பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வுப் போட்டி - எங்கேயும் எப்போதும்

எங்கேயும் எப்போதும் நடக்கும் பெண்களுக்கான கொடுமை. பெண் போற்றுதலுக்கு உரியவள் பூமி முதல் வானம் வரை, பூமித்தாய் என்றும் வான மங்கை எனவும் வளைத்துக் கட்டிப் பேசினாலும் அற்ப எண்ணங்களுக்கு அடிக்கல் நாட்டி ஆராதித்துவரும் ஆறரிவு உருவத்து ஐந்தறிவிகளின் நடமாட்டத்தைத் தோலுரிக்கும் ஒரு புரட்சிக் குரல் இந்த எங்கேயும் எப்போதும்.

ஒரு இடத்தில் மட்டும் அல்ல உலகில் எல்லா இடத்திலும் என்பதற்கு உதாரணமாக மூன்று நாடுகள். அது ஏன் மூன்று நாடுகள் என்று யோசிக்கும் பொழுது இந்தக் கொடுமைகள் ஒரு மதத்தில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் தான் நடைபெறுகிறது என்ற உண்மையை ஒளித்து வைத்திருப்பது புரிகிறது. மூன்று நாடுகளில் மூன்று மதங்களில் உலகத்தைச் சுருக்கிச் சொல்லும் எழுத்து வித்தை ஆசிரியரின் பெருமை.

காதல் ஒரு இடத்தில் கல்லறைக்குள் புதைக்கப் படுவதையும் வறுமை ஒரு இடத்தில் கண்ணீராய் விலை போவதையும் அந்தரங்கங்கள் ஒரு இடத்தில் களவு போவதையும் முச்சந்தியில் நிறுத்தி, கரு ஒன்று என்று கனமாகவே நிற்கிறது கதை. மூன்று சூழலையும் மூன்று கலாச்சாரத்தோடு சடைக் கால் பின்னியிருப்பது அருமை.

பொருளாதரத்தில் நாளையைப் பற்றி கவலைப் படாத ஒரு பெண், வறுமையில் வாடும் ஒரு பெண், நடுத்தர வாழ்வில் ஒரு பெண் என்று முத்தரப்பிலும் பெண்களுக்கு ஆபத்துத்தான் மிஞ்சுகிறது என்று அங்கேயும் மூன்று நிலைகளைக் கையாண்ட ஆசிரியரின் வித்தை வரவேற்கத் தக்கவொன்று.

காதலைப் புறக்கணிக்கும் சாராவும், தனியாக வெளிநாடு செல்லும் ரிசானாவும், மாலை கவிழ்ந்து இருள் சூழ வெளியே செல்லும் செல்வியும் பார்ப்பவர்களுக்கு பாரதி கண்ட புதுமைப் பெண்களாகத்தான் தெரிவார்கள் ஆனால் அவர்களின் சுதந்திர எல்லை குட்டிச் சுவர்களால் தடுக்கப் பட்டு விடுவது சோகம். இந்தக் குட்டிச் சுவர்களைத் தகர்க்க போவது யாரோ ? என்ற கனமான கேள்வியை சமுதாயத்திற்கு வீசியிருக்கிறார் கதாசிரியர்.

காதலன், கடவுளுக்கு நிகராகத் தன்னைப் பிரகடனப் படுத்திக் கொள்பவன், முதலாளி, வழிப்போக்கன் எனப் பலப் பிரிவுகளாக விளைந்து நிற்கும் இந்த ஆண் வர்க்கத்தில் எவரை நம்புவது பெண் இனம்? என்ற அழகான இன்னுமொரு கேள்வியும் எழுகிறது.

பெண்ணாகப் பிறந்தவளின் நம்பிக்கை புதைக்கப் படுகிறது, பெண்ணாகப் பிறந்தவளின் கடமை விற்கப் படுகிறது, பெண்ணாகப் பிறந்தவளின் தனிமை சிதைக்கப் படுகிறது என சாராவின் காதலிலும், ரிசானாவின் உழைப்பிலும், செல்வியின் பொறுமையிலும் சித்தரித்திருப்பது கதையின் ஆழம்.

"மண்டியிட்டபடி பிரார்த்தனை செய்யத் துவங்கினாள்", "பஷீரின் உள்ளமும் கடந்த சிலதினங்களாக சஞ்சலமடைந்து கொண்டுதானிருந்தது", "புதரை நோக்கி விரட்டியது அவளது வயிற்றின் அவஸ்தை." என்ற வாசகங்கள் கதையை நிறைவேற்றியதோடு நின்றிருந்தால் .... பாதை வேறு. ஆனால் அடுத்தநாள் செய்தித்தாளில் செய்தி வெளியானதாக முடித்த ஒரு திருப்பத்தில் முழுக் கதையும் திரும்பி விடுகிறது.

பெண் தன்னைத் தானும் காத்துக் கொள்ள முடியவில்லை, பாசமான தந்தையாலும் காப்பாற்ற முடியவில்லை, கண்டிப்பான தாயாலும் காப்பாற்ற முடியவில்லை, என்பதனைச் சுட்டிக்காட்டி ஒரு பெண் எல்லோராலும் பாதுகாக்கப் பட வேண்டியவள் என்ற பொறுப்பை உணர்த்துகிறது படைப்பு.

சாரா, ரிசானா, செல்வியின் வாழ்கையை வெறும் செய்திகளாகப் பார்த்துக் கொண்டிருந்தது பொது சனம் என்ற கதையின் முடிவு தன் வீட்டுக் கதவு தாழிட்டிருந்தால் மட்டும் போதும் என்று சுயநலப் பார்வை கொண்ட சமுதாயத்திற்கு ஒரு குத்து.

கருவில் மட்டுமல்லாமல், வரிகளிலும் கனத்தைக் கூட்டியிருப்பது கதாசிரியரின் திறத்தின் உச்சி. "அங்கு நிலவிய கனத்த மௌனத்தைப் போலவே,அவர்களைச் சுற்றி இருளும் கனத்துக் கொண்டே வந்தது", என்று சோகமாகட்டும் "அவர்கள் பேசும் நேரம் அவ்வப்போது அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது." என்ற வேதனையாகட்டும் கனக்கிறது வாசகங்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக சர்ச் வாசலுக்கு சென்ற போதும், அஸர் தொழுகைக்குப் பின்னும், கோவில் வாசலிலும் கிடைக்க வேண்டிய நிம்மதி இங்கே இவர்களுக்குக் கிடைத்ததா? சிந்தனைக்கு விருந்து.


********************************************************************************
"இது என் சொந்த படைப்பே என்பதனை உறுதி செய்கிறேன்"
மீ.மணிகண்டன்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (14-Jun-15, 5:35 pm)
பார்வை : 102

சிறந்த கட்டுரைகள்

மேலே