காற்றினில் ஏறி

எனக்குத் தெரியும்
என்னைப் போலவே
சுதந்திரமான
இந்தக் காற்றை
எனக்குத் தெரியும்

நான்
கடவுளால் தோன்றியவன்
இந்தக் காற்றோ
கடவுளுக்கும் முன்
தோன்றியது

காற்று தோன்றியபோதே
கவிதையும் தோன்றியது
அது
காற்றின் கவிதை

*
இந்தக் காற்றுதான்
என் பூக்களின்
மணத்தை
பூமியில் பரப்பியது

*
ஒரு ஜூன் மாத மழையில்
யூகலிப்டஸ் மரத்தை சாய்த்ததும்
என் வீட்டை இடித்ததும்
இந்தக் காற்றுதான்
எனக்குத் தெரியும்

*
இந்தக் காற்றின்
சிறகுகளில்
மகரந்தப் பூச்சு எனில்-அதில்
ஒரு துளி மகரந்தம்
என்னுடையது

இந்தக் காற்றின்
சிறகுகளில்
கறை எனில் -அதில்
ஒரு துளி ரத்தம்
யாருடையது?

ஒரு
புலியின் ரத்தமோ
புரட்சியின் ரத்தமோ
கற்பின் ரத்தமோ
கொலையின் ரத்தமோ ?

*
காலங்கள் பூப்பதையும்
வசந்தங்கள் உதிர்வதையும்
பூமியின் இசையையும்
பயங்கர செய்திகளையும்
இந்தக் காற்று தான்
உலகிற்கு சொல்கிறது

*
ஒரு நாள்
இந்தக் காற்றும்
கைது செய்யப்பட்டது

ராபென் தீவின்
தனிமைச் சிறையில்
மண்டேலாவின் மார்பை
வருட சென்றபோது
இந்தக் காற்றும்
கைது செய்யப்பட்டது

ஒரு விடியல்
நிகழ்ந்த பிறகு - இன்று
நீக்ரோவின் நெஞ்சைத்
தடவிக் கொடுத்துவிட்டு
என் மீதும் உன் மீதும்
வீசுகிறது


எனக்குத் தெரியும்
இந்தக் காற்று
என்னைப் போலவே
சுதந்திரமானது .....

*
இந்தக் காற்றில் -ஒரு
தொட்டில் கட்டினேன்
அது
கயிறை அறுத்தது
"தாலாட்டு
அபசுரம்" என்றது

இந்தக் காற்றின்
முதுகில் ஏறினேன்...
உதறித் தள்ளியது
"நான்
அடிமை இல்லை: என்று
உரக்க கத்தியது . (1991)


(எனது "ஒரு வித்தகனும் ஆயிரம் வீணைகளும் " நூலிலிருந்து)

எழுதியவர் : கவித்தாசபாபதி (13-Jun-15, 12:01 pm)
Tanglish : kaatrinil yeri
பார்வை : 98

மேலே