பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி -இதுதான் விதியா

இந்த சிறுகதையை படிக்கத் துவங்கிய உடனேயே, ஒரு மரத்தின் பாத்திரத்தை நாமே ஏற்கும் அளவுக்கு உணர்வுகள் தீட்டப்பட்டிருப்பதே இந்த படைப்பின் முதல் வெற்றி!

ஒரு ஆர்கெஸ்ட்ரா குழுவினரை இயக்கும் இசை வல்லுநர், ஒவ்வொரு வாத்தியமாக ஆரம்பிக்க வைத்து இன்னொன்றோடு சேர வைத்து , பின் அவை மற்றொன்றோடு சேர்ந்து என ஒரு சரியான சந்தர்ப்பத்தில் அனைத்தும் இணைத்து , இசை வெள்ளத்தில் நம்மை மூழ்கடிப்பதை ரசித்திருப்போம்..அவ்வாறே, திரு.அபி அவர்கள், ஒரு சிறுகதை தளத்தை தனக்கேற்ற களமாக்கி, பரமசிவம், பழனியப்பன் என துவங்கி, டீ விற்பவர், சிற்றுண்டி கடை நடத்துபவர் என இன்னும் பிற பாத்திரங்களை வெகு இயல்பாக சேர்த்துக் கொண்டே போய், யதார்த்த வாழ்க்கையை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டு, பின் அந்த வாழ்க்கையின் இடையே வரும் விதியின் விளையாட்டை நேர்த்தியாக சொல்லி சிறுகதை ஒன்றை காவியமாக்கி விடுகிறார். நிச்சயமாக நீண்ட நாட்களுக்குப் பிறகும் , திரு.அபி அவர்கள் எழுதிய இந்த சிறுகதை, மனதில் நீங்காமல் நிற்கும் .

பொதுவாகவே சாலை அகலப்படுத்தும் திட்டங்களில், சில பாரம்பரியமான விஷயங்கள் அழிந்து போவதும், காளான்களென சில புதியவைகள் முளைப்பதும் சகஜமாகிவிட்ட இக்காலத்தில், அழிகின்ற விஷயங்களுக்கு நடுவே தோன்றும் வலிகளை, எத்தனை பேர் யோசிப்பார்கள்..அதற்கு அவகாசம் கூட இருக்கிறதா ..பாதிக்கப் பட்டவர்களைத் தவிர, வேறு யாருக்கும்?..அந்த இடத்தில் திரு.அபி தானும் நின்று, நம்மையும் நிற்க வைத்து விடுகிறார், கலக்கத்தோடு !

மரம், என்றாலும் மனிதன் என்றாலும் மெல்லிய உணர்வுகள் ஒன்றுதான் என்ற நோக்கில் எழுதியிருக்கும் விதம் கூட ரசிக்கும்படியே அமைந்துள்ளது .

மொத்தத்தில் , இக்கதை திரு.அபி அவர்களின் தன்னை சுற்றி நடப்பவற்றினை உற்று நோக்குதல்கள் , உள்வாங்குதல்கள், மற்றும் வெளிபடுத்தும் திறமைகளுக்கு ஒரு சான்றாக (master piece ) அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது..!

ச.கருணாநிதி

(இது எனது சொந்தப் படைப்பு என உறுதி அளிக்கிறேன்)

எழுதியவர் : கருணா (12-Jun-15, 3:29 pm)
பார்வை : 81

மேலே