ஒரு கவிஞனின் வேதனை
கொத்திக்கொண்டிருக்கும் பறவையைவிடக்
கத்திக்கொண்டிருக்கும் பறவையை
யாருக்குத்தான் பிடிக்காது...
பூச்சிகளின் கொடுக்குகளால்
பூவிதழ்கள் தைக்கப்படலாம்
புறக்கணிப்படும் பூக்களும்
முனகல்களை மறைத்துக் கொள்ளலாம்
மணத்தை நிறுத்தவா முடியும்...
மௌனத்தின் அடர்த்தியை
ஒரு கவிஞனின்
வேதனைகள் குறைக்காவிட்டால்
ஒரு பைத்தியக்காரனின்
நகர்வலமா குறைக்கப் போகின்றது?
இரவை நிலவு துரத்தலாம்
நிலவை மீன் துரத்தலாம்
இந் நகரத்தின்
விடையில்லாப் புதிர்களை
யார் துரத்துவது..?
சூரியன்கள் வீழ்ந்துவிடலாம்
நிலவுகள் உதிரலாம்
தனித்துக் கிடக்கும்
ஒற்றைப்புல்லுக்கு
சோடியம் விளக்கல்ல
ஒரு ஈரத்துளி போதும்..
இரவை உடைத்துப்
பிம்பங்களை எதிரொளிக்க....
சொல்லப்படாத கதைகள் அங்கே
சொல்லப்பட்டிருக்கும்
கேட்கக் கூடாத ஒன்றும்
அதைக்
கேட்டுவிட்டிருக்கும்
சிறு வாலை அசைத்தபடியேனும்!!!
******