்றிடம் தஞ்சம் புகுந்த
பஞ்ச இனமே .... மனிதனே....
பால் சுரக்கும் முலைகளை
அறுத்து தின்னும் உங்களின்
அசுர பசியை என்னென்று சொல்வது?

மிச்சம் மீதி எச்சமாய் இருந்த
அடையாளத்தையும் மணலை
வாரி அழித்துவிட்டீர்களே .....
வரவிருக்கும் வரலாற்றுக்கு
என்ன பதில் சொல்வீர்கள்?....

ஒன்றுக்கும் உதவாத உங்களின்
மதமும்,சாதியும்,
தேச எல்லைகளும்
அழியக்கூடாதென அடித்துக்கொள்கிறீர்கள்
போங்கடா....
இனமே அழியபோகிறது ....
உரிமையாம்....உடைமையாம்....

ஆற்றின் இயல்பே ஓடுவதுதானடா...
குஷ்ட்டரோகிபோல் திட்டு திட்டாய்
குட்டையாகி போனாள்.....
தேக்கிவிட்ட கழிவால்....
காட்டுதனமாய் கற்பழிக்கப்பட்ட
கன்னிபோல் ஆனாள்
ஓடோடி ஊரெங்கும்
பசுமையை நிறைத்து
பசியை தீர்த்து விட்டு போகும்
பொன்னி நதி....

வற்ற வற்ற ஆறுகளை நக்கிவிட்டு
என்ன செய்வதாய் உத்தேசம் ?
கடல் நீரைக் காய்ச்சும் திட்டமோ ?
உங்களின் காட்டுப் பசிக்கு
கடலெல்லாம் ஒரு நூறு ஆண்டில்
காணாமல் போகும் .....

மீண்டும்
ஒரு "நோவா" நிகழ்வால்
பூமி தன்னை
புதுப்பித்துக் கொள்ளட்டும்....

ஆறுகளின் ஈறுகளில்
ஊற்றுக்கண்கள் மீண்டும்
உயிர்க்கொள்ளட்டும்....

பொங்கிவரும் புது வெள்ளம்
சுயநலம் மிக்க மனித இனத்தைக்
கழுவிக் கொண்டுபோய்
கடலில் சேர்க்கட்டும்....

இறைவா.....
மீண்டும் ஆதாம் ஏவாள் வேண்டாம்
பூமி பூமியாகவே இருக்கட்டும் .....

எழுதியவர் : மேரி டயானா (12-Jun-15, 11:00 am)
Tanglish : kadaisik kattil
பார்வை : 126

மேலே