ஆறாம் அறிவு - கற்குவேல் பா
ஆறாம் அறிவு
~~~~~~~~~~~~~~~~
சரியாக
நேரம் சொல்லும்
சுவர் கடிகாரம் ..
பத்து நிமிடம்
அதிகரித்து வைக்கும்
அப்பா .. !
* * *
நாளை
காக்கைக்கு
படைக்கப்போகும்
அப்பளம் ..
இன்று
காயவைத்ததை
காக்கையிடமிருந்து
காக்கும்
அம்மா .. !
* * *
முற்றம் பெருக்கி
தண்ணீர் தெளித்து
அழகாய்
கோலமிட்டு ..
அள்ளிய குப்பையை
அண்டை வீட்டில்
கச்சிதமாய் கொட்டும்
அக்கா .. !
* * *
அணில் குழந்தை
அழகாய்க்
கொறிக்கும்
நாவல் பழம் ..
அதை விரட்டி
விழுந்த பழத்தின்
தூசித் தட்டி
தின்று மகிழும்
அண்ணன் .. !
* * *
தனக்கு
கொடுத்த
குடுவை
கலவைப் பால் ..
வீதியோரம்
காலிழந்து
நடக்க முடியாத
நாய்க்குட்டிக்கு ஊற்றி
பசி ஆறும்
தம்பி .. !
- கற்குவேல் . பn